பேதைமனம் போடும் பொய்க்கூத்துகள் பட்டியலில் அடங்காது.
அகப்பேயின் ஆட்டம் அடங்கி அம்ப்பிகையின் திருவடிமேல்
நாட்டம் பிறக்கிற வரையில் அவள் அருகிலும் வராமல்,அகன்றும்
விடாமல் சற்று தள்ளியே நிற்கிறாள். அவள் தள்ளி நிற்பதெல்லாம்
பேதைமை அகன்று அவளுடைய பொன்னடிகள் மேல் அன்பு பிறந்ததும்
அருகில் வந்து அருள்செய்யத்தான்.
திருநுதலில் விழிகொண்ட அந்தத் தேவியை விண்ணவர்கள் யாவரும்
தேடிவந்து பணியக் காத்திருக்கிறார்கள். அவளோ நம் பேதைமை
அகல்வதற்காக சற்றுத் தொலைவில் காத்திருக்கிறாள்.அவளுடைய
திருவடிகளில் அன்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும்
தோன்றிவிடாது. முற்பிறவியில் புண்ணியம் செய்தவர்களுக்கே அந்த
எண்ணம் உரிய காலத்தில் தோன்றும் என்கிறார் அபிராமி பட்டர்.
வாணுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணுமன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே