அவளை அறிந்த இருவர்
சக்தி தத்துவம் முதலில் எல்லா சக்திகளின் விஸ்தீரணங்களையும் தனக்குள்ளே அடக்கிக் கொண்டு ஒரு பெரும் அரும்பாக இருந்தது. அது மடல் விரிந்தபோது எப்படி அரும்பு விரிந்த மாத்திரத்திலே வாசனை எல்லாப் பக்கமும் பரவுகிறதோ அதுபோல் இந்தப் பிரபஞ்சம் என்கிற அற்புதம் நிகழ்ந்தது. தனக்குள்ளே அடக்கி வைத்திருந்த முழுப் பிரபஞ்சத்தை தன் மலர்ச்சியினாலே அம்பிகை வெளிப்படுத்துகிறாள்.
ஒரு கருவிற்குள் குழந்தை இருக்கிறது. நீங்கள் ஸ்கேன் செய்து பார்த்தால் ஓர் உருவம் மாதிரி தெரிகிறது. ஏதும் குறையிருக்கிறதா என்று நீங்கள்பார்க்க முடியும். அதற்கு சுருட்டை முடியா, அதன் கண்கள் எப்படியிருக்கும், நாசி எப்படியிருக்கும், இதழ்கள் என்ன நிறத்தில் இருக்கும் என்பதெல்லாம் குழந்தை பிறந்து கைகளில் ஏந்துகிறபோது தெரிகிறது.
இந்தப் பிரபஞ்சம் என்னும் குழந்தையை தன் கருவிலே சுமந்தவள் பராசக்தி. அந்தக் குழந்தை வெளிப்பட்ட பிறகு அதனுடைய அற்புதம் தாயின் தன்னிறைவில் தெரிகிறது. அதனால்தான் தாயைப் போல் பிள்ளை என்று சொன்னார்கள். இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே சக்தியினுடைய வெளிப்பாடு. அவளுடைய அம்சங்கள் தான் எல்லாம்.
ஓர் அரும்பு மலர்வது போல், ஒரு குழந்தையை அன்னை பெற்றெடுப்பதுபோல் இந்த பிரபஞ்சத்தைப் பெற்றெடுத்தவள் பராசக்தி. ஒரு பூ விரித்தால் அதில் எவ்வளவு விஷயங்கள் நடக்கிறது. மூடியிருக்கிறவரை அது வெறும் அரும்புதான். மலர்ந்துவிட்டால் தொட்டுப் பார்ப்பதற்கு மென்மையாக இருக்கிறது. வண்டுகளுக்கு தேன் தருகிறது. காற்றின் மூலமாக மகரந்தச் சேர்க்கை நிகழ்கிறது. வாசனை பரப்புகிறது. உங்கள் வீட்டிலும் எங்கள் வீட்டிலும் மலர்கிற ஒற்றைப்பூவிற்கே இத்தனை வேலைகள் பார்க்க முடிகிறதென்றால் பராசக்தி என்ற பெரும் தாமரைக்கு எவ்வளவு விஷயங்கள் சாத்தியம்.
அந்தாதியில் சில இடங்கள் பக்தியின் பெருக்கமாக இருக்கும். சில இடங்கள் தத்துவத்தின் பெருக்கமாக இருக்கும். எல்லாமே அவருடைய அனுபவ மொழிகள். இந்த உலகத்தை ஒரு விஞ்ஞானி புரிந்து கொள்வதற்கும் ஒரு மெய்ஞானி புரிந்து கொள்வதற்கும் இதுதான் வித்தியாசம். நீங்கள் ஆயிரம் தியரி சொல்லலாம். ஒன்றரை வரியில் அபிராமி பட்டர் சொல்கிறார். எல்லாமே சக்தி தத்துவத்தின் இயக்கம்.
“ராமரும், கிருஷ்ணரும் விஷ்ணுவின் அவதாரம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று ஓஷோவிடம் ஒருமுறை கேட்டார்கள். “ராமன் கிருஷ்ணன்” மட்டுமல்ல. இந்த உலகத்தில் எது நிகழ்ந்தாலும் அது விஷ்ணுவின் அவதாரம் தான். சற்று “நிலைதிரிந்த விஷ்ணு” என்று சொன்னார் ஓஷோ.
எல்லாவற்றையும் சமநிலையில் பார்ப்பவர்களுக்குத் தான் அது தெரியும். யோக்கியன் – அயோக்கியன் நல்லவன் – கெட்டவன், நண்பன் –எதிரி என்று இந்த இரண்டு நிலைகளையும் தாண்டி சமநிலையில் இருப்பவர்களுக்கு எல்லாம் ஒரே சக்தியினுடைய இயக்கம் என்பது புரிகிறது.
உலகம் முழுவதும் அவளாகவே தெரியும். அவளுடைய இயல்பான சக்திளை மறைப்பது எது? நம்முடைய ஆணவம், நம்முடைய கர்ம வினை, அவள் ஏற்படுத்தியிருக்கிற மாயை. இதைத் தாண்டி விருப்பு, வெறுப்பு இல்லாமல் எல்லாவற்றிலும் பராசக்தியை தரிசிக்கிற பக்குவம் ஒருவருக்கு வருமேயானால் அவர்கள் இந்தக் காட்சியைக் காண்பார்கள். இது வெறும் வார்த்தையாக இல்லாமல் நமது அனுபவத்தில் சாத்தியமாகும். எல்லாவற்றிலும் அவள் இருக்கிறாளே அதை விட்டுவிட்டு நாம் எப்படிப் போவது?
அதிகாரிகள் நிறையப் பேர் நல்ல பொறுப்பில் இருந்திருப்பார்கள். ஓய்வு பெற்றபிறகு அந்தப் பொறுப்பில் தான் இல்லை என்பதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடியாது.
இருபது வருடங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டுவிட்டுப் போக முடியவில்லை. ஆனால் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து கடை ஊழி காலம் வரைக்கும் ஆட்சி செய்கிற பராசக்தி இந்தப் பிரளயத்தை இழுத்து மூடக்கூடிய நேரம் வருகிறபோது அனைத்தையும் நீங்கி நிற்பாள். நாம் உருவாக்கிய பிரபஞ்சம் என்றெல்லாம் பார்க்க மாட்டான். பற்றுக்களை தருபவளும் வைப்பவளும் அவள்தான், பற்றுக்களை விட்டு விலகுகிற பக்குவத்தைத் தருபவளும் அவள்தான்.
நம் வாழ்வில் நாம் இறுகப் பற்றிய ஏதாவது ஒரு விஷயம் நம்மை விட்டுப் போகிறதென்றால் இது பரா சக்தியினுடைய சித்தம் என்ற முடிவிற்கு யார் வருகிறார்களோ அவர்கள் மனம் கலங்க மாட்டார்கள்.
எல்லாவற்றையும் கழித்துவிட்டால் கடைசியில் மீதமாக இருக்கக்கூடியவள் அவள். எது ஆதியோ அது தான் அந்தம். எது அந்தமோ அதுதான் ஆதி. அதுதான் அந்தாதி. ஆதியும் அதுவே. மீதம் எனப்படும் சேஷமும் அதுவே.
இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் மலர்வித்தவள், எல்லாவற்றையும் நீக்குகிறவள் என் மனதிற்குள்ளே நிலையாக நிற்கிறாள். அந்த சக்தி தத்துவத்தை நான் அனுபவரீதியாக உணர்ந்துவிட்டேன். எனக்குள்ளே சக்தியை உணர்ந்துவிட்டேன் என்கிறார் அபிராமிபட்டர்.
அபிராமி பட்டர் இதை பலபேருக்குச் சொல்லிப் பார்த்தார். யாருக்கும் விளங்கவில்லை. இது இரண்டு பேருக்குத்தான் விளங்கும் என்றார் அவர்.
பிரளயம் வந்தபோது கல்ப காலத்திலே எல்லாம் நீரால் மூழ்கடிக்கப்பட்டபோது அதிலே மிதந்து வந்தது ஆலிலை. அந்த ஆலிலையில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை வடபத்ர சாயி. அவனைத் தாலாட்டியவள் பராசக்தி. கல்ப காலத்திலே ஆலிலையில் மிதந்து வந்த போது அவள்தான் முடிவு என்று கண்ணனுக்குத் தெரிகிறது. பிரளயம் வந்த போது யோக நிஷ்டையில் தட்சிணா மூர்த்தியாக அமர்ந்தபோது தன் மனதிற்குள்ளே பராசக்தியை நிலை நிறுத்திய சிவப்பெருமானுக்கு அவள்தான் அந்தம். அவள்தான் ஆதி என்பது புரிகிறது.
ஒன்றாய் அரும்பிப் பலவாள் விரிந்(து)இவ் வுலகெங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கிநிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவாஇப் பொருள் அறிவார்
அன்றா லிலையில் துயின்ற பெம்மானும்என் ஐயனுமே.