ஓர் ஆசிரமத்தின் பீடாதிபதியுடன் மருதமலை திருக்குடமுழுக்கின்போது பேசிக்கொண்டிருந்தேன். உங்களுக்கு திருக்கடையூர் தானே என்று கேட்டவர், “இன்று நான் ஒரு பீடாதிபதியாக இருக்கிறேனென்றால் அதற்கு அந்தாதியில் இருக்கக்கூடிய பாடல் காரணம்” என்றார்.
அந்தப்பாடல் இந்தப்பாடல்தான்.
வையம் துரகம் மதகரிமாமகு டம்சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலைஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனை யாள்அடித்தாமரைக்(கு) அன்புமுன்பு
செய்யும் தவம்உடை யார்க்குளவாகிய சின்னங்களே.
ஒருவர் இந்தப் பிறவியில் செல்வவளம் மிகுந்தவராக இருந்தால் இந்தப் பிறவியிலோ கடந்த பிறவியிலோ அபிராமி மீது பக்தி செலுத்தியவராக இருந்திருக்க வேண்டுமென்று சொல்கிறார் அபிராமிபட்டர்.
அதற்கான அடையாளங்கள் அவர்களிடம் காணப்படுமாம். என்ன அடையாளங்கள்? வையம். பூமியை ஆள்பவர்களாக இருப்பார்கள்.
இருபத்தோராம் நூற்றாண்டின் பாணியில் சொன்னால் அவர்களுக்கு நிறைய நிலம் சொந்தமாக இருக்கும். மற்றவர்களும் அவர்கள் நிலங்களை அபகரிக்க முயல மாட்டார்கள்.
துரகம் மதகரி என்பது குதிரையையும் யானையையும் குறிக்கும். அதற்காக யானை வீட்டுக்கு வந்து நின்றால் என்னாவது? இன்று அலுவலகம் சென்றுவர சிறிய காரையும், குடும்பத்துடன் திருமணங்களுக்கோ விழாக்களுக்கோ செல்ல பெரிய காரையும் செல்வந்தர்கள் வைத்திருப்பார்கள். இன்றைய கணக்கில் இவைதான் துரகம் மதகரி.
மாமகுடம் என்பது இன்றைய நிலையில் உயர்ந்த பதவிகளையும் பொறுப்புகளையும் குறிக்கும். சிவிகை என்பது பூமிக்கு மேலே பயணம் செய்யக்கூடிய வாகனம். இன்றைய கணக்கில் பார்த்தால் அடிக்கடி விமானத்தில் பறக்கும் விதமாய் வாழ்க்கை இருக்கும்.
பெய்யும் கனகம் என்கிறார் அபிராமி பட்டர். உங்களுக்கு வங்கியில் எவ்வளவோ வைப்பு நிதி இருக்கலாம். ஆனால் அவசரத்துக்கு எடுப்பது சிரமம். லிக்விட் கேஷ் என்பதுதான் பெய்யும் கனகம். கல்லாவில் பணம் கொட்டிக் கொண்டேஇருக்கும்.
பெருவிலை ஆரம் என்பது கழுத்தில் விழுகிற பதக்கங்களையும் விருதுகளையும் குறிக்கும். இவையெல்லாம்தான் அந்த அடையாளங்கள்.
“இதற்குப்பின்னால் அந்தப்பீடாதிபதி சொன்னதுதான் முக்கியமானது. எளிய நிலையில் இருந்த நான் மனதில் இந்தப்பாடலை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டேயிருந்தேன். உயர்ந்த பீடத்தை இன்று அலங்கரிக்கிறேன்” என்றார். மேலை நாடுகளில் இதனை ஆட்டோ சஐஷன் என்கிறார்கள்.
இன்று பெரும்பாலானவர்கள் காலை வேளைகளில் நடைப்பயிற்சி செய்வதுண்டு. அந்த நேரங்களில் நான்கைந்து நண்பர்களுடன் உரக்கப் பேசிக்கொண்டு ஆரவாரமாகச் செல்லாமல் மனதுக்குள் இதுபோன்ற பாடல்களை விடாமல் சொல்லிக்கொண்டே சென்றால் ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம் ஆன்மீகத்துக்கு ஆன்மீகம்.