அடுத்த பாடலில் மறுபடியும் ஊரைப் பார்த்து பிரகடனம் செய்வது போல் சொல்கிறார். என்னைப்போய் துர்தேவதை வழிபாட்டில் ஈடுபடுவன் என்று சொல்லி விட்டீர்களே, என்னைப் போய் வாமாச்சாரம் செய்பவன் என்று சொல்லிவிட்டீர்களே. சின்னச் சின்ன தெய்வங்களை நான் வணங்குகிறேன் என்று சொல்லிவிட்டீர்களே, இப்போது தெரிகிறதா? நீங்கள் சொல்லும் சின்ன தெய்வங்களெல்லாம் அவளுக்கு ஏவல் செய்பவர்கள். நான் அவளுடைய பிள்ளை பார்த்துச் சொல்லாமல் அம்பிகையைப் பார்த்தே விண்ணப்பிக்கிறார்.
சிலரை வெளிப்படையாகப் பார்த்தால் வஞ்சகர் என்று தெரியாது. ஆனால் நமக்கு தவபலம் இருந்தால் தவறான மனிதர் என்பது தெரிந்துவிடும். கூழைக்கும்பிடு போட்டு பக்கத்தில் வந்தால் தெரிந்துவிடும். மனதில் கறுப்பு காட்டிக் கொடுத்துவிடும். யாருக்கு மனதில் வஞ்சம் இருக்கிறதோ அவர்களோடு இணங்கிப் போக இயலாது.
சிலரைப் பார்த்து பெரும் செல்வத்தை சம்பாதித்து வைத்தீர்களே, எப்படிக் கிடைத்தது என்றால் எல்லாம் என்னுடைய கடும் உழைப்பிலே வந்தது என்பார்கள். அந்த செல்வம் ஒரு நாள் காணாமல் போய்விட்டதென்றால் எல்லாம் விதி என்பார்கள். சேர்த்தது இவர், கொண்டு போனது விதி, என்னிடம் இருப்பதெல்லாம் யார் கொடுத்தது? அபிராமி கொடுத்தது. இருந்தாலும் கவலையில்லை. போனாலும் கவலையில்லை. அது அவளுடையதென்றால் அவள் பார்த்துக் கொள்வாள். சில பேருக்குத்தான் இந்தப் பக்குவம் இருக்கும்.
வஞ்சகரோடு சேரமாட்டேன். அவர்களுடன் வம்பு வழக்குக்கும் போக மாட்டேன் என்றார் பட்டர். நமக்கே ஒரு பக்குவம் வரும். ஒரு ஆள் தப்பாக நடக்கிறான் என்றால் அவன் ஏன் அப்படி நடக்கிறான்? அவனிடம் தவ வலிமை இல்லை. அவனிடம் அருள் பலம் இல்லை. அவனிடம் சண்டை போட்டு என்ன ஆகப்போகிறது, தவ வலிமை உள்ளவர்களோடும் நான் பிணங்க மாட்டேன். தவ வலிமை இல்லாதவர்களோடும் நான் பிணங்க மாட்டேன்.
இதை என் சுய அறிவிலா தெரிந்து கொண்டேன். இந்த அறிவை எப்படி நீ எனக்குக் கொடுத்தாய், உன் கருணையினால் இதைத் தெரிந்து கொண்டேன். இந்தத் தெளிவு உன்னுடைய கருணையினாலே வந்தது என்கிறார்.
அணங்கே அணங்குகள் நின்பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோ(டு)
இணங்கேன் என(து) உன(து)என்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன் அறிவொன்றி லேன்என்கண் நீவைத்த பேரளியே.