சிவபெருமானின் செம்பாகத்தில் இருப்பவள் என்று அம்பிகையைச் சொன்னாலும் அம்பிகை சிவபெருமானுக்கு அன்னையாகவும் இருக்கிறாள் என்கிறார் அபிராமி பட்டர்.
தத்துவ அடிப்படையில் சக்திதான் சிவத்தை ஈனும் என்ற சிவஞானசித்தியார் குறித்து ஏற்கெனவே சிந்தித்தோம். காந்தியடிகள் ஒரு நிகழ்ச்சிக்கு தன் மனைவியுடன் சென்றார். வரவேற்புரை நிகழ்த்தியவர் காந்தியடிகள் தன் மனைவியுடன் வந்திருக்கிறார் என்று சொல்வதற்குப் பதிலாக தன் தாயுடன் வந்திருக்கிறார் என்று சொல்லி விட்டார். காந்தியடிகள் பேசும்போது,”வரவேற்புரையாளர் தன்னையும் அறியாமல் ஓர் உண்மையை சொல்லியிருக்கிறார். கஸ்தூரிபா பலநேரங்களில் எனக்கு அன்னையாகவும் இருக்கிறார்”என்றாராம்.
மனித உறவெல்லைகள் தெய்வங்களைப் பொறுத்த வரை ஒரு குறியீடாக உள்ளது சக்தி தத்துவத்தில் இருந்து சிவம் பிறந்தது என்றால் அங்கே சக்தி தாய். இருவரும் சமம் என்றால் அது அர்த்தநாரீசுவர வடிவம். சிவ தத்துவமே மூத்தது என்றால் சக்தி மகள் என்கிறார் திருமூலர். இது ஆராய்ச்சி மனதுக்கு அகப்படாத அனுபவ நிலை.
வாயும் மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவைக் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல் தாரமுமாமே என்பது திருமந்திரம்.
சமீபத்தில் வானமாமலை ஜீயர் சுவாமிகளை தரிசித்து உரையாடிக் கொண்டிருந்தேன். பேச்சு வாக்கில் இயல்பாக ஒன்றைச் சொன்னார்.”வானமாமலை கோயிலிலே இருக்கிற பெருமாள் நமக்கு மாப்பிள்ளை முறை. தாயார் இருக்காளே வரமங்கா, அவ நமக்கு மகள்” தத்துவத்தில் மட்டுமல்ல; பக்தி பாவத்திலும் இவையெல்லாம் சாத்தியம்.
தவவடிவான அம்பிகை அபிராமி சிவபெருமானின் இல்லத்தரசி. அவளே அவருக்கு அன்னையும் ஆனவள். ஆகையால் இவளே அனைவருக்கும் மேம்பட்ட மூல முதல்வி. எனவே வேறு தெய்வம் உண்டென்று தேவை தனக்கில்லை என்கிறார். ஆத்ம சாதனையின் வழியாக ஓரே நெறியைப் பின்பற்றி உய்வதன் அவசியத்தை இந்தப் பாடல் உணர்த்துகிறது.
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன் இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.