இறக்கும் முன்பா எரிப்பது?
சிவபெருமான் மன்மதனை எரித்தார். இந்த லோகம் பார்க்க, வானம் பார்க்க, மேலுலகம் பார்க்க எரித்தார். சர்வ லோகங்களின் சாட்சியாக சம்ஹாரம் நடந்தது. இதில் ஒரு சிறிய வேடிக்கை செய்கிறார் அபிராமி பட்டர். தவமே வடிவாகிய பெருமான் மன்மதனை தகனம் செய்தார். பொதுவாக ஒரு ஆள் செத்த பிறகுதான் தகனம் செய்வார்கள். இவர் அம்பு போட வந்தபோதே எரித்துவிட்டார். அங்கத்தை எரித்தார்; அவன் அரூபமாகப் போனான். “தகனம் முன்செய்த தவப்பெருமான்” என்கிறார் அபிராமி பட்டர்.
அங்கமே இல்லாமல் தன் காரியத்தை நிகழ்த்துமாறு பணிக்கப் பெற்றான்.
மன்மதனே வேண்டாமென்று எரித்த சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் ஆறு குழந்தைகள் தோன்றின.
ஆறு குழந்தைகளும் தனித்தனியாக இருந்தன. எல்லாக் குழந்தைகளையும் அன்னை அன்போடு அணைத்தாள். ஆறு முகங்களும் பன்னிரெண்டு கைகளும் கொண்டு ஒரு குழந்தை உருவானது. உருவாக்கியவள் பராசக்தி.
தனது ஞானப்பாலை அந்தக் குழந்தைக்குத் தந்தாள். அது சரவணப் பொய்கையெல்லாம் சிந்தியது. அந்த ஞானப் பாலை உண்டதனாலே தந்தைக்கே போதிக்கின்ற சக்தியை அந்தப் பிள்ளை பெற்றார்.
“இது வல்லி நீ செய்த வல்லபம்” என்கிறார் அபிராமி பட்டர்.
ககனமும் வானமும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனமுன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும்செம்
முகனுமுந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனுமுண் டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே.