தனங்களெல்லாம் தருவாள்!
அம்பிகையை தோத்திரம் செய்யாதவர்கள், அம்பிகையை வணங்காதவர்கள், அம்பிகையின் தோற்றத்தை ஒரு மாத்திரை அளவாவது மனதிலே வைக்காதவர்கள் பெரிய வள்ளல் பரம்பரையில் பிறந்திருந்தாலும், நல்ல குலத்தில் பிறந்திருந்தாலும் நல்ல குணமிருந்தாலும், நிறைய படித்திருந்தாலும் நல்ல குணமிருந்தாலும் அவையெல்லாம் பயனில்லாமல் குன்றிவிடும். அவர்கள் பிச்சை எடுக்க நேரும் என்கிறார் அபிராமி பட்டர்.
சிலருக்கு வறுமையிருக்கிறதென்றால் அவன் தவம் செய்யவில்லை. அதுதான் காரணம் என்கிறார் திருவள்ளுவர்.
“இலர் பலர் ஆகிய காரணம் நோற்றார்
சிலர் பலர் நோவா தவர்”
ஒரு மனிதனுக்கு வீழ்ச்சி வருவதற்குக் காரணமே தன்னை உருவாக்கிய தெய்வத்தின் நெறியை அவர்கள் விட்டுவிட்டு விலகுவதுதான் என்பது பட்டருடைய தீர்ப்பு.
தெய்வ நம்பிக்கை இல்லாதவனுக்கு அடுத்தவனுக்குக் கொடுக்கிற எண்ணம் போய்விடும். தன் குலம் என்னவென்பது மறந்துவிடும்.
தன் பூர்விகப் பெருமை என்னவென்பது மறந்துவிடும். படித்த படிப்பு மறந்துவிடும். நல்ல குணங்களையெல்லாம் அவனாகவே கெடுத்துக் கொள்வான். கெடுத்துக்கொண்டு வாழ்க்கையில் வீணாகப் போவான்.
மனிதனுக்கு ஆயிரம் சிறப்புகள் இருக்கலாம். அந்த சிறப்புகளை சரியாகக் கொண்டு செலுத்துவது தெய்வபக்தி. பக்தியை விட்டுவிட்டால் எல்லாம் இவனுடைய தனிப்பட்ட சிறப்பு என்று நினைத்துக் கொள்வான். தன்னை உயர்வாக நினைக்க நினைக்க மற்றவர்களை தாழ்வாக நினைப்பான். மற்றவர்களை தாழ்வாக நினைக்க நினைக்க இவனுடைய சிறப்புகள் குன்றிக்கொண்டே போகும். எல்லாவற்றையும் பெற்ற அபிராமிபட்டர் தன்னைப் பெரியவன் என்று சொல்வான். எவன் ஒருவன் தன்னைப் பெரியவனாக நினைக்கத் தொடங்குகிறானோ அவனுடைய நல்ல குணங்கள் குன்றத் தொடங்குகின்றன. அவன் வறுமைக்கு ஆளாகிறான். பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வீடு வீடாகப் போய் பிச்சை எடுக்கிறான். ஒரே வீதியில் போவான். அதன் பிறகு வேறொரு வீதிக்குப் போவான். இப்படியே உலகம் முழுவதும் போய் பிச்சை எடுப்பான் என்கிறார் பட்டர்.
தோத்திரம் செய்து தொழுதுமின் போலும்நின் தோற்றம்ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மைகுலம்
கோத்திரம் கல்வி குணம்குன்றிநாளும் குடில்கள்தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்குழலாநிற்பர் பாரெங்குமே.