தெய்வங்களின் தலைவி!
கால்நடைகளைப் பிணைப்பதற்கு மரக் கட்டைகளை தறி செய்து தரையில் அடித்து வைப்பார்கள். அதில் மாடுகளைக் கட்டி வைப்பார்கள். அந்தத் தறியைக் கொண்டு போய் மலையில் வைத்து அடித்தால் இறங்குமா? மரக்கட்டை மலைக்குள் இறங்காது. ஒரு நல்ல பாதையை வீணான ஆட்களுக்குச் சொல்வது என்பது மலையிலே போய் இந்தத் தறியை அடிப்பதுபோல் என்கிறார் பட்டர்.
பசுக்களை பிணைக்ககூடிய நடு தறியை சிவனாக வழிபடுவது வழக்கம். நடு தறி அப்பர் என்றே பெருமான் இருக்கிறார். இந்த உயிராகிய நாமெல்லாம் பசுக்கள். இந்த பசுக்களைப் போய் கட்டுகிற தறி சிவபெருமான். அவர் நடு தறியாக இருக்கிறார்.
300 ஆண்டுகளுக்கு முன்னால் சிறு தெய்வ வழிபாடுகள் நிறைய இருந்தன. மாற்று மதங்களின் ஊடுருவல் தொடங்கிய காலம். இந்து சமயத்தின் ஆறு உட்பிரிவுகளையும் உள்ளடக்கிய வழிபாட்டை வலியுறுத்த வந்த அபிராமி பட்டர் இந்த ஆறு சமயங்களின் தலைவியாக இவள் இருக்கிறாள். நீ வேறு சமயங்கள் தேடி எங்கோ போகும் வீணர்களுக்குப் போய் அவர்கள் தேறும் விதமாக அம்பிகையின் வழிபாட்டிற்கு வழிகாட்டினால் அது குன்றில் அடித்த தறிபோல் இருக்கும் என்பதை இந்தப் பாட்டில் சொல்கிறார்.
ஆறு சமயத்திற்கும் இவள்தான் தலைவி என்பதை அனுபவ ரீதியில் உணரவேண்டுமே தவிர தத்துவரீதியில் ஆராய்ச்சி செய்து அறியமுடியாது. கடவுளைக் காண வேண்டுமென்றால் காணாபத்யம் என்றால் என்ன, கௌமாரம் என்றால் என்ன, சாக்தம் என்றால் என்ன, சைவம் என்றால் என்ன, வைணவம் என்றால் என்ன, சௌரம் என்ன என்ற தத்துவ ஆராய்ச்சிக்குள் போனால் தத்துவ மூளைதான் வேலை பார்க்கும். உள்ளுணர்வு அணைந்துவிடும்.
யாராவது ஒருவர் வந்து ஆறு சமயத்தையும் ஆராய்ச்சி செய்துவிட்டேன் என்று சொன்னால் அவன் கடவுளையே காணவில்லை என்று திருமூலர் சொல்கிறார்.
“ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்”
ஏனென்றால் ஆறு சமயப் பொருளும் அவன் அல்லன், அப்படியானால் எப்படிப் பார்ப்பது என்கிறீர்களா? எங்கேதான் சென்று தேறவேண்டும்; தேறித் தெளிய வேண்டும் என்கிறார்.
“ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்
ஆறு சமயப் பொருளும் அவனலன்
தேறுமின்! தேறித் தெளிமின்! தெளிந்த பின்
மாறுதல் இன்றி மனை புகலாமே”
இந்தபாடலில் இந்து சமயப் பெருந்தெய்வங்களை வணங்குபவர்களையா அவர் கூறுகிறார்? இல்லை. அப்படியானால் வேறு சமயம் என்பது எதை? இதற்கான விடை அடுத்த பாடலில் இருக்கிறது.
தேறும் படிசில எதுவும்காட்டின்முன் செல்கதிக்குக்
கூறும்பொருள் குன்றில் கொட்டும் தறிகுறிக் கும்சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்ப(து) அறிந்திருந்தும்
வேறும் சமயம்உண்டென்றுகொண் டாடியவீணருக்கே.
வீணாக பலி கேட்கக்கூடிய தெய்வங்கள் என்றார் அபிராமி பட்டர். பொதுவாக தெய்வத்திற்கு எதைப் படைத்தாலும் அதற்கு பலி என்றுதான் பெயர்.
பீடத்தில் மலர்களை நிவேதனம் செய்தால் அதற்கு மலர்ப்பலி என்று பெயர். சர்க்கரைப் பொங்கலை வைத்தாலும் அது பலிதான். உயிரை எடுக்கக்கூடிய பலிகளை பின்னால் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதை வீணே உயிரைக் கவரக்கூடிய பலி என்று சொல்கிறார்.
சிறு தெய்வங்களை ஓர் இடத்தில் கட்டி வைப்பார்கள். அந்த இடத்தைவிட்டு அசையாத அளவிற்கு அதைக் கட்டி வைப்பார்கள். அது எனக்கு ஆடு கொண்டு வா, கோழி கொண்டு வா என்று பலி கேட்கும்.
பராசக்தி அப்படியில்லை. நீங்கள் உட்கார்ந்த இடத்தில் நினைத்த மாத்திரத்தில் திவ்ய சொரூபமாக உங்கள் முன்பு தோன்றுகிறாள். என்ன காரணம்? அவள் எங்கும் வியாபித்திருக்கிறாள்.
சிறு தெய்வங்களுக்கு சக்தியில்லாமல் இல்லை அவற்றிற்கு ஓர் எல்லை உண்டு. இவளுக்கு எல்லையே இல்லை. நாம் நினைத்த இடத்தில் தேடி வந்து அருள் கொடுக்கக்கூடிய தெய்வங்களை தேடிக் கொண்டு போய் கும்பிட்டும் வரவேண்டிய அவசியம் என்ன? என்கிறார் அபிராமி பட்டர்.
ஒரு காலத்தில் ஆலயங்களில் பலி நடப்பது மிகத் தீவிரமாக இருந்தது. அதை வெறும் மூட நம்பிக்கை என்று நாம். ஒதுக்கிவிட முடியாது. சில வகையான வழிபாடுகளுக்கு அது தேவைப்பட்டது.
ஒரு சந்நிதியில் விலங்கின் உடல் வெட்டப்படுகிற போது ஒருவிதமான சக்தி வெளியேறுகிறது. அந்த சக்தியை உள்வாங்கிக் கொள்ளக்கூடிய தன்மையில் அந்த குறிப்பிட்ட சிறு தெய்வம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்கே பலி தேவைப்பட்டது.
ஆதிசங்கரர் ஒரு கோவிலுக்குள் சின்ன அசைவு வருவதால் சக்தி பிறக்கிறது என்று கண்டார். அங்கே போய் ஆடு வெட்டுவதற்குப் பதிலாக, கோழி வெட்டுவதற்குப் பதிலாக தேங்காய் உடைப்பது என்னும் பழக்கத்தை அவர்தான் கொண்டு வந்தார். தேங்காயை உடைத்தாலே அந்த சலனத்தில் அங்கே ஒரு சக்தி வெளிப்படுகிறது.
அதை அங்கே இருக்கிற விக்கிரகம் உள் வாங்கிக் கொள்கிறது என்ற விஞ்ஞானத்தை எல்லா சின்னக் கோவில்களிலும் நிறுவியவர் ஆதிசங்கரர்.
இந்த உலகில் எங்கே பார்த்தாலும் பார்ப்பதெல்லாம் அம்பிகையின் பிரசாதம். கேட்பதெல்லாம் அம்பிகையின் பெருமை. நான்கு திசைகளிலும் அவருக்குத் தெரிவது அம்பிûதான். வெளியில் பார்த்தாலும் அம்பிகையின் தரிசனம் கிடைக்கிறது.
நம் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்கள். நோய் நம்மைப் பற்றினாலே எங்கே பார்த்தாலும் அதுவாகத் தெரிகிறதே. எல்லாம் வல்ல பராசக்தி நம்மை ஆட்கொண்டுவிட்டால் காணுகிற இடமெல்லாம் பராசக்தியாகத்தானே தெரியவேண்டும்.
ஆழ்வார்களிடம், ‘நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்+ என்று கேட்டால், ‘நான் கண்ணனைச் சாப்பிட்டேன்.’ ‘தாகத்திற்கு என்ன அருந்தினீர்கள்?’ கண்ணனைப் பருகினேன்.
‘செரிமானத்திற்கு என்ன உட்கொண்டீர்கள்?’ என்று கேட்டால், கண்ணனை உட்கொண்டேன்’ என்பார்கள். உண்ணும் உணவு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன். ஆட்கொள்ளப்படுவது இதுதான்.
இது கற்பனையில் வந்த பாட்டல்ல, உள்ளே அனுபவத்தில் வந்த பாடல், எதிரே என்ன பார்க்கிறாய்? அபிராமியைப் பார்க்கிறேன். வான்வெளியில் எதைப் பார்க்கிறாய்? அபிராமியைப் பார்க்கிறேன். அபிராமி, அபிராமியைத் தவிர வேறொன்றும் தெரியாது.
இந்த நிலைக்கு நம் ஆன்மாவை உயர்த்துவதுதான் இந்த அந்தாதியின் நோக்கம். தன் அனுபவத்தையே அந்தாதியாகப் பதிவு செய்கிறார்.
வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு
பூணேன் உனக்(கு)அன்புபூண்டுகொண்டேன்நின் புகழ்ச்சியன்றிப்
பேணேன் ஒருபொழு தும்திரு மேனிப்ர காசமன்றிக்
காணேன் இருநில மும்திசை நான்கும் ககனமுமே.