மறக்கவும் முடியுமோ?
அபிராமி சமயம் என்றால் என்ன என்று விளக்கத்தைத் தருகிற பாடல் இது. இன்றைக்கும் உங்களுக்கு ஒரு பொம்மை தேவைபடுகிறதா. ஒரு பாடம் தேவைப்படுகிறதா.ஒரு உருவம் தேவைப்படுகிறதா, எல்லா இடத்திலும் இறைவனை தரிசிக்கிற பக்குவம் உங்களுக்கு வர வில்லையா என்று உருவ வழிபாடு செய்பவர்களைப் பார்த்து சிலர் பேசுவார்கள்.
சக்கரங்களாகிய தாமரை மலரில் வீற்றிருக்ககூடிய அபிராமி தேவியே, நான் உலகத்தில் எந்தப் பிரபஞ்சத்தைப் பார்த்தாலும் நான் பார்த்துக் கொண்டிருப்பது அம்பிகையின் திருவுருவம். அவளுடைய ஜடா மகுடத்தினை கிரீடத்தைப் பார்க்கிறபோது முழு பிரபஞ்சமுமே எனக்குத் தெரிகிறது.
அந்த உருவத்திற்குள் நுழைய நுழைய அந்த உருவமே அருவமாகிய வெளிக்குக் கொண்டுபோய் ஒன்றை உறுதியாக பற்றிக் கொண்டு நிற்கும். அகங்காரம், நீ நினைப்பதைத் தவிர எல்லாமே தப்பு என்று சொல்லும். ஓர் எல்லையைத் தாண்டிப்போகாமல் அந்த காரணங்கள் நான்கும் தடுக்கின்றன. அம்பிகையின் தரிசனம் கிடைத்த மாத்திரத்தில் அந்த எல்லையைக் கடந்து எல்லாமே வெளியில் போய் கடந்து விடுகின்றன.
நான் உருவ வழிபாடு செய்வதாக நினைக்கிறாய், இந்த உருவமே என்னை அருவ வழிக்கு கடத்திக்கொண்டு போகிறது. அபிராமி அம்மையின் தோற்றம் ஒரு விநாடி மறைந்து, இந்த வெளியே அவளுடைய வடிவமாகத் திகழ்கிறது. இந்த சாமர்த்தியத்தை நான் எப்படி மறப்பேன் என்கிறார் பட்டர்.
ஓர் உயிருக்கு எல்லா இடத்திலும் பரம்பொருள் தரிசனம் சித்திக்க வேண்டுமென்றால் அதற்கு ஆயிரம் ஞானங்கள் வேண்டும், கர்ம வினைகள் அகலவேண்டும், பற்றுகள் வழியே கழிய வேண்டும். தெளிவு பறக்க வேண்டும். ஆனால் அபிராமியோ என்னைப் பார். நான் உனக்கு காட்ட வேண்டியதைக் காட்டுகிறேன் என்கிறாள்.
அம்பிகையினுடைய திருமேனியை தரிசிக்கிறபோது அது பிரபஞ்சம் முழுவதும் முற்றிலுமாக விரிந்து எல்லாம் அவளாகவும், அவளே எல்லாமாகவும் நிற்கிறபோது உருவ வழிபாடு என்கிற எல்லையை, எனது அந்தக் கரணங்கள் விதிக்கிற எல்லையை இந்த உயிர் தானாகவே தாண்டி விடுகிறது என்று அபிராமி பட்டர் இந்தப் பாடலில் அருளிச் செய்கிறார்.
அவளைப் பற்றிய தோத்திரம், அவளைப் பற்றிய வர்ணனை, அவள் நிகழ்த்திய அற்புதம், அந்த அற்புதத்தினால் விளைந்த பரவசம், அந்தப் பரவசத்தினால் இவர் எடுக்கிற தெளிவு, நான் யாரென்று செய்கிற பிரகடனம், அம்பிகை வழிபாடு என்ன நிகழ்த்தும் என்ற உபதேசம் என்று ஆறும் இந்தப் பாடலிலே அமைந்திருக்கின்றன.
அளியார் கமலத்தில் ஆரணங்கேஅகி லாண்டமும்நின்
ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும்
களியாகி அந்தக் கரணங்கள்விம்மிக் கரைபுரண்டு
வெளியாய் விடின்எங்ங னேமறப் பேன்நின் விரகினையே.