எங்கும் இருப்பவள் அவளே!
இருத்தல் என்கிற நிலையைத் தாண்டி வாழுதல் என்ற நிலைக்கு நாம் வரவேண்டுமென்றால் அதற்கு ஒரு மார்கம் வேண்டும். வெறும் இருப்பை, வெறும் பிறப்பை அர்த்தமிக்க, ஆனந்தமிக்க வாழ்வாக மாற்றிக் கொடுப்பவள் அம்பிகை. எனவே அவளுடைய திருவடிகளை வணங்குவது என்ற நியமத்தை மேற்கொண்டதன் மூலமாக நாம் வாழத் தொடங்குகிறோம்.
பள்ளிக்கூடத்தில் ஒரு பிள்ளையை சேர்த்தால் அது வீட்டிற்கு வந்து ஒரு பிரம்பை எடுத்துக்கொண்டு நமக்கெல்லாம் பாடம் நடத்தத் தொடங்கும்.
ஓர் ஆசிரியர் உட்கார்ந்து போதிப்பதையும், அதை மாணவர்கள் உட்கார்ந்து கேட்பதையும் முதன்முதலாகப் பார்த்தால் அந்தக் குழந்தைக்கு அதை முயல வேண்டுமென்று ஆசை. நிறைய குழந்தைகள் பஸ் விளையாட்டு விளையாடி டிக்கெட் கிழித்துக் கொடுக்கும். முதல் நாள்தான் பஸ்ஸில் போய் விட்டு வந்திருக்கும். குழந்தைப் பருவத்திலிருந்தே இது மனித இயல்பு.
தனக்கு தெரிந்ததை இன்னொருவருக்குச் சொல்வதன்மூலமே அவரை அந்த நிலைக்குக் கொண்டு போய் விடலாம். இது அறிவுக்குப் பொருந்தும். அறிவைக் கடந்து நிற்கிற பக்தி நிலைக்கு இது பொருந்தாது.
அகிலாண்டமெங்கும் நிறைந்திருக்ககூடிய அம்பிகையின் அருள்கடாட்சத்தைத் தேடி நம்முடைய முயற்சியால், நம்முடைய பக்தியால் எந்த அளவுக்குப் போகிறோமோ அந்த அளவிற்கு நாமாக உணர்ந்து கொள்ள முடியும். தங்கள் அனுபவத்தைத் தரமுடியாது. குருமார்களாலும், ஞானிகளாலும் முடியும்.
யாராவது வெளியூர் செல்வதென்றால் வழி சொல்லிவிடலாம். ஒரு மலர் மலர்ந்துள்ள இடத்தை வண்டுக்கு யாரும் சொல்வதில்லை. உள்ளுணர்வினாலே அந்த திசைநோக்கி உந்தப்படுகிறது. தேனை அருந்திகிறது. எல்லோரும் வணங்கும் விதமாக திருக்கடவூரிலே அபிராமி எழுந்தருளியிருக்கிறாள். அவளை தரிசித்தபோது நாம் பெற்ற அனுபவத்தை மற்றவர்களுக்குத் நாம் தரமுடியாது. விளக்கிச் சொல்லி அந்த அனுபவத்தை ஏற்படுத்திவிட முடியாது. எனவே எல்லா இடங்களிலும் அம்பிகையைக் காண்பது ஓர் அனுபவம்.
வேலை என்றால் கடல், நிலம் என்றால் கடல். ஏழு கடலாலும் அவளை எட்ட முடியவில்லை. ஏழு உலகங்களில் இருப்பவர்கள் தேடிப் பார்த்தாலும் அம்பிகை தென்படவில்லை. எட்டு கிரகங்களில் பார்த்தாலும் அவளைத் தனியாக காண முடியவில்லை.
எதற்குமே அவள் எட்டவில்லை. இரவிலோ நிலா இருக்கிறது. பகலிலே சூரியன் இருக்கிறது. இரண்டுக்கும் நடுவிலே அம்பிகை இருக்கிறாள். அதிகாலை நேரம் 5.45 மணியிலிருந்து 6.15 மணி வரை, மதியம் 11.45மணி முதல் 12.15 மற்றும் மாலை 5.45 முதல் 6.15 இரவு 11.45 முதல் 12.15 இவையெல்லாம் சந்தியா காலங்கள். இந்த உலகத்தை எப்போதுமே இரண்டு வெளிச்சங்கள் சூழ்ந்து கொண்டு இருக்கின்றன. ஒன்று சூரிய வெளிச்சம் இல்லையென்றால் நிலா வெளிச்சம். இந்த இரண்டு வெளிச்சங்களுக்கும் இடைப்பட்ட காலம் சந்தியா காலம். அந்த சந்தியா காலத்திலே தோன்றக் கூடியவள் அம்பிகை.
மாணிக்கவாசக சுவாமிகள் சொல்கிறார். சோதியனே! துன்னிருளே! தோன்றாப் பெருமையனே! அவன் சோதியனாக இருக்கிறாள். இருளாகவும் இருக்கிறான். தோன்ற பெருமையுள்ளவனாக இருக்கிறான். ராத்திரி என்பது சமஸ்கிருதச் சொல், திரி என்றால் சமஸ்கிருத்தில் அத்திரி என்றால் மூன்று அம்சங்கள் அற்ற நிலை. இரவோடு சம்பந்தப்பட்ட மூன்று விஷயங்கள் கனவு, விழிப்பு, உறக்கம் இது சராசரியாக அனைத்து மனிதர்களுக்கும் வருவது.
கனவு, விழிப்பு, உறக்கம் மூன்று நிலை இந்த மூன்றையும் கடந்து ஒருவன் போகிறான் என்றால் அது சமாதி நிலை. இரவு என்பதே இந்த சமாதி நிலை நோக்கி மனிதனைத் தள்ளுவதற்காகத்தான். அதனால்தான் ராத்திரி தேவியை வர்ணிக்கிறபோது பாகவதம் அவள் அக்கினி தெரிந்த ராத்திரி இருட்டாக இருக்கிறது. ஆனால் பாகவதம் அக்னி வண்ணம் என்று சொல்கிறது. அதற்கு என்ன காரணம்? கனவு, விழிப்பு, உறக்கம் மூன்றையும் கடந்து ஒருவன் தனக்குள்ளேயே இருளில் அமிழ்வானேயானால் உள்ளே ஞானமாகிய, அக்னியாகிய வெளிச்சம் தோன்றும்.
ர என்பது அக்னிக்குரிய பீஐமந்திரம். அத்திரி என்பது இந்த மூன்றைக் கடப்பது. இருள்மயமாக இரவு இருந்தால் கூட அதில் வெளிச்சம் இருக்கிறது. இரவுக்கு பிரம்ம சக்தி என்று பெயர். பகலில் உபாசனை செய்பவர்களைவிட இரவில் உபாசனை செய்பவர்களுக்கு சக்திகள் அதிகம் கை கூடுகின்றன. ஆனால் அது இல்லறத்தாருக்கு உரிய நேரம் அல்ல என்பதனாலே ரிஷிகள், முனிவர்கள் அந்த நேரத்தில் உபாசனையில் ஈடுபடுகிறார்கள்.
அம்பிகை எங்கே இருக்கிறாள்? நிலா வெளிச்சத்திலே இருக்கிறாளா? இருக்கிறாள். சூரிய வெளிச்சத்திலே இருக்கிறாளா? இருக்கிறாள். இந்த இரண்டிலும் இல்லாத சந்தியா காலத்தில் இருக்கிறாளா? இருக்கிறாள். அதையும் தாண்டி பேரிருளின்போது தோன்றுகிற ஞானமாகிய வெளிச்சத்திலே இருக்கிறாள். இவளைத்தான் ஏழு நிலம், ஏழு கடல், எட்டு சிகரங்கள் தேடுகின்றன.
எல்லாமே அவனைத் தேடினாலும்கூட எல்லா இடங்களிலும் அந்தர்யாமியாக அவள் நீக்கமற நிறைந்திருக்கிறாள்.
வாழும் படியொன்று கண்டுகொண்டேன்மனத் தேயொருவர்
வீழும் படியன்று விள்ளும்படியன்று வேலைநிலம்
ஏழும் பருவரை எட்டும்எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவேகிடந்து சுடர்கின்றதே.