திருவடி வைக்க இடம் கொடுங்கள்…
அம்பிகை யார் தெரியுமா? ஒளி வீசக் கூடிய நிலாவை தன்னுடைய சடை முடியில் அணிந்திருக்கிற, பவளக்குன்று போல் தோன்றுகிற சிவபெருமானின் திருமேனியிலே படருகின்ற பச்சைக்கொடி, மணம் பொருந்திய கொடி.
அம்பிகையினுடைய திருமேனியிலே குங்கும வாசனை வருகிறது என்று முதல் பாடலில் சொன்னார். அந்தக் குங்குமத்தின் நறுமணம் கமழக்கூடிய பசுங்கொடி போல் அம்பிகை இருக்கிறாள்.
அந்த அம்பிகையை மனதில் பதித்துக் கொள் என்கிறார் பட்டர். மனிதனுடைய இயல்பு அவனுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் பக்தி வரும். அதுகூட தவறில்லை.
ஏனென்றால் பிரச்சினைகள் எல்லாம் தன்னை நினைப்பூட்டுவதற்காக கடவுள் அனுப்புகிற நினைவூட்டல் கடிதங்கள். நான் ஒருவன் இருக்கிறேன் என்று ஞாபகப்படுத்திகிறார்.
பிரச்சினை வருகிறதென்று கடவுள் முன் அமர்ந்தால் அந்தப் பிரச்சினையையே நினைத்துக் கொண்டிருப்போம்.
கடவுளைக் கும்பிடப் போனவர்கள் பிரச்சினையைக் கும்பிடுகிறார்கள். இது வெறும் நம்பிக்கை சம்பந்தப்பட்டதல்ல.
நீங்கள் ஒரு தெய்வ சந்நிதானத்திலோ ஒரு மகானுடைய முன்னிலையிலோ உட்கார்கிறபோது பலம் பொருந்திய அதிர்வுகள் உங்களை வந்து சேரும்.
அந்த நேரத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது உங்களுக்குக் கிடைக்கும். அப்போது நீங்கள் பிரச்சினையையே நினைத்துக்கொண்டிருந்தால் உங்களுக்குப் பிரச்சினைகள்தான் கிடைக்கும்.
தெய்வ வழிபாட்டிலே ஈடுபடுகிறபோது மனதில் துளிகூட சலனமோ துயரமோ இருக்கக்கூடாது. அது எப்படி முடியும்? பிரச்சினைக்காகத்தானே கடவுளிடம் போகிறோம்.
ஒரு விநாடி நேரமாவது அந்தப் பிரச்சனை மனதில் வராதா என்று கேட்டால் அதற்கு அபிராமி பட்டர் பிரச்சினை வந்தால் பரவாயில்லை. ஒரு விநாடி நேரமாவது அந்தப் பிரச்சினையை மறந்திரு என்கிறார்.
அரைமணி நேரம் வழிபட்டால் அந்த அரை மணி நேரமும் பிரச்சினையை மறந்திருக்கச் சொல்லவில்லை. ஒரு விநாடி நேரமாவது பிரச்சினையை மறந்துவிட்டு திருவடிகளை நினைத்தால் அந்தத் திருவடிகள் உங்கள் மனதிற்குள் வருவதற்கு இடத்தைக் கொடுத்தால் அந்தத் திருவடி உள்ளே வந்து பிரச்சினையை வதைத்து விடும்.
மனம் நிறைய பிரச்சினையை அத்தனை பேரும் ஓர் அரை நிமிஷப் பொழுதாவது இறைவனை நினைத்து இரு என்கிறார்கள்.
சரண கமலாலயத்தை அரை நிமிட நேரமட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத
ஐடகசட மூட மட்டி
பலவினையிலே செனித்த தமியன்
மிடியால் மயக்க முறுவேனோ
என்று அருணகிரிநாத சுவாமிகள் பாடுகிறார்.
‘மாத்திரை போதும் மனதில் வையாதோர்’
என்று பட்டர் பின்னால் சொல்கிறார்.
ஒரு குழந்தை உடைந்துபோன பொம்மை ஒன்றை தனது அப்பாவிடம் கொடுத்தது. “அப்பா இதைப் பொருத்திக் கொடுங்கள்” அவருக்கு அத எப்படி பொருத்துவது என்பது தெரியும். அவர் சிறிய வயதில் எவ்வளவு பொம்மைகளை உடைத்திருப்பார். அந்த அனுபவத்தில் அந்த பொம்மைகளை உடைத்திருப்பார். அந்த அனுபவத்தில் அந்த பொம்மையை எடுத்து சரியான இடத்தில் பொருத்துவதற்கு முயன்றார். “ஐயோ இப்படி இல்லப்பா. இப்படிச் செய்தால் இந்தப் பக்கமும் உடைந்து விடம்” என்று பொம்மையை பறிக்கும் குழந்தை. “ஐயய்யோ இப்படிப் பண்ணவே கூடாது. உனக்கு தெரியவே தெரியாது” என்று பொம்மையை பிடுங்கிக்கொண்டு சென்றுவிடும் குழந்தை.
அந்தக் குழந்தை மட்டும் அப்படிப் பண்ணவில்லை. கடவுளிடத்தில் நாமும் அப்படித்தான் இருக்கிறோம். பிரச்சினையை தீர்த்துக்கொடு என்றால் தீர்க்கப்போகிறார். நீ இந்த விதமாகத் தீர்த்துக்கொடு என்று கடவுளுக்கு சொல்லிக் கொடுக்கிறோம்.
நாம் நினைப்பது தீர்வாக இருக்கவேண்டுமென்ற அவசியமே இல்லை. அது பெரிய தொந்தரவாகக்கூட இருக்கலாம்.
கடவுளின் திருவடியை மனதில் பதித்தால் சிக்கல் தீர்வதோடு மீண்டும் குருதியும் நிணமும் தோய்ந்த உடலெடுத்து வராத வண்ணம் பிறவாமையும் முக்தியும் சித்திக்கும்.
குரம்பை என்றால் உடம்பு. இந்த உடலுக்க அங்க வஸ்திரம் போட்டு, வைர மோதிரங்கள் போட்டு அனைத்தும் செய்கிறோம். உள்ளே சிறுகுடலும். ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டிருக்கின்றது. கொழுப்பு அதிகமாகவே இருக்கிறது. ரத்தம் இருக்கிறது.
எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் உள்ளே என்ன இருக்கிறதென்பது தெரிந்துவிடும். பல பேர் புகைப் படத்தை அலங்காரம் செய்து வைக்கிறார்களே, எக்ஸ்ரேயை வீட்டில் மாட்டி வைக்கிறார்களா? உள்ளே பார்த்தால் நம் உடல்கூட அருவருக்கத்தக்கதாக, அஞ்சத் தக்கதாக கொழுப்பும் ரத்தமும் நிரம்பியதாக இருக்கிறது. இந்த உடம்பின்மேல் வைத்த இச்சையினாலே உலக வாழ்க்கையில் ஈடுபடுகிற மனிதர்கள் இமைப்பொழுது அம்பிகையினுடைய திருவடிகளை சிந்திக்கின்ற நோக்கம் அமையப்பெற்றால் அவர்கள் மறுபடியும் இந்தப் பிறவிக்குள் வரமாட்டார்கள் என்பது அபிராமிபட்டருடைய அருள்வாக்கு.
சுடரும் கலைமதி துன்றும்சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்திமைப்போதிருப்பார்பின்னும் எய்துவாரோ?
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.