என்னதான் படித்திருந்தாலும் பொருளாதாரம் இருந்தாலும் ஒரு காலத்தில் மனதில் விரக்தி வருகிறது. இன்றைக்கு சாப்ட்வேர் துறையில் இருப்பவர்களிடம் உள்ள அளவிற்கு பணம் யாரிடமும் கிடையாது. ஆனால் அங்கே தற்கொலை எண்ணிக்கை அதிகம். அதீத கல்வி, அதீத பணம் சிலர் மனங்களை மிகவும் பலவீணமாக்கி விடுகிறது. மன அழுத்தம் உடையவர்களாக மாற்றி விடுகிறது.
நாம் தேடிப்பெற்ற செல்வங்களே நமக்கு எதிரியாக மாறாமல் அதைக் கையாளுகிற ஆற்றலை அபிராமி நமக்குத் தருகிறாள். நிறைய பணம் வைத்திருப்பவர்களை முதலாளி என்றும் வேலை பார்ப்பவர்களை தொழிலாளி என்றும் கூறுகிறோம். கையில் உள்ள முதலை எப்படி ஆளுவது என்று தெரிந்தவர் முதலாளி. தொழிலை எப்படி ஆளுவது என்று தெரிந்தவர் தொழிலாளி.
நாம் பெற்ற கல்வியையும், பணத்தையும் எப்படி ஆளுவது என்று தெரிந்தால் அறிவாளி. அதைத் தருபவள் அவளே. தனம் – கல்வி – ஒரு நாளும் தளராத மனம். மனிதனுக்கு மட்டும் இந்த மூன்றும் கிடைத்துவிட்டால் தோற்றப்பொலிவு வரும். பார்த்தால் கையெடுத்துக் கும்பிடுகிற மாதிரி தோற்றப் பொலிவை அம்பிகை தருகிறாள். அத்துடன் விட்டுவிட மாட்டாள். சொந்த பந்தங்களில்தான் பிரச்சனையே ஆரம்பிக்கும். எதிரிகளால் வருகிற பிரச்சனைகளைவிடக்கூட இருப்பவர்களால்தான் பிரச்சனை அதிகம். எனவே நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும் என்கிறார்.
இதை இதைத் தருவாள் என்று தனித்தனியாய் சொல்லாமல் நல்லன எல்லாம் தரும் என்கிறார். அதாவது நாம் எதையெல்லாம் நல்லதென்று நினைக்கிறோமோ அதைத்தான் தருவாள் என்றில்லை. நமக்கு எது நல்லதோ அதைத் தருவாள். தன்னுடைய அன்பர்களுக்கு சிறப்பு மிக்க வாழ்க்கையைத் தருவாள். அதுவும் கடைக்கண் பார்வையிலேயே தருவாள் என்கிறார் அபிராமி பட்டர்.
தனந்தரும் கல்வி தரும்ஒரு நாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவுந்தரும்நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம்தரும்அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழ லாள்அபிராமி கடைக்கண்களே.