இந்த பாடலில் ஐந்து பூதங்களைச் சொல்லத் தொடங்குகிறார் அபிராமி பட்டர். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். வெங்கால் என்றால் வெப்பமான காற்று.
இந்த ஐம்பூதங்களிலும் பரவும் மணமாகவும் சுவையாகவும் ஒளியாகவும் அபிராமி நிற்கிறாள். நிலத்தில் அழகு தோன்றுகிறது. தண்ணீரில் சுவையும் இருக்கிறது. சுவை மிக்க பொருட்கள் விளைய நிலமும் தண்ணீரும் ஆதாரம். கனலில் ஒளி இருக்கிறது. இந்த அம்சங்கள் ஆகாயத்திலும் படர்கின்றன. ஆகாயத்திலிருந்தும் தண்ணீர் தரைக்கு வருகிறது. கதிரொளியும் நிலவொளியும் கண்ணுக் கழகாய் தெரிகின்றன. முதன் முதலில் ஒலி ஆகாயத்திலே தோன்றியது.
ஓசை ஓலியெல்லாம் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
ஒலிகள் உருவாகிற இடம் வானம்
என்கிறார் திருநாவுக்கரசர்.
அபிராமி அந்தாதியில் சிவகாம சுந்தரியைச் சொல்கிறார் பட்டர்.
பஞ்ச பூதங்களில் நுகர்ச்சியை பஞ்ச புலன்களினால் நாம் பெறுகிறோம். அண்டத்திலே இருப்பவை ஐந்து பூதங்கள். பிண்டத்திலே இருப்பவை ஐந்து புலன்கள்.
அண்டத்திற்கும், பிண்டத்திற்கும் நடுவிலே நடனமாடிக் கொண்டிருப்பவன் நடராஐ மூர்த்தி. அவனை பற்றிக் கொண்டு நிற்பவன் சிவகாம சுந்தரி அவள்தான் பராசக்தி.
பஞ்ச பூதங்களும், அதனுடைய பலன்களும் போய்ச் சேரக்கூடிய சங்கமிக்கிற இடமாக இருக்கக்கூடிய சிவகாம சுந்தரியினுடைய சீரடிகளை எப்போதும் சார்ந்திருப்பதை விட ஒரு தவம் கிடையாது. அப்படித் தவம் புரிபவர்களிடத்திலே இல்லாத தனம் கிடையாது.
பாரும் புனலும் கனலும்வெங்காலும் படர்விசும்பும்
ஊரும் முருகு சுவையொளி யூறொலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாமசுந்தரி சீரடிக்கே
சாரும் தவமுடையார் படையாத தனமில்லையே.