இராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்திக்க ஒரு நாத்திகர் வந்தார்.
கடவுள் இல்லை என்னும் கருத்தை நிறுவ ஆணித்தரமான
வாதங்களை வைத்தார். அவர் வைத்த வாதங்களை மிகுந்த
கவனமுடன் கேட்ட பரமஹம்சர்,’அடடா! எவ்வளவு அழகாக
வாதிடுகிறீர்கள்! இந்த வாதங்களையெல்லாம் கேட்கிற போது
கடவுள் இல்லை என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்ளத்தான்
எனக்கும் தோன்றுகிறது. ஆனால் நான் என்ன செய்வேன்! கடவுள்
உண்டு என்பது எனக்குத் தெரியுமே! என்ன செய்வேன்!” என்றாராம்.
கடவுள் உண்டு என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தவர்களுக்கு
அதன்பின் யாருக்கும் அதை நிரூபிக்கும் அவசியம் எழுவதில்லை.
“ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு,அந்தகன்பால்
மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு” என்கிறார் அபிராமி பட்டர்.
கவியரசு கண்ணதாசன்,சிறிது காலம் நாத்திகராக இருந்தவர்.
மீண்டும் ஆத்திகரானவர் எந்தக் கடவுளை “இல்லை இல்லை”
என்றாரோ அந்தக் கடவுள் உண்டு உண்டு என்று பின்னர் பாடினார்.
நோயுற்ற வேளையில் சிக்கெனப் பிடிக்கவுன்
நூபுரக் கால்களுண்டு
நொடிக்கின்ற வேளையில் பிடியள்ளிப் போடவுன்
நோகாத கைகளுண்டு
வாய்கெட்ட வேளையில் சுவையான வார்த்தையில்
வழிகாட்ட கீதையுண்டு
வஞ்சத் திறங்கினால் நெஞ்சத் திருந்தென்னை
ஆட்கொள்ளும் பான்மையுண்டு
பாய்கொண்ட பின்னரும் தலைமாட்டிலே நின்று
பணிசெய்யும் தன்மையுண்டு
பகைவந்த வேளையில் சக்கரம் சங்கொடும்
படைகொள்ளும் வீரமுண்டு
நாய்பட்ட பாடுநான் பட்டபின்னால் உனை
நாடினேன் தூயநாதா
நன்றியுள்ள மானிடரை என்றும் மறவாதகுரு
நாயகா கிருஷ்ணகாந்தா’
என்றார் கவியரசர்.
தன் முழுப்பொறுப்பில் நம்மை எடுத்துக் கொள்ள அம்பிகையின்
திருவடிகள் இருக்கின்றன. எமனிடம் இருந்து காக்க அவளுடைய
கடைவிழிகளே போதும்.
இந்த மனநிறைவுடன் அம்பிகையைப் பார்த்து சொல்கிறார்,
“இதற்குமேலும் என் வினைகள் மூண்டால் அது என் குறைதானே
தவிர உன்குறை அல்ல தாயே. மூன்று புரங்களை எரிக்க அம்புதொடுத்த
இறைவனின் பாகத்தில் இருப்பவளே” என்கிறார்.
முப்புரங்களை எரித்த இறைவனின் பாகத்தில் இருக்கும் உனக்கு என்
மும்மலங்களை எரித்து அவை மேலும் மூளாமல் காப்பது என்ன
பெரிய விஷயமா என்னும் தொனியும் இந்தப் பாடலில் உண்டு.
“ஆளுகைக்கு உன்றன் அடித்தாமரைகள் உண்டு,அந்தகன்பால்
மீளுகைக்கு உன்றன் விழியின் கடையுண்டு.மேலிவற்றின்
மூளுகைக்கு என்குறை, நின்குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்புதொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே”