பணிபவர் பட்டியல்
அம்பிகையினுடைய பாதங்களை வழிபடுவர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கு மென்று சொல்ல வருகிறார் பட்டர். சொல்ல வரும்போதே அம்பிகையினுடைய திருவடிகளை யாரெல்லாம் வணங்குகிறார்கள் என்பதையும் சொல்கிறார்.
நயனங்கள் மூன்றுடை நாதன் என்கிறார். இவனுக்கும் மூன்று நயனங்கள்; இவளுக்கும் மூன்று நயனங்கள். ஆனால் மூன்று கண்கள் உள்ளவர்களுக்கெல்லாம் அவர்தான் நாதன். எவ்வளவு பேர்களுக்கு மூன்று கண்கள் இருக்கின்றன? நம் அனைவருக்குமே இருக்கின்றன.
நெற்றிக்கண் என்று நாம் சொல்வது யோக மரபிலே ஆக்ஞா என்று சொல்லக்கூடிய நெற்றிப் பொட்டில் இருக்கக்கூடிய ஒரு சக்கரம். அந்த சக்கரம் முழு வீச்சிலே தூண்டப்பட்டவர்களுக்கு நெற்றிக்கண் இருப்பதாகப் பொருள். நெற்றிக் கண் என்றால் நெற்றியில் கண் ஒன்று தூலமாகத் திறக்கும் என்பது அர்த்தமல்ல. அங்கே என்ன தோன்றுகிறதோ அது நடக்கும். உள்ளபடியே நெற்றிக்கண்ணால் பார்ப்பதுதான் தொலைநோக்கு. அப்படி தங்கள் யோகமுறையினாலோ, பக்தியினாலோ, தவ முறையினாலோ தன்னுடைய மூன்றாவது கண்ணை முழு வீச்சிலே தூண்டிவிடுகிற ஞானிகள் எல்லோருக்கும் சிவ பெருமான்தான் நாதன்.
வேதங்கள் அம்பிகையினுடைய அரியாசனத்திற்கு நான்கு பீடங்களாக இருக்கின்றன என்று முன்னரே பார்த்தோம். ஊழிக்காலத்திலே பிரளய காலத்திலே ஆலிலையில் குழந்தையாக திருமால் மிதந்தார். அந்தக் குழந்தையை தாலாட்டியவள் பராசக்தி என்று புராணங்கள் பேசுகின்றன. நாரணனால் வணங்கப்பட்டவள் பராசக்தி. அயன் என்றால் நான்முகன். நான்முகன் திருமாலினுடைய உந்தியிலே தோன்றியவன். திருமாலையே தாலாட்டியிக்கிறான். அம்பிகை என்றால் அவனுடைய மகனான நான் முகனும் அம்பிகையின் அருளுக்கு பாத்திரமானவன் தான்.
அம்பிகையை வணங்கி, வழிபட்டு அவளுடைய ஆக்ஞையின்படி படைப்புத் தொழிலை ஏற்றுச்செய்தவன் பிரம்மா. இவர்களெல்லாம் வந்து அம்பிகையினுடைய திருவடிகளை வணங்குகிறார்கள். அதையே தங்களுக்கு உறுதியாக கொண்டவர்கள்.
கா என்றால் காடு, தமனியம் என்றால் தங்கம். ஸ்ரீபுரத்திலே இருக்ககூடிய தங்கமயமான கோட்டை அந்தக் கோட்டையில் இந்திர லோகத்தில் வசிக்கிற எல்லா இன்பங்களும் அங்கே இருக்கிறது. அவர்கள் படுத்துக் கொண்டு பார்க்க ஆடலும் பாடலும் நடக்கும்.
இந்திரலோகத்து இன்பங்களுக்காகத்தான் அம்பிகையை வணங்க வேண்டுமா? அங்கே பெண்கள் ஒரு பக்கம் அம்பிகையைப் பற்றிப் பாடிக் கொண்டிருப்பார்கள். அம்பிகையினுடைய நினைவிலே ஆடிக் கொண்டிருப்பார்கள். அடியவர்கள் இறை சிந்தனையில் அறிதுயிலில் இருப்பார்கள்.
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என்று சொன்னதுபோல் அந்த தங்கமயமான காட்டில் அம்பிகையை தியானித்துக் கொண்டு அன்பர்கள் ஸ்ரீபுரத்திலே இருப்பார்கள் என்று பொருள்.
இந்தப் பாடல் உலக இன்பங்களை மட்டுமல்ல, இந்திரலோக இன்பங்களை மட்டுமல்ல, அதைத் தாண்டிய வீடு பேற்றுக்கான நோக்கத்தையும் மனதிலே எழுப்பி விடுகிறது. உலக இன்பங்கள், இந்திர லோக இன்பங்கள் இரண்டையும் தாண்டியது பேரின்பமாகிய, முக்தியாகிய வீடுபேறு, சுற்றிலும் ஆடலும், பாடலும். நிகழ்ந்தாலும்கூட அந்த தங்க மயமான காட்டில் அம்பிகையினுடய நினைப்பு என்கிற தியானத்தில் தம்மை மறந்தும், தம்மைக் கடந்தும் அடியவர்கள் இருப்பார்கள். எந்த அடியவர்கள்?
சிவபெருமானாலும், வேதங்களாலும், திருமாலாலும், நான்முகனாலும் வணங்கப்படுகிற அம்பிகையினுடைய திருவடிகளை வணங்குபவர்கள்.
நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையைப்
பயன்என்று கொண்டவர் பாவையர்ஆடவும் பாடவும்பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.