நமக்காகவே வருவாள்

எளிய ஒர் உயிருக்காக இறைவன் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் அபரிமிதமானவை. விடுதலைக்கு வழிதெரியாமல் ஒர் உயிர் தத்தளிக்கும்போது உரிய சூழலை ஏற்படுத்தி திருவடி தீட்சையும் தந்து ஆன்மிகப் பாதையில் உறுதியுடன் நடையிடச் செய்தால் அதற்கு நாம் எவ்வள்வு புண்ணியம் செய்திருக்க வேண்டும்

அப்போது மலர்ந்த குவளை மலர்கள் போன்ற கண்களையுடைய இறைவியும் சிவந்த நிறமுள்ள அவளின் கணவரும் ஒன்று சேர்ந்து நமக்காக இங்கே வந்த தன் அடியவர்கள் திருக்கூட்டத்துடன் இருக்கச் செய்து நம் தலையின் மேல் தங்கள் திருவடித்தாமரையையும் பதித்தார்கள் என்கிறார்.

அம்பிகையின் நிறம் கறுப்பு என்று நேரடியாக சொல்லமல் அவளுடைய கணவர் சிவந்த நிறமுடையர் என்று சொல்லக் கேட்டால் நமக்கும் சின்னதொரு புன்முறுவல் மலராவல் இறுக்காது.

அவர்கள் எதற்காக வந்தார்கள்? நமக்காகவே வந்தார்கள் என்பதுதான் அவர்களுடைய பெருந்தன்மை. என் நண்பர்களில் ஒருவர் திரு. கோவை ரமேஷ் . இன்று பல தொழில்களுக்கும் அதிபராக சிறந்து விளங்குகிறார். ஆரம்ப காலத்தில் ஏதாவது செய்து முன்னுக்கு வர வேண்டும் என்ற தவிப்பில் வாரியார் சுவாமிகளிடம் வேலைக்குச் சேர்ந்தார். நிகழ்ச்சிகளில் ஆர்மோனியம் வாசிக்கும் பொறுப்பை அவருக்குக் கொடுத்தார் சுவாமிகள் .

சிறிது காலத்திற்குப் பிறகு கோவையில் ஒரு புகழ் பெற்ற மருத்துவமனையில் வரவேற்பாளர் வேலை கிடைத்ததால் சுவாமிகளிடம் விடைபெற்று கோவை வந்து விட்டார் ராமேஷ். சில மாதங்கள் சென்றிருக்கும். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வாரியார். சுவாமிகள் காரில் திரும்பும்போது அந்த மருத்துவமனை அவர் கண்ணில் பட்டிருக்கிறது. “நம்மிடம் இருந்த பையன் வேலை பார்ப்பது இங்கேதான் காரை உள்ளே விடு” என்றார். வாரியார் சுவாமிகள் காரிலிருந்து இறங்குவதைப் பார்த்து தலைமை மருத்துவருக்குத் தகவல் போய் அவர் ஓடோடி வந்தார்.

அதற்குள் ரமேஷை நலம் விசாரித்து ஆசீர்வதித்து திருநீறு பூசிவிட்டு விட்டார் சுவாமிகள். அவ்வளவு பெரிய மனிதருக்கு அந்த இளைஞனைத் தேடிப் போய் பார்க்க வேண்டுமென்று தோன்றியிருக்கிறது.

“ நம் காரணாத்தால் நண்ணி இங்கே வந்து”

என்கிறார் அபிராமி பட்டர்.

“முன்னி உன் அடியாருடன் கூறி” என்றும் அபிராமியம்மைப் பதிகத்தில், “பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்” என்றும் சொல்வதால் அம்பாள் உபாசனையில் சிறந்து விளங்கியவர்களுடன் அபிராமி பட்டருக்கு நெருங்கிய தொடர்பிருந்ததை ஒரோவழி உய்த்துணரலாம்.

மகாராஷ்டிரத்திலிருந்து தமிழகம் வந்து திருக்கடையூருக்கு அருகில் திருவிடைமருதூரில் தங்க மேரு அமைத்து சாக்த வழிபாட்டு நெறியில் பெரும் மறுமலர்ச்சி ஏற்படுத்தியதுடன் சாக்த நெறி சார்ந்த தவறான புரிதல்களையும் அகற்றிய பெருமை பாஸ்கரராயருக்கு உண்டு.

அவர் அபிராமி பட்டரின் சமகாலத்தவர் என்பதால் அவருடன் அபிராமி பட்டர் நெருங்கிப் பழகியிருக்க வேண்டும். அபிராமி பட்டர் குறிப்பிடும், “ பெரிய தொண்டர்” பாஸ்கரராயராகவும் இருக்கக்கூடும்.

புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின்மேல் பத்ம பாதம் பதித்திடவே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *