சொன்னதைச் செய்பவள்
மலர் என்றாலே தாமரை. மாமலர் என்றால் பெரிய தாமரை. அதுவும் பனி படர்ந்திருக்கிறது. பனி பொருந்திய குளிர்ந்த திருவடித்தாமரைகளை வைக்க அம்பிகைக்கு எவ்வளவோ இடங்கள் உண்டு.
அவள் திருவடிகளை தன் தலைமேல் தாங்குவதற்கு திருமால் தவமிருக்கிறார். சிவபெருமான் காத்திருக்கிறார். நான்கு வேதங்களும் திருவடிகள் பதியாதா என்று ஏங்கிப்போய் பார்க்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டி நாற்ற மெடுக்கிற என் நாய்த் தலையின் மேல் உன் திருவடிகளை வைக்கிறாயே. அம்மா, நீ எவ்வளவு பெரிய கருணைக்கரசி என்று பட்டர் புளகாங்கிதம் அடைகிறார்.
சிலபேர் நாக்கில் தேன்வடியப் பேசுவார்கள், ஒன்றும் செய்ய மாட்டார்கள்.
இவள் பாலினும் இனிய சொல் சொல்கிறாள்; சொன்னபடியே செய்துவிடுகிறாள். இவ்வளவுதானே உனக்கு வேண்டும் என்று உடனே திருவடிகளை எடுத்து தலைமேல் வைத்து விடுகிறாள்.
தேவர்கள் தங்களுக்கு சிவபெருமான் அருளப் போகிறார் என்று கும்பிட்டுக் கொண்டே நிற்கிறார்கள். இவர் அருளைத்தேடி அம்பிகையிடம் செல்கிறார்.
அம்பிகை தன்னுடைய ராஐதானியில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அதற்குக் கீழே படிகளாக, பீடங்களாக நான்கு வேதங்களும் உள்ளன. அவள் திருவடி பதிக்கிற தட்டுதான் உபநிஷதம்.
ஓங்காரம், வேதங்கள், உபநிஷதங்கள் இதன் உச்சியிலே சிங்காசனம் போட்டு அமர்ந்திருக்கிறாள் அம்பிகை. தன் மேல் அவள் பாதத்தைப் பதித்து இறங்குவாள் என்று அந்த வேதங்கள் காத்துக்கொண்டே இருக்கின்றன.
தானாகப் போய் அவளுடைய திருவடிகளைத் தொடுவதற்குரிய தகுதி நமக்கு இல்லையென்று நான்கு வேதங்களுக்கும் நன்றாகத் தெரியும். அதனால் கீழேயே நிற்கின்றன.
பெரிய அலுவலகங்களில் வாயிற் காவலர் இருப்பார். அவரும் உள்ளே போக மாட்டார். வருகிறவர்களையும் உள்ளே போக விடமாட்டார்.
வேதங்கள் இதைதான் செய்கின்றன. வேதங்களும் அம்பிகையிடம் செல்ல பயப்படுகின்றன. வேதங்களின் வழியாக அறிவுரீதியாக அவளை அணுகுவதற்கும் நம்மால் முடிவதில்லை.
எனவே அடியவர்களைத் தேடி அம்பிகையே எழுந்து, நான்கு வேதங்களையும் தாண்டித் தாவி தன் திருவடிகளைப் பதிக்கிறாள் பராசக்தி.
திருமால், சிவபெருமான் ஆகியோர் திருமுடிகள் நான்குவேதங்கள் ஆகியவற்றைவிட தீய நாற்றம் வீசுகிற இந்தத் தலையில் வந்து உனது திருவடிகளைப் பதித்தாயே என்று பாடுகிறார்.
பாலினும் சொல்இனி யாய்பனி மாமலர்ப் பாதம்வைக்க
மாலினும் தேவர் வணங்கநின்றோன் கொன்றை வார்சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள்பாடும்மெய்ப் பீடம்ஒரு
காலினும் சாலநன் றோஅடி யேன்முடை நாய்த்தலையே?
ஒரு பெரிய தொழிலதிபர், அயல்நாட்டுப் பயணம் சென்று வருகிறார். விமான நிலையத்திலிருந்து வீடு வரைக்கும் அவருக்கும் வரவேற்பு பதாகைகள் என்ன. சிகப்புக் கம்பள வரவேற்பு என்ன. மாலைகள் என்ன, பூச்செண்டுகள் என்ன, வீட்டிற்குள் நுழைகிறார். தன்னைத்தான் கூப்பிட்டு கணக்கு கேட்கப் போகிறார் என்று நிர்வாகிகள் நிற்கிறார்கள்.
தொழிலதிபர் ஓடிப்போய் தான் வளர்க்கிற நாய்க் குட்டியைத் தூக்கிக்கொஞ்சுகிறார். இத்தனை நாள் பிரிந்திருக்கிறார். ரொம்ப செல்லமாக வளர்த்திருக்கிறார். அது வாலாட்டிக்கொண்டு ஓடிவருகிறது. அதை அள்ளியெடுத்து மடியில் வைத்து பத்து நிமிடங்கள் கொஞ்சிவிட்டு பின்பு மற்றவர்களை விசாரிக்கிறார்.
அம்பிகை இதைத்தான் செய்கிறாள். ஒரமாக தொழிற்சாலை நிர்வாகிகள் போல் பெருமாள் நிற்கிறார். சிவபெருமான் நிற்கிறார். நான்கு வேதங்கள் நிற்கின்றன. எல்லாவற்றையும் விட்டுவிட்டு நாய்மாதிரி இருக்கிற அடியாரைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு அம்பிகை கொஞ்கிறாள்.
தன் எஐமானன் பெரிய கோடீசுவரர். அவர் அமெரிக்கா சென்று வருகிறார் என்பது அந்த நாய்க்குத் தெரியாது. அதற்குத் தெரிந்ததெல்லாம் தன் எஐமானன் வந்து விட்டான் என்கிற பரவசம். அதுதான் அடியாருக்கும், இறைவனுக்கும் இருக்கக்கூடிய இணைப்பு.
அடியவர்கள் தங்களை நாய் என்று சொல்லிக் கொள்வது நமது சமய மரபில் இருக்கும் அம்சம்தான்.
நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
என்கிறார் மாணிக்கவாசகர்.
நாற்பது வயதில் நாய்க்குணம் என்பார்கள். எனக்கு நாற்பது வயது ஆனபோது அந்தப் பழமொழிக்கு நானாக விளக்கம் கண்டுபிடித்தேன். நாய்க்குணம் என்றால் வள்வள்ளென்று விழுவான் என்பது அர்த்தமில்லை.
நாற்பது வயதில்தான் ஓரளவிற்கு அனுபவம் வந்து இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டும் என்ற பக்குவம் வரும். நாயைப் பார்த்தால் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பதுபோல் இருக்கும். வாசலருகே சிறிய அசைவு தெரிந்தால் சட்டென்று விழித்துப் பார்க்கும். உறங்கும்போதும் விழிப்போடு இருக்கும் வயது இந்த நாற்பது வயது.
அடியார்களுக்கு இந்தக் குணம் உண்டு. உலக வாழ்கை என்னும் மாயையில் உறங்கிக் கிடந்தாலும் இறைவன் வருகிறான் என்றால் உடனே உயிர் விழிக்கும்.
எந்த நேரத்தில் இறைவன் தன்னை ஆட்கொள்ள வந்தாலும் அவன் திருவடிகளை அணுகுவதற்கான பக்குவத்தை எந்த உயிர் பெற்றிருக்கிறதோ, அந்த உயிர் தன்னை நாய் என்று சொல்லிக் கொள்ளும்.
அபிராமி பட்டரை நோக்கி அம்பிகை வருவதை அவர் உணர்ந்து சொல்கிறார். முதலில் தன்னை நாய் என்றார். பின்பு பேய் என்கிறார். அலைவதில் நாயும் பேயும் சமம். நம் ஊரில் ஒரு பழமொழி உண்டு. நாய்க்கு வேலையில்லை. நிற்க நேரமில்லை என்று வேகமாக அங்கே இங்கே சென்றுவிட்டு மீண்டும் அதே இடத்திற்கு வந்து திரும்பி படுத்துக் கொள்ளும்.
பேயும் அப்படிதான். பேய் மறுபடியும் இந்த உலகிற்குள்ளே வரவேண்டும் என்பதற்காக அலைகிறது.
இந்தப் பாடலில் பேய் என்பது பதற்றத்தையும் குறிக்கிறது. மனமானது பதறிக்கொண்டே இருக்கிறது. இந்தப் பதற்றத்தை தணித்து தான் யார் என்று தெய்வம் காட்டுகிறது. அதை அறிவதற்கான அறிவையும் தருகிறது.
நீ எவ்வளவு பிரம்மாண்டம், எவ்வளவு பிரமாதம், எவ்வளவு அற்புதம், நீ எவ்வளவு மகத்துவம் என்பதை அறிந்துகொள்ளக்கூடிய அறிவை முதலில் கொடுத்தாய். பிறகுதான் உன்னைக் கொடுத்தாய். எனக்கு போய் இவ்வளவு பெரிய விஷயத்தைக் கொடுத்துவிட்டாயே என்கிறார் அபிராமி பட்டர்.
நாயே னையும் இங்(கு) ஒருபொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய்நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய்என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமக ளேசெங்கண்மால்திருத் தங்கச்சியே.