அந்த(க)ப் பாதையை அடைத்திடு!
முதலில் அம்பிகையின் அழகை வர்ணித்தார். பிறகு தோற்றத்தை எழுதிக் காட்டினார், அதை மனதிலே குறித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். எப்போதுமே யாராவது ஒன்றைச் சொன்னார்கள் என்றால் அவர்களுடைய அனுபவத்தில் அதனால் என்ன நடந்தது என்று கேட்பதற்கு நமக்கு மிகவும் ஆர்வமாக இருக்கும். இதையெல்லாம் செய்தீர்களே, உங்களுக்கு என்ன கிடைத்தது? என்று அபிராமி பட்டர் இப்போது கேட்கிறார்.
அம்பிகையின் தோற்றத்தை மனதில் குறித்துக் கொண்டவுடனே இன்னொன்றும் அவருக்கு உள்ளுணர்வில் தோன்றியது. அம்பிகை என்ன விரும்புகிறாளோ அப்படி நடந்தார். அம்பிகை என்ன விரும்புகிறாள்? எமதர்மன் மறுபடியும் நம்மிடம் வருவதற்கான வழிகளை மறிக்க வேண்டும் என்று சொல்கிறாள். எமதர்மன் ஓர் உயிருக்குப் பக்கத்தில் அவர்களின் வினை வழியே வருவான்.
வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்கிற பகுப்பு மனதில் இருக்கும்வரை வினை சேரும். அம்பிகையினுடய திருமேனியை மனதில் குறித்துவிட்டால், அம்பிகைக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் கிடையாது. அம்பிகையினுடைய கோவிலாக நம் மனம் மாறிவிட்டால் நமக்கும் வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் கிடையாது. எல்லார் மேலும் சமமான அன்பு இருக்கும். அன்பின் வழியது உயிர்நிலை.
விருப்பு வெறுப்பு இல்லாத மனதில் வினைகள் கிடையாது. வினைகள் இல்லாத உயிரை எமதர்மன் நெருங்க முடியாது.
அடுத்து ஓர் அருமையான விஷயத்தைச் சொல்கிறார். கூந்தலிலே கொன்றை மலர்களை சிவ பெருமான் சூடியிருக்கிறார். அந்தக் கொன்றை மலர்களை வண்டு புகுந்து கிண்டுவதாலேயே எல்லாப் பக்கமும் தெறிக்கிறது. அத்தகைய திருமேனி கொண்ட சிவபெருமானின் உடலின் ஒரு பாகத்தைப் பறித்துக் குடி கொண்டவள். இந்தப் பாடலை மேலோட்டமாகப் பார்த்தால் சிவபெருமானின் சடாமுடியைப் பற்றி வர்ணிப்பதுபோல் தோன்றும். ஆனால் உள்ளே ஒரு அருமையான கருத்தை வைக்கிறார்.
வண்டு வடிவமாக ஒரு முனிவர் இருந்தார். வண்டு என்பதற்கு சமஸ்கிருதத்தில் பிருங்கி என்று பெயர். பிருங்கி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அவர் அதி தீவிரமான சிவபக்தர். எப்பேர்ப்பட்ட சிவபக்தி என்றால் அம்பிகையைக் கூட அவர் பொருட்படுத்த மாட்டார். சிவ பெருமானைத்தான் தனியாக வணங்க வேண்டுமென்று நினைப்பார்.
கைலாயத்திலே சிவபெருமானும், அம்பிகையும் தனித்தனியாக இருக்கிறபோது, சிவப்பெருமானை மட்டும் வலம் வந்து போய்விடலாம் என்று நினைத்தார். அது தெரிந்து அம்பிகை, பெருமானை நெருங்கி உட்கார்ந்தாள். இரண்டு பேரும் நெருங்கி சேர்ந்து உட்கார்ந்திருக்கிறார்கள்.
ஆனால் அவருக்குப் பிடிவாதம், சிவபெருமானை மட்டும்தான் வலம் வரவேண்டுமென்று. உடனே வண்டு வடிவம் எடுத்து சிவபெருமானை மட்டும் தனியாக வலம் வந்தார்.
இருவேறு உருவங்களாக இருப்பதனால்தானே இவரால் தனியாக வலம் வர முடிகிறது என்று தெரிந்து அம்பிகை தவம் செய்தாள். சிவபெருமான் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். உங்கள் உடலில் சரிபாதி வேண்டுமென்று கேட்டாள் அம்பிகை. வாம பாகத்தைப் பெற்றாள்.
இறைவனிடத்திலே வரம் பெறவேண்டுமென்றால் தவ வழியில்தான் பெறவேண்டும் என்பதற்காக தவம் புரிந்து அந்த வரத்தை வாங்கினாள்.
சிவபெருமான் இடதுபாகத்தைக் கொடுத்தார் என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். அபிராமி பட்டரோ உரிமையோடு இவள் பறித்தாள். உங்களுக்கு எதில் உரிமையிருக்கிறதோ அதைத்தான் நீங்கள் கைப்பற்ற முடியும். முழுத் தகுதியினாலே அவள் பெற்றது இடப் பாகம்.
சிவபெருமானுடைய மனைவி என்பதாலே அந்த உரிமை பற்றி கேட்டுப் பெற்றதல்ல. தன் கைகளிலே இருக்கக் கூடிய மலரம்புகளைத் தொடுத்து அதிகாரத்தைப் பயன்படுத்திப் பெற்றதல்ல. இறைவனிடம் வரம் வாங்க வேண்டுமென்றால் தவம் செய்ய வேண்டும். தான் தவம் செய்து இந்த வரத்தை வாங்கினாள்.
முனிவர்கள் ஒரு சிறிய செயலைச் செய்தாலும் அதனுடைய விளைவு நல்லதாக இருக்கும். தான் ஒருவர் சிவபெருமானை தனியாக வழிபட வேண்டுமென்று ஒருவர் நினைத்தார். அதற்கு அவர் செய்த உத்தி காரணமாக பாகம் பிரியாளாக அம்பிகை இடதுபாகத்தைப் பெற்றாள். நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதற்கு இதுதான் பொருள்.
வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
எதை நாம் போய் கேட்க வேண்டும் என்பது இறைவனுக்குத் தெரியும். கேட்கக்கூடியதைக் கேட்டால் முழுமையாகத் தருவாள். பிருங்கி முனிவர் தன்னுடைய வழிபாட்டிற்காக அம்பிகையை விலக்க நினைத்தார். யாராலும் விலக்க முடியாத அளவிற்கு இடதுபாகத்தை அதன் காரணமாக வவ்வினாள்.
மெய் என்றால் உடல் என்றும் அர்த்தம். உண்மை என்றும் அர்த்தம். உண்மையிலேயே பங்கைப் பறித்தாள்.
குறித்தேன் மனத்தில்நின் கோலம்எல்லாம்நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டுகிண்டி
வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான் ஒருகூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகு தும்பஞ்சபாண பயிரவியே.