பொய்யும் மெய்யும் பாடவோ?
என்றுமே மிகவும் உயர்ந்த விஷயங்களை பார்த்தவர்கள், கேட்டவர்கள், அனுபவித்தவர்களுக்கு சராசரி விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் போகும்.
அம்பிகை எப்பேர்ப்பட்டவள் என்கிற அற்புதத்தில் அபிராமி பட்டரின் மனம் லயிக்கிறது. இரண்டே இரண்டு நாழி நெல் கொடுக்கிறார், சிவபெருமான். இதை வைத்துக் கொண்டு உயிர்களைக் காப்பாற்று என்று கொடுக்கிறார். அதை வைத்துக் கொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம் செய்கிறாள்.
தாய்மார்களிடம் இந்தக் குணம் இருக்கும். கணவர் எவ்வளவு குறைவாக சம்பாதித்தாலும் அதை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்துவது என்கிற இயல்பு இந்தியப் பெண்களிடத்தில் இருக்கிறது. அதை ஆரம்பித்து வைத்தவள் பராசக்தி.
அவளையும் பாடிவிட்டு, மிகச் சாதாரண மனிதர்களையும் பாராட்டிக் கவியெழுத வேண்டுமா என்று கேட்கிறார்.
அப்படிப் போய் பாடும் பாட்டில் பொய்யும் மெய்யும் கலந்திருக்கும் என்கிறார். ஒன்றுமே செய்யா தவனை கர்ணன் என்று பாடுகிறீர்களே, அதில் எங்கே மெய் இருக்கிறது என்று கேட்டால் அந்தப் பாடலில் முதல் இரண்டு வரி அவனைப் பற்றிய வர்ணனையாக இருக்கும். மிச்சம் இரண்டு வரி இவனுடைய வறுமையைப் பற்றியதாக இருக்கும். நாலு வரியில் அவனைப்பற்றிச் சொன்னதெல்லாம் பொய், வறுமையைப் பற்றிச் சொன்னதெல்லாம் மெய். இதுதான் பொய்யும் மெய்யும் கலந்து பாடுதல்.
தெய்வ சாந்நித்தியத்தாலே கவிவன்மை வாய்க்கப் பெற்றவர்கள் லௌகீக சுகத்திற்காக சராசரி மனிதர்களைப் பாடிப் பழகி தங்கள் சாந்நித்தியத்தை இழக்கக்கூடாது என்பதை அருளாளர்கள் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். நீ பாட வந்தது வேறு பாடிக் கொண்டிருப்பது வேறு, ஞாபகமிருக்கிறதா என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்ய என்றால் செம்மை, பசுமையென்றால் புதிதாக இருப்பது. செய்ய பசுந்தமிழ்ப்பாமாலை என்பது இதைத் தான்.
ஐயன் அளந்த படியிருநாழிகொண்(டு) அண்டமெல்லாம்
உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையுங்கொண்டு சென்றுபொய்யும்
மெய்யும் இயம்பவைத் தாய்இதுவோஉன்றன் மெய்யருளே.
Excellent Anna Abiramy potri potri