பிறவா வரம் பெறுங்கள்!
இன்றைக்கு நாம் கோவிலுக்குப் போகிறோம் என்றால் பூஜைக்குத் தேவையான எல்லாமே உடனடியாக கிடைக்கிறது. கோவில் வாசலிலேயே அர்ச்சனைத் தட்டு கிடைக்கிறது. முன்பே கட்டிவைத்த பூமாலை காத்திருக்கிறது. ஏன் புதுப்பூ கொண்டு வரவில்லையென்று கடவுள் நம்மிடம் கேட்கப்போவதும் இல்லை. கேட்டால் நாம் பதில் சொல்லப் போவதுமில்லை. வழிபாட்டில் மிகவும் முக்கியமான அம்சம் சிரத்தை. சிரத்தையுடன் செய்கிற பக்தியில் உருக்கமும் நெகிழ்ச்சியும் பெருக்கெடுக்கும்.
“விரவும் புதுமலர் இட்டுநின்பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்சவல்லார்”
சிரத்தையுடன் புதிய மலரைத் தேடிக் கொணர்ந்து அம்பாளை வழிபடுங்கள் என்கிறார் அபிராமி பட்டர். கடவுளை வழிபடுவதற்கு கால நேரம் கிடையாது. மனதில் அம்பிகையை நிலை நிறுத்திக் கொண்டால் 24மணி நேரமும் அந்த வழிபாடு நடந்து கொண்டே இருக்கும்.
இதே திருக்கடவூரில் நின்றுகொண்டுதான் திருநாவுக்கரசர் எப்படி வழிபாடு செய்ய வேண்டுமென்று நமக்கு சொல்லித் தருகிறார்.
பெரும்புலர்க் காலை மூழ்கி பித்தர்க்கு பத்தர் ஆகி
அரும்பொடு மலர்கள் கொய்து ஆங்குநல் ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பி நல்விளக்குத் தூபம் விதியினால் இடவல்லர்க்கு
கரும்பினில் கட்டிபோல்வார் கடவூர் வீரட்டனாரே
இந்த ஈடுபாட்டோடு யார் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு வானவர்கள் வந்து வணங்கக்கூடிய பதவி கிடைக்கும். வெள்ளை யானையில் வருவார்கள். ஆகாய கங்கைக்கு தலைவர் ஆவார்கள். குலிசாயுதம் அவர்கள் கைவசமாகும். கற்பக விருட்சம் அவர்களுக்கே சொந்தம். இதன்மூலம் ஈடுபட்டு அபிராமியிடம் பக்தி செலுத்துபவர்கள் இந்திர பதவி பெறுவார்கள் என்கிறார் அபிராமி பட்டர்.
பூவில் வாசமிருக்கிறது என்றுதான் நாம் நினைக்கிறோம். அம்பிகையின் திருவடிக் கமலங்களில் பட்டு அந்த வாசத்தில் தோய்வதனாலேயே புதிய மலர்களுக்கு வாசனை மிகுகின்றன என்கிறார் அவர்.
விரவும் புதுமலர் இட்டுநின்பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்சவல்லார்இமை யோர்எவரும்
பரவும் பதமும் அயிரா வதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக்காவும் உடையவரே.