இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை
தங்கள் கோட்டைக்கான காவலே நிலையான காவல் என்று நினைத்து அருளாகிய காவலை மறந்தன. அசுரர்கள் மேல் சினந்தார் சிவ பெருமான். அவர் சிரித்ததுமே முப்புரங்கள் எரிந்தன. அவரும் திருமாலும் சரணடைந்த திருவடிகளுக்கு உரியவளாகிய பராசக்தியை சரணடைந்தால் இந்த உலகத்தில் மரணம் பிறவி இரண்டுமே கிடையாது என்கிறார் அபிராமி பட்டர்.
பிறப்பு இறப்பு என்பார்கள் அதை தமக்கு சரியான வரிசையில் சொன்னவர் அபிராமி பட்டர்தான். மரணம் பிறவி என்கிறார். யாருக்குப் பிறவி உண்டு. மரணம் உள்ளவர்களுக்குப் பிறவி உண்டு. மரணத்திற்கும் மோட்சத்திற்கும் என்ன வித்தியாசம்? எமனுடைய காலக்கணக்கின் படி ஓர் உயிர் பிரிந்தால் அதற்கு மரணம் என்று பெயர். செய்த தவத்தின் விளைவாக தன்னுடைய முடிவை தானே நிர்ணயித்தால் அதற்கு மோட்சம் என்று பெயர்.
மீண்டும் இந்த உலகிலே யார் பிறக்கிறார்களோ அவர்களுக்கு மரணம் கிட்டும். மறு பிறவி இல்லாமை மோட்சம். மரணம் என்று ஒன்று வந்தால் பிறவி நிச்சயம். பாவம் செய்வதர்கள்தான் பிறப்பார்களா என்றால் புண்ணியம் செய்தவர்களும் பிறப்பார்கள். அவர்கள் செய்த நல்வினைகளுக்கேற்ப பிறவி வரும்.
நல்வினை, தீவினை இரண்டும் உயிரை பற்றாத அளவிற்கு பிரார்த்தனையால், தியானத்தால் தன் உயிரை யார் தள்ளிக் கொள்கிறார்களோ அவர்களுக்கு மரணம், பிறவி இரண்டும் கிடையாது. அம்பிகையினுடைய அடியவர்களுக்கு இந்த மும்மல நீக்கம் இயல்பாகவே நடக்கிறது.
அரணம் பொருளென்று அருளொன்றில்லாத அசுரர் தங்கள்
முரணன்று அழியமுனிந்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் என நின்ற நாயகி தன்னடியார்
மரணம் பிறவி இரண்டும் யெய்தார் இந்த வையகத்தே.