அம்பிகையின் திருவுருவை நம் சிந்தையில் உயிரோவியமாகத் தீட்டி
அந்த மரகதத் திருமேனியை நம் மனதில் பிரதிஷ்டை செய்யும் அற்புதத்தை படிப்படியாய் நிகழ்த்துகிறார் அபிராமிபட்டர்.
பவளக்கொடி போன்ற திருமேனி. அதில் பழுத்த கனிபோல் அம்பிகையின்
செவ்விதழ்கள்.பனிபடர்ந்த ஒளிமுறுவல் அந்தச் செவ்விதழ்களில் நடமிடுகிறது. திருமுலைகளின் சுமைதாங்காத இடைகளோ சிவபெருமானை வீழ்த்திய வல்லமை கொண்டவை. அவளுடைய திருவடிகளைப் பணிந்தால் தேவர்கள் உலகமே உங்கள்
ஆளுகைக்கு வந்துவிடும் என்கிறார் அபிராமிபட்டர்.
பவளக் கொடியிற் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணைமுலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் ! அமராவதி ஆளுகைக்கே