உயிரின் ஒரே குறை
குறையொன்றுமில்லை என்பது உண்மை தான் – ஆனால் உயிர்களுக்கு ஒரேயொரு குறை இருக்கக்கூடும்.
அந்தக் குறையும் இப்போது அபிராமி பட்டருக்கு இல்லை. இனிமேல் நான் பிறந்தால் அது என் குறையில்லை; அது உன் குறை என்று அபிராமியிடம் சொல்லிவிட்டார். வினைகள் திரும்பத் திரும்ப மூளுவது நம்மாலே, வினைகள் திரும்பத் திரும்ப மூளுவது நம்மாலே, வினைகள் மூள்வது ஒரு செயலைச் செய்வதால் அல்ல அந்த உணர்வினாலேயே மூளுகிறது.
ஓர் ஆளைப் பார்க்கிறீர்கள். அவர் உங்களுக்கு மிகவும் சிரமம் கொடுக்கிறார். மனதிற்குள் நான்கு பேரை வைத்தாவது இந்த ஆளை தீர்த்துக் கட்டிவிட்டால் தேவலை என்று தோன்றுகிறது. வெளியில், “ஐயா நல்லா இருக்கீங்களா” என்று பேசிப் பழகிவிட்டு வந்து விடுகிறீர்கள்.
நீங்கள் அந்தக் கொலையைச் செய்யவில்லை. ஆனால் அவரைப் பார்க்கிற போதெல்லாம் உன்னைக் கொல்ல வேண்டும் என்று தோன்றிவிட்டால் கொலை செய்த வினை பற்றும்.
அந்த எண்ணத்திற்குத்தான் அந்தப் பலன். நீங்கள் செயலே செய்யவேண்டாம். அந்த எண்ணம்தான் வினையைக் கொண்டு வந்து சேர்க்கிறது. அளவுகடந்த வெறுப்பு இல்லாவிட்டால் அளவு கடந்த அன்பு மூலமாக வினைகளை சேர்த்துக்கொண்டே போகிறோம்.
ஒரு நகைக்கடையை உடைத்து உள்ளே இருக்கிற நகைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு போனால்தான் அவருக்கு தண்டனை என்பதில்லை. கடைவீதிப் பக்கம் போகிறபோது இவ்வளவு நல்ல நகைகள் இருக்கிறதே இதையெல்லாம் தூக்கிக்கொண்டு போனால் என்ன தவறு என்று நினைத்தாலே திருடியதற்கு உரிய தண்டனை உண்டு என்கிறார் திருவள்ளுவர். “உள்ளத்தால் உள்ளலும் தீதே” என்கிறார்.
இந்தக் குறைகள் அனைத்தும் என்னுடையவை. ஆனால் அம்பிகையே அந்த வினைகளை எரித்து அடுத்த பிறவி வராமல் பார்த்துக் கொள் என்கிறார் பட்டர்.
வினைகளைச் சேர்ப்பது உயிரினுடைய குறை, அந்த வினைகளை எரித்து தடுக்காமல் விட்டால் அது அம்பிகையினுடைய குறை என்று பகிரங்கமாக அம்பிகையிடத்திலே சொல்கிறார்.
அம்பிகையினுடைய தோற்றமே ஒன்றை சொல்லாமல் சொல்கிறது. அவளுடைய இடை மின்னலை பழிக்கின்றது. அதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. மின்னல்தான் ஆச்சரியமானது என்று எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அம்பிகையினுடைய மெல்லிடையைப் பார்க்கிறபோது அந்த மின்னலின் குறை தெரிகிறது. உலகத்திலேயே மின்னலைவிட ஒல்லியானது எதுவும் கிடையாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அம்பிகையின் இடை மின்னலைவிடவும் ஒல்லியாக இருக்கிறது. மின்னல் அங்கே குறைபட்டுப் போனது.
வானத்திலே தோன்றுகிற மின்னலை கண்கொண்டு பார்த்தால் கண் குருடாகிவிடும். மின்னல் போன்ற அம்பிகையை தரிசனம் செய்தால் கண் களிக்கும். மின்னலைப் பார்க்க முடியாது என்பதிலும் மின்னல் தோற்றுவிட்டது.
ஆகாயத்தில் தோன்றுகிற மின்னல் அரை நொடியில் மறைந்து போகும். அம்பிகையென்ற மின்னல் நிரந்தரமாக நின்று இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பும், பின்பும் நிலையாக இருக்கும். மின்னல் இங்கும் தோற்றுவிட்டது.
மின்னலை எத்தனை எத்தனை விதமாக அம்பிகை வெற்றி கொள்கிறாள் என்பதை ஒரு வரியில் சொல்கிறார்.
அனைவரும் போய் நம்முடைய குறைகள் தீர வேண்டுமென்று நிற்கிறோம். வரிசையில் இன்னொருவர் நிற்கிறார். அவர் ஐடாமுடி வைத்திருக்கிறார். அவருடைய ஐடையில் நிலா இருக்கிறது, கங்கை இருக்கிறது. அம்பிகையுடன் ஊடல் கொண்டு அந்த ஊடலைத் தீர்க்க வேண்டுமென்பதற்காக பக்தர்களோடு சேர்ந்து அவரும் வருவதைப் பார்த்து அம்பிகைக்கு சிரிப்பு வந்துவிடுகிறது. எல்லோரையும் போல் அவருடைய சிரசின்மேலும் திருவடிகள் வைத்து ஊடலைத் தீர்க்கிறாள்.
அதைத்தாண்டி கடவுள்களை நம்மைப்போல் ஒரு சராசரி மனிதர்களாகக் காட்டுவதில் எல்லோருக்கும் ஒரு தனி மகிழ்ச்சி உண்டு. இல்லறத்திலே ஊடல் வருகிறபோது கணவன் பணிந்து போவதைப் போல் எல்லாம் வல்ல இறைவனும் பணிந்து போகிறான் என்பது வாழ்க்கைத் தத்துவத்தை நமக்கு இது விளக்குகிறது.
இருவரும் நான் யார்? நான் யார்? என்று நிலை நாட்டுவதற்கல்ல வாழ்க்கை, ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்வதே வாழ்க்கை என்பதை பரமசிவனும், அம்பிகையும் சத்திய சாட்சியாக நின்று விளக்குகிறார்கள்.
என்குறை தீரநின்(று) ஏத்துகின்றேன்இனி யான்பிறக்கின்
நின்குறையே அன்றி யார்குறைகாண்இரு நீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்றநேரிடை மெல்லியலாய்
தன்குறை தீரஎங் கோன்சடை மேல்வைத்த தாமரையே.