உலகத்திலேயே ரொம்பக் கொடுமை என்ன வென்றால் தனக்கு ஒருவன் உதவமாட்டான் என்று தெரிந்தும் முயன்று பார்ப்போமே என்று போய் உதவி கேட்பதுதான் பெரிய கொடுமை. தான் வறுமை நிலையில் இருப்பதை வாய்திறந்து கேட்பது கொடுமை. பிச்சைக்காரனுக்குக்கூட வீட்டிலிருக்கும் பழையதைப் போட்டு விடுவார்கள். கடன்காரனுக்கு நாளைக்கு வா என்று சொல்லுவார்கள். கடன் கேட்டு வருபவனக்கும், பிச்சை கேட்டு வருபவனுக்கும் அதுதான் வித்தியாசம்.
அந்தக் காலத்தில் நிறையப் புலவர்களுக்கு இது போல்போய் பாட்டுப் பாடுவதுதான் வேலை. வீடு வீடாகப் போய் ஒரு பெரிய செல்வந்தரைப் பார்த்துப் பாடுவது. ஒருவர் புரவலர் வீட்டிற்குப் போனார். கல்விச் சமுத்திரம், கமலாலயம் என்று ஆரம்பித்தார் பாடலை, உடனே ஒரு வேலையாள் ஓடிவந்தார், பரவாயில்லை, உள்ளே அழைத்து பணம் தரப்போகிறார்கள் என்று நினைத்தார் புலவர். வேலைக்காரன் வந்து கையிலிருந்த ஒரு ரூபாயைக் கொடுத்து, “சத்தம் போடக்கூடாது. அப்படியே போ என்று ஐயா சொல்லச் சொன்னார்” என்று கூறினான். அவர் எழுதிவந்த பாட்டெல்லாம் அங்கேயே தடைபட்டு நின்றுவிட்டது என்று ரசிகமணி டி.கே.சி ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
பலமுறை நடக்க விடுவார்கள், அதுதான் அவமானப்படுவது. அடடே சொன்னேன் பிரதர். மறந்துட்டேன் நாளைக்கு வாங்க. பார்த்துடலாம். அடுத்தநாள், அவசரமாக ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறேன். நாளைக்கு வாருங்கள் என்பார்கள். நம் சம காலக் கவிஞர், சேஷாசலம் ஒரு வெண்பாவில் இதைச் சொன்னார்.
ஞாயிறு திங்கள் செவ்வாய் நான்கேட்டேன் கைமாத்து
போய்யா புதன்வியாழன் பார்ப்போம்என்றான் – நாயலைச்சல்
வெள்ளி சனியும் போச்சே கடனாளி வாழ்வில்
உள்ள சனி என்று போகும்?
பக்தியோடு இருக்க வேண்டும், பொருள் வளத்தோடு இருக்க வேண்டும். சதாசர்வ காலமும் என்னுடைய பெருமைகளெல்லாம் அவள் போட்ட பிச்சை என்கிற உணர்வு அடிமனதிலே இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்களுக்கு வறுமையைச் சொல்லி இன்னொருவரிடத்திலே கையேந்தி நிறகக்கூடிய நிலைமை வரவே வராது.
கொடுக்கும் மனமில்லாத ஒருவரிடம் சென்று வறுமை நிலையைச் சொல்லி அவமானப்பட்டாமல் இருக்க வேண்டுமென்றால் ஒன்றைச் செய்யுங்கள்.
சிலர் பெரிய படிப்பு படித்திருப்பார்கள். அந்தப் படிப்பே அவர்களைத் தவம் செய்ய விடாது. இறை சிந்தனைகளைப் பயிலவிடாது. தவம் பயிலாமையையே பெரிய படிப்பாகப் படித்தவர்களிடம், அபிராமியின் திருவடிகள் ஒருபோதும் செல்லா. அந்தத் திருவடிகளையே சரணமென்று சேருங்கள் என்றார்.
இல்லாமை சொல்லி ஒருவர்தம் பால்சென்(று) இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவி ரேல்நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்றகயவர்தம் பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.