வாழ்விற்கு அவள்தான் முதலீடு
ஏற்கெனவே சில பாடல்களில் அம்பிகையினுடைய திருவுருவத்தை மனதில் எப்படி வரித்துக் கொள்வது என்பதை ஒரு தூரிகையை எடுத்து வரைந்து காட்டியது போல் பட்டர் வரைந்திருக்கிறார். இன்னொரு சித்தரத்தை அபிராமி பட்டர் நமக்காகத் தீட்டிக் கொடுக்கிறார்.
கடம்ப மலர்கள் அம்பிகைக்கு மிகவும் உகந்தவை. கடம்ப மலர்களால் கோர்க்கப்பட்ட மாலைகளை அம்பிகை பெரிதும் விரும்புகிறாள். ஐந்து மலர்களைக் கொண்ட அம்புகளை அவள் தன் படைக்கலனாகக் கொண்டிருக்கிறாள். தனு என்றால் வில்.
நள்ளிரவு நேரத்திலே பைரவ மூர்த்தியால் வழிபடக்கூடியவளாக அம்பிகை திகழ்கிறாள். பொதுவாக பைரவர் என்ற சொல் சிவ பெருமானைக் குறிக்கும்.
சிவபெருமானுடைய சக்தி விசேஷத்தோடு பைரவர் என்பவர் தனி மூர்த்தியாகவும் திகழ்கிறார்.
காசிக்கு காவல் தெய்வமாகத் திகழ்பவர் கால பைரவர். பைரவ முறைப்படி உபாசனை செய்பவர்கள் நள்ளிரவிலே அம்பிகையை வழிபடுவார்கள் சந்தியா நேரங்களிலே தியானமோ, பிரணாயாமமோ யோகமோ செய்யலாம். காலை 5.45 முதல் 6.15 வரை மதியம் 11.45 முதல் 12.15 மாலை 5.45 முதல் 6.15 ஆனால் நள்ளிரவு நேரமான 11.45 முதல் 12.15 வரையிலான சந்தியா காலம் இல்லறவாசிகளுக்கு, கிரஹஸ்தர்களுக்கு கூடாது என்று சொல்வார்கள். அது பைரவர் போன்ற கடும் உபாசனையில் இருப்பவர்களுக்கு உரிய வழிபாட்டு நேரம். அந்த சூட்சுமத்தை அபிராமி பட்டர் சொல்கிறார்.
நள்ளிரவு ஆகிவிட்டதா என்று தெரிந்து கொள்ள அம்பிகைக்கு கடிகாரமே தேவை இல்லை. பைரவர் வழிபட வந்து விட்டால் அது நள்ளிரவு என்று நன்றாகத் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக பிள்ளைகள் அம்மாவிடம் கேட்பார்கள் எனக்கென்று என்ன சொத்து வைத்தாய் என்று. அம்பிகை நம் எல்லோருக்கும் சேர்த்து வைத்திருக்கிறாள். உண்மையிலேயே நிரந்தர வைப்புநிதி அம்பிகையினுடய பாதங்கள்தான்.
நாம் வாழ்வதற்காக முதல் பொருளாகவும் இறைவன் இருக்கிறான். சேமநிதிளாகவும் இறைவன் இருக்கிறான். அடிப்படையில் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகர் இந்த நுட்பத்தை நன்றாக உணர்திருக்கிறார். திருவெம் பாவை முதல் பாடலில் சொல்வார்.
“போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே” என்பார்.
என் வாழ்க்கைக்கு நீதான் முதல் போட வேண்டும். நீதான் எனக்கு முதல். இன்னொரு இடத்தில் இறைவன் எப்படியிருக்கிறான் என்று சொல்கிறார். வங்கியில் நாம் எதற்கு முன்னாலோ பணம் எதற்கு போட்டு வைக்கிறோ மென்றால் அவசர காலங்களுக்கு, வறட்சி காலங்களுக்கு உதவுவதற்காக. “என் வாழ்நாள் முதலே எனக்கு எய்ப்பில் வைப்பே” என்பார் மாணிக்கவாசகர்.
அம்பிகைக்கு நான்கு கரங்கள். ஒன்றிலே பாசாங்குசம், அபயகரம், வரதகரம் மற்றொரு கரத்திலே தாமரை மலரை ஏந்தியிருக்கிறாள். இந்த நான்கு கரங்களும், திருவடிகளும். நமக்கென்று வைத்திருக்கிற சேமம்.
எல்லோரும் அவளை கறுப்பு என்று சொல்கிறார்களே, அவளின் ஒளி செம்மை. அடையாளங்கள் சொல்கிறார், நெற்றிக் கண்ணோடு சேர்த்து மூன்று கண்கள் அவளுக்கு. இந்தத் தோற்றத்தை மனதிலே வரைந்து கொள்ளுங்கள் என்கிறார் அபிராமி பட்டர்.
கடம்ப மாலை அணிந்தவளாக, பஞ்ச பாணங்கள் கொண்ட அம்பைச் சுமந்தவளாக, கரும்பு வில்லை ஏந்தியவளாக, நள்ளிரவிலே பைரவர்கள் வழிபடக்கூடிய கோலம் கொண்டவளாக, நமக்கென்று திருவடிகளையும் நான்கு கரங்களையும் கொண்டவளாக, செந்நிற ஒளி வெள்ளமாக தோன்றுபவளாக, திரிபுரை என்ற நாமம் கொண்டவளாக, மூன்று கண்கள் கொண்டவளாக அவனை மனதிலே தியானியுங்கள் என்கிறார்.
தாமம் கடம்பு படைபஞ்சபாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும்பொழு(து)எமக் கென்றுவைத்த
சேமம் திருவடி செங்கைகள்நான்(கு) ஒளி செம்மையம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடிரண்டு நயனங்களே.