இதயத்தில் எழுதிப்பார்
எது தியானமென்று அபிராமி பட்டரைக் கேட்டால் அவர் நான் ஒரு தோற்றத்தை வரிக்கிறேன். அதை நீ மனதில் பதித்துகொள் என்கிறார். “இந்தத் தோற்றம் கோவில் கருவறையில் இருக்கிறது. அந்த அம்பிகைக்கு நல்ல சிகப்புப்பட்டு சார்த்தியிருக்கிறார்கள். அவளுடைய தன பாரங்களுக்கு நடுவில் பெரிய முத்து மாலையை அவள் அணிந்திருக்கிறாள். கருகருவென்று அலை போன்ற அவளுடைய கூந்தல், மூன்று கண்கள், இந்தத் தோற்றத்தை நீ மனதில் வைத்துக்கொண்டு ஓர் ஓரமாக அபிராமி அபிராமி என்று உட்கார்ந்திருந்தால் இதைவிடப் பெரிய தவம் உலகத்திலேயே எதுவும் கிடையாது” என்றார்.
கட்டிய செய்ய பட்டு அல்ல. திருக் கடையூரில் அர்ச்சகர் சார்த்திய செய்ய பட்டு. நீங்கள் உபாசிக்க வேண்டிய தெய்வம் திருக் கடவூரிலே எழுந்தருளியிருக்கிற அபிராமி. அவளாகப் புடவை உடுத்திக்கொண்டு வந்தாள் என்று சொல்லவில்லை. இவர் கோவிலில் அர்ச்சகராக இருந்தவர். எப்படி ராமகிருஷ்ண பரமஹம்சர் கரிளிகோவிலில் பூசாரியாக இருந்தாரோ அதுபோல் திருக்கடவூர் கோவிலில் அபிராமி பட்டர். அர்ச்சகராக இருந்தவர். இவரே தன்னுடைய கைகளினால் அம்பிகையின் திருமேனிக்கு பட்டு சார்த்தியிருக்கிறார். அது சிவந்த பட்டாக இருந்திருக்கிறது. அந்த அனுபவத்தில் சொல்கிறார், சாத்திய செய்ய பட்டு ஒன்று.
அடிக்கடி முத்து மாலை சொல்லப்படுகிறது. கடலில் கிடைக்ககூடிய முத்து, முக்திக்கு அடையாளம். கடலில் இரண்டு விஷயங்கள் கிடைக்கும் பவளம், முத்து. பவளம் என்பது சிவப்பெருமானின் திருமேனியை ஞாபகப்படுத்தும், முத்து அவர் தருகிற முக்தியை ஞாபகப்படுத்தும், அம்பிகையின் திருவுருவை தியானத்திற்கு உபதேசிக்கும் தீட்சைப் பாடல் இது.
சின்னஞ் சிறிய மருங்கினில்சாத்திய செய்யபட்டும்
பென்னம் பெரிய முலையும்முத்தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங் கரிய குழலும்கண்மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந் தனியிருப் பார்க்கிறதுபோலும் தவமில்லையே.