பெண்மையின் பேரழகு!
ஒரு விஷயம் எந்தப் புலன் மூலம் நம் கவனத்திற்கு வருகிறதோ, அந்தப் புலனுக்கு முதலில் மகிழ்ச்சி வரும். நமக்கு மிகவும் பிடித்தமான ஒரு குரலைக் கேட்கிறபோது காதில் தேன் பாய்கிறது என்று சொல்கிறோம். கண்களை கடவுள் நமக்குக் கொடுத்ததன் முழுப்பயன் அம்பிகையின் தரிசனத்தில் கிடைக்கிறது.
ஒரு பெரிய திரையங்கம். எங்கெங்கோ இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் ஒரு காட்சிக்கு என்று வருகிறார்கள். வருபவர்களையெல்லாம் காவலாளி பொருட்படுத்தவே இல்லை. ஆனால் அந்த திரையரங்கத்தின் உரிமையாளருடைய கார் வருகிறது என்றால் இவர் விறைப்பாக நின்று வணக்கம் சொல்லி கார் கதவை திறந்து விடுவார்.
காவலாளி எல்லோரையும் ஒன்றாகப் பார்ப்பார். ஆனால் தனக்கு உரிமையானவர். தன்னை உடமையாகக் கொண்டவர் வருகிறாரென்றால் கார்க் கதவைத் திறந்துவிட்டு தன் மகிழ்ச்சியை தெரிவிப்பார். கண் அந்த காவலாளி மாதிரி! பார்க்கும் ஆட்களையெல்லாம் அதற்கு பெரிதாகத் தெரியாது. எல்லாம் வல்ல அம்பிகையைக் காணுகிறபோது கண்ணுக்கே ஒரு களிப்பு வருகிறது. அப்படியென்றால் கண்ணைக் கருவியாகக் கொண்டு அம்பிகையை தரிசிக்கிற உயிருக்கு எவ்வளவு மகிழ்ச்சி வரும்.
நம் உடலில் இருக்கக்கூடிய அங்கங்களை வழி பாட்டுக்கு என்று பழக்கிக்கொண்டே வருகிறபோது அது புத்துணர்வோடும் செயல்திறனோடும் இருக்கும். கடம்பம் என்னும் மரங்கள் நிறைந்திருக்ககூடிய மதுரையில் அவள், கைகளில் வீணையுடன் ராஐமாதங்கியாக இருக்கிறாள். “கண் களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்.”
அம்பிகையைப் பார்த்தால் நம் கண்கள் களிக்கின்றன. அவளுடைய குரலைக் கேட்டால் இசையே களிப்படைகின்றது. இசையின் உச்சம் அம்பிகையின் குரல், அவளுடைய குரலிலிருந்து ஒலி வருகிறதா, வீணையிலிருந்து ஒலி வருகிறதா என்று தெரியாத அளவிற்கு அவளுடைய குரல் இனிமையானது.
நமக்கு சற்று முந்தைய காலத்தில் இசைத்துறையில் மிகவும் பிரபலமாக விளங்கியவர்கள் வீணை தனம்மாள். அவர்கள் காலத்தில் ஒலிபெருக்கி வசதி கிடையாது. மிகவும் சிறிய வீணை வைத்திருப்பார்கள். அந்த வீணையை மீட்டிக் கொண்டே இடையில் பாடுவார்கள். உள்ளபடியே வீணையிலிருந்து வருகிற நாதமா? இல்லை, அவர்கள் பாடுகிற கானமா என்று தெரியாத அளவிற்கு இரண்டும் ஒன்றோடொன்று ஒத்திருக்கும்.
முதலில் கண்ணுக்குத் தெரிவது ராஐமாதங்கியின் கைகளில் இருக்கிற வீணை, இரண்டாவது அவளுடைய குரல். அந்த வீணையை ஏந்தியிருக்கிற அம்பிகையினுடைய திருக்கரங்கள், பயோதரம். பயோதரம் என்றால் ஞானப்பால் கொண்ட அவளுடைய திருமுலைகள் என்பது பொருள். அந்த வீணையை அவள் மார்போடு அணைத்திருக்கிறாள்.
ஒரு நீண்ட பயணத்திற்குப் போகிறீர்கள். வழியில் இரண்டுபுறமும் பசுமையாக இருந்தால்தான் கண்ணுக்கு அழகாக இருக்கிறது. ஏன் என்றால் பசுமை என்பது உயிர்ப்பின் அடையாளம்.
நாளை இந்தப் பசுமை நம் கைகளில் கவளமாக விழும் என்ற உத்தரவாதத்தை மனம் சம்பந்தப்படுத்திப் பார்க்கிறது. பசுமை என்பது செழுமையின் அடையாளம்.
பசுமை என்பது வாழ்வின் உத்திரவாதங்களுக்கான குறியீடு. அம்பிகை பச்சை வண்ணத்தில் இருக்கிறாள். கோவிலிலே கர்ப்பகிரகத்திலே தெரிகின்ற அம்பிகையின் திருவுருவில் பச்சை நிறம் மட்டுமல்ல. உலகத்தில் நீங்கள் எங்கே பசுமையைப் பார்த்தாலும் அங்கே அம்பிகை இருப்பதாகப் பொருள்.
மதங்க முனிவருடைய குலத்திலே திருமகளாக அம்பிகை அவதாரம் செய்தாள். மதங்கருடைய மகளாகப் பிறந்த மாதங்கி தனியாகப் பிறக்கவில்லை. தன்னைப் போல் கோடிக்கணக்கான கன்னிகைகளை அம்பிகை தோற்றுவித்தாள். அந்த கோடிக்கணக்கான கன்னிகைகளுக்கு மத்தியில் ஒரு நீலமாணிக்கம் போல் அவள் ஒளி வீசியதால் எல்லாப் பெண்களைவிட தனித்த பேரழகோடு அவள் திகழ்ந்தாள்.
வாழ்க்கையின் அத்தனை ரசங்களையும் வார்த்துக் கொடுத்தது மாதிரியான பாடல் இது. அம்பிகையை கண்களால் தரிசிப்பது, அவளின் தேனினும் இனிய குரலைக் கேட்பது, எங்கே பசுமையைக் கண்டாலும் அங்கே அம்பிகையைக் காண்பது, பெண்மையின் பேரழகாக அம்பிகையை மனதில் தியானிப்பது என்று ஆனந்தமான அனுபவங்களை இந்தப் பாடல் தருகிறது.
கண்களிக் கும்படி கண்டுகொண்டேன்கடம் பாடவியில்
பண்களிக் கும்குரல் வீணையும்கையும் பயோதரமும்
மண்களிக் கும்பச்சை வண்ணமும்ஆகி மதங்கர்குலப்
பெண்களிற் றோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.