இசை வடிவாய் நின்ற நாயகி
ஒரு பெரிய மருத்துவ உண்மையை அபிராமி பட்டர் இந்தப் பாடலிலே சொல்கிறார். தந்தையின் உடலில் இரண்டு மாதம் ஒரு துளியாக இருக்கக்கூடிய உயிர் சக்தி தாயினுடைய கருவறைக்குள் போகிறது. அது தாது சக்தி. அதற்குப்பிறகு உடல் உருவாகிறது. உடம்பு உருவாகி குறிப்பிட்ட சில வாரங்களுக்கு பிறகு உயிர் அதற்குரிய இடத்திலே வந்து சேர்கிறது. அந்த உயிரைக் கொண்டுவந்து அந்த உடலிலே பொருத்துகிற அற்புதத்தைச் செய்கிறவள் பராசக்தி.
நாம் ஒரு வீடு மாற்றிப் போகிறோம் என்றால் நாம் முதலில் போவதில்லை. பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்க் கூப்பிட்டு நமது பழைய வீட்டில் இருக்கக்கூடிய தட்டுமுட்டுச் சாமான்கள், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் எல்லாவற்றையும் முதலில் அனுப்பிவிட்டு அதன்பிறகு நாம் அங்கே போய் தட்டுமுட்டுச் சாமான்கள் என்பது உடல். ஒரு தாயின் கருவறைக்குள் முதலில் உடல் உருவாகிறது. பின்னர் உயிர் போய் அந்த உடலுக்குள் குடியேறுகிறது.
காலி செய்வதற்கு வீட்டுக்காரர் ஒரு தேதியைச் சொல்லிவிடுகிறார். ஒரே ஒரு வித்தியாசம் எமதர்மன் சொல்லமாட்டார். இந்த வீட்டை எப்போது காலி செய்ய வேண்டுமென்பதை அவர் சொல்ல மாட்டார். ஆனால் ஒருதேதி வைத்திருப்பார். அந்த நாள் நெருங்க நெருங்க மனத்திற்குள் சலனங்கள் வரும், துயரங்கள் வரும், ஆயிரம் போராட்டங்கள் மனதிற்குள் உருவாகிக் கொண்டே இருக்கும்.
ஒரு தாயினுடைய கருவறையில் உள்ள உடலில் சென்று குடியேறியதிலிருந்து மரணத்தை நோக்கி நடக்கத் தொடங்கி விடுகிறது. அதுதான் கூற்று இட்ட வரம்பு. அது நெருங்க நெருங்க மனம் பயத்தில் மருகுகிறது.
இவருக்கு மூச்சு இரைக்கிறது. வெளியில் அந்த சத்தம் கேட்கிறது. அவர் காதுக்கு ஏதோ எருமை மாடு வருவது போல் சத்தம் கேட்கிறது. இறந்துபோன பழைய உறவினர்கள் எல்லாம் வரிசையாக வந்து ஏதோ கூட்டணிக்கு அழைப்பதுபோல் கனவு வருகிறது. நிறையப் பேருக்கு கடைசிக் காலத்தில் வருகிற கனவு அதுதான். பல பேர் மறைவுக்கு முன்னால் சொல்கிற வார்த்தைகள் சின்ன வயதில் இறந்துபோன யாரையாவது சொல்லி அவர்கள் வந்திருக்கிறார்கள் பார் என்று சொல்வார்கள். தேதி நெருங்குவதற்கு அதெல்லாம் அடையாளம். அந்த நேரத்தில் திடீரென அம்பிகையின் கை வளையல் சத்தம் கேட்கிறது. 60000 அரிவையர் சூழ வருகிறாள். அரிவையர்களுக்குத் தளபதி அரம்பை. அரம்பை முதலாகிய அரம்பையர்கள் உடன் வருகிறார்கள்.
தன்னுடைய அடியவனுக்கு மரணம் நெருங்குகிறது. எமதர்மன் எடுத்துக்கொண்டு போய் இந்த உயிரை எடுத்து வேறு ஓர் கூட்டுக்குள் போடுகிற நேரம் வந்து விட்டதென்றால் கலகலவென வளையல் சத்தம் ஒலிக்க ஓடி வருகிறாள் அம்பிகை. அஞ்சேல் என்று கைநீட்டிக்கொண்டு வருவதால் வளையல் ஒலிக்கிறது. அவள் கையை உயர்த்துவதனாலே வளையல் ஒலிக்கிறது.
முதலில் கேட்பது அவளுடைய வளையல் ஒலி, எமனுடைய கைகளில் இந்த உயிர் சிக்கிவிடுமோ என்ற தவிப்பு இருக்கிற போது அஞ்சேல் என்னும் வார்த்தை எப்படி விழுகிறது? உலகிலேயே இனிய சங்கீதமாக அம்பாள் நம்மிடம் வந்து நான் இருக்கிறேன். பயப்படாதே என்னும் வார்த்தையாக விழுகிறது. அதற்கு நிகரான சங்கீதத்தை உலகில் வேறு எந்த இசைக்கருவியும் உருவாக்கவில்லை. எந்த இசைக்கலைஞர்களும் உருவாக்கவில்லை “நரம்பை அடுத்த இசை வடிவான நாயகி” என்கிறார்.
இசைக்கருவிகள் மூன்று வகை, புல்லாங்குழல், நாதஸ்வரம், போன்ற துளைக்கருவிகள், மத்தளம், மிருதங்கம் போன்ற தோல் கருவிகள், வீணை, வயலின், மேண்டலின் போன்ற நரம்புக் கருவிகள், இருப்பதிலேயே மிக இனிமையான இசைக் கருவிகள் நரம்புக் கருவிகள்.
தோல் நரம்பு துளைகள் கொண்ட நம் உடலே ஓர் இசைக் கருவிதான்.
தோல், நரம்பு, துளைகள் கொண்ட நம்முடைய வாழ்க்கையின் நோக்கம், அவளுடைய பெருமைகளைப் பரப்புகிற இசைக்கருவியாக இருப்பதுதான் என்பது இந்தப் பாடலின் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.
குரம்பை அடுத்துக் குடிபுக்கஆவிவெங் கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்(து)
அரம்பை அடுத்த அரிவையர்சூழவந்(து) அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே.