வஞ்சகர் கூட்டு வேண்டாம்
அதுவரை தன்மேல் இருந்த பழிச் சொற்களுக்கு மறைமுகமாக பதில் சொல்லி வந்த பட்டர் இந்த இடத்தில் நேரடியாகச் சொல்கிறார்.
அவரை எல்லோரும் வாமபாக வழிபாடு செய்பவர். வாமார்த்தத்திலே ஈடுபடுபவர். துர்தேவதைகளை கும்பிடுபவர் என்று சொன்னார்கள். இந்த விநாடியில் அவர் சொல்கிறார். உனது கண்களைப் பார்க்கும்போது உனக்கும் எனக்கும் இருக்கிற உறவு தெரிகிறது. தாயே உன் விழியால் உன் அருளை நீ சொரிகிறாய்.
ஆனால் என்னுடைய வழிபாட்டு நெறியை நீ பார்ப்பாயேயானால் உனக்கு வேதம் சொல்லி நான் வழிபடுவது உண்மை யானால், தீய துர்தேவதைகளை வழிபாடு செய்கிற வழிக்கு நான் போகவில்லை என்பது உண்மையானால், வஞ்சகர்களோடு இனி எனக்கு கூட்டு வேண்டாம்.
இவர்கள் போய் பரிந்துரை செய்து எனக்கு ஒரு நன்மை நடக்க வேண்டாம். நீ வந்து என்னைக் காப்பாற்று என்று நேரடி விண்ணப்பத்தை வைக்கிறார். வழிபாடு எப்போதும் தூய்மை செய்வதாக இருக்கவேண்டும்.
நான்குபேர் வாழ்க்கை நாசமாகப் போகவேண்டும் என்று ஒருவன் பூûஐ செய்தான் என்றால் அது அவனையே திரும்பத் தாக்கும்.
எதிரே இருப்பவருக்கு தவ பலம் இல்லையென்றால் அவரின் வாழ்க்கையில் சில சேதங்களைச் செய்துவிட்டு அனுப்பியவருக்கே திரும்ப வரும்.
அவரை அதுவரை இன்னாரோடு கூட்டு என்று பேசிக் கொண்டிருந்தார்கள், இவர் மதுபானம் பருகக் கூடியவர். போதையிலே ஈடுபடக்கூடியவர். வாம மார்க்கத்திலே போகக்கூடியவர். இது ஒருவிதமான பார்வை.
இரண்டு வகை மனிதர்கள் மனதிலும் வஞ்சமிருந்தது, இரண்டுமே எனக்கு வேண்டாம் என்கிறார் பட்டர்.
அம்பிகை அதற்குமேல் பொறுக்கவில்லை. அவள் அணிந்திருக்கும் முத்துத்தோடு முக்தி தருபவள் என்பதைக் குறிக்கிறது. வைரம் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. அவளை நம்பிவிட்டால் உறுதியாக நம்மைக் காப்பாற்றுவாள்.
யோக ஆசனங்களில் வஜ்ராசனம் என்று ஒன்று உண்டு. உங்கள் முதுகுத் தண்டை உறுதிப்படுத்தும். வைரம் உறுதியின் அடையாளம். முத்து முக்தியின் அடையாளம். தன்னை அண்டியவர்களை அம்பிகை உறுதியாக காப்பாள் என்று எந்த வைரக்குழையைச் சுட்டி பட்டர் பாடினாரோ அந்த வைரக்குழையை எடுத்து அம்பிகை வானிலே எறிகிறாள்.
அது தாடங்கம், ஸ்ரீ சக்கர ரூபம், முழு பௌர்ணமியாக ஆகாயத்திலே விகசிக்கிறது.
அம்பிகையுடைய தோத்திரம், அவளுடைய திருவுருவ வர்ணனை, அவள் நிகழ்த்திய அற்புதம் ஆகியவை வரிசையாக அமைந்துள்ளன.
அந்த அற்புதம் பட்டரை ஆனந்தப் பரவச நிலைக்குக் கொண்டு போய் சேர்க்கிறது. இவர் உள்ளபடி சாக்த பக்தர்தானா என்று சிலருக்கு எழுந்த கேள்விகளை அம்பிகை ஒரு விநாடியில் அழித்து தன்னுடைய அடியார்களின் இவர் முக்கியமானவர் என்று அந்த வரிசையில் கூட்டி வைத்தாள்.
விழிக்கே அருளுண்(டு) அபிராமவல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்(டு)எமக்(கு)அவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்களேசெய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம்மோடென்ன கூட்டினியே.