நினைவிலே நிறுத்து!
ஒவ்வொருவருக்கும் மேனியில் பதியும் சில தழும்புகள் அவர்கள் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிற அடையாளங்களாக இருக்கும். மலேசியாவில் மத்திய அமைச்சர் பொறுப்பில் இருக்கும் தேர்ந்த இலக்கியவாதி, அன்புச் சகோதரர் டத்தோ.எம்.சரவணன் தன் கன்னங்களில் இருக்கும் தழும்புகளைக் காட்டி,”இவை அரசியல் தழும்பல்ல. ஆன்மீகத் தழும்பு” என்று மகிழ்ச்சியுடன் சொல்வார்.
பத்துமலை முருகன் கோவிலுக்கு கன்னங்களில் வேல்குத்தி காவடி எடுத்ததில் ஏற்பட்ட தழும்புகளையே அப்படிக் கூறிகிறார்.
சிவபெருமானின் பக்தனான இராவணன் வீரத்தில் தலைசிறந்தவன். அவன் வீழ்ந்து கிடந்த போது முதுகில் காயம் கண்டு புறமுது கிட்டவனைக் கொன்றோமோ என்று இராமன் பதறுகிறான். அப்போது வீடணன்தான் பகைத்து பதறுகிறான். அப்போது வீடணன்தான் பகைத்து வந்த அண்ணனின் வீரத்தைக் குறித்து மதிப்பிட வேண்டாமென்று பரிந்து பேசுகிறான். அஷ்ட திக்கு யானைகள் மார்பில் முட்டியபோது மார்பில் பொதிந்த தந்தங்கள் இராமனின் கணை மார்பில் பட்டதும் முதுகு வழியாக வெளியேறியதிலேயே அந்தக் காயம் விளைந்தது என்றான் வீடணன்.
பக்தனே அவ்வளவு பெரிய வீரனென்றால் சிவபெருமாளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். வீரர்களிலேயே மிகவுன்னத நிலையைக் குறிக்கும் செஞ்சேவகன் என்ற சொல்லால் சிவபெருமானை வர்ணிக்கிறார் அபிராமி பட்டர். அவர் செய்த வீரச் செயல்கள் எத்தனையோ. அட்ட வீரட்டானேஸ்வரர் அவர்.
தங்க மலையாகிய மேருவை வளைத்து, அரக்கர்களின் முப்புரங்களை எரித்து. மதயானையை சாய்த்து அதன் தோலை மேனியில் போர்த்த பெருமைக்குரியவன் சிவபெருமான். அவருடைய திருமேனியில் தழும்புகள். அவை வீரப்போரில் விளைந்தவை அல்ல. காதல் போரில் விளைந்தவை.
தன்னுடைய திருமுலைகள் பதிய அம்பிகை அணைத்ததில் அந்த அடையாளங்கள் அய்யன் திருமேனியில் பதிந்தனவாம். அத்தகைய நாயகியின் தாமரை போல் சிவந்த தங்கக் கைகளும் கரும்பு வில்லும் மலர்க் கணைகளும் எப்போதும் என் மனதில் இருக்கின்றன என்கிறார் அபிராமி பட்டர்.
மன்மதனின் கைகளில் இருக்கும் கரும்பு வில்லும் மலர்க்கணைகளும் மனதில் இருந்தால் அது காமத்தின் அடையாளம். காமத்தை வெல்ல அருளும் அன்னையின் கைகளில் இருக்கும் கரும்பு வில்லும் மலர்க்கணைகளும் மனதில் பதிந்தால் அது ஞானத்தின் அடையாளம்.
தங்கச் சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கட் கரியுரி போர்த்த செஞ்சேகவன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே.