என்ன செயல் செய்தாலும் மனதில் ஒரு நிறைவு இருக்க வேண்டும். ஒரு தொழில் செய்தாலும், சமையல் செய்தாலும், வாசலில் ஒரு கோலம் போட்டாலும் நிறைவு இருக்க வேண்டும். ஆனால் வாழ்க்கையின் உச்சகட்டமான நிறைவு எது என்றால் அம்பிகை வழிபாடு. அம்பிகையைத் தொடர்ந்து வழிபடுவதால் ஏற்படும் நிறைவு எத்தகையது என உணர்த்துவது இந்தப் பாடல்.
பாடல், உடையானை என்று தொடங்குகிறது. அவள் தான் உடையவள் நாமெல்லாம் உடைமைகள், எப்போதுமே உடையவர்களுக்குத்தான் உடமைகள் மீதான கவனம் இருந்துகொண்டே இருக்கும். சராசரியாக ஒரு புள்ளி விபரம் எடுத்தால் இந்தியர் ஒரு நாளைக்கு ஏழு முறையாவது தனது செல்ஃபோனைத் தேடுவார். ஏனென்றால் அது அவருடைய உடைமை. அவர் உடையவர். உடைமைக்கு கவலையே கிடையாது. அதைக் காப்பாற்றுவது, பொறுப்பேற்பது அனைத்துமே உடைய வருடைய கடமை. இந்த மண்ணில் பிறந்த நமக்கெல்லாம் சேர்த்து கவலைப்பட ஒருத்தி உட்கார்ந்திருக்கிறாள். ஆனால் அந்தத் தெளிவு இல்லாததாலே வேண்டாத கவலைகளை நாம் இழுத்துப் போட்டுக் கொள்கிறோம். அதனால்தான் அம்பிகைக்கு புவன முழுதுடையாள் என்று பெயர்.
அபிராமி பட்டர், அம்பிகையை சிவந்த பட்டாடை உடுத்திய தோற்றத்தில் மனதில் நிலை நிறுத்திகிறார். அம்பிகைக்கு சிகப்புப்பட்டு சார்த்திப் பார்ப்பதிலே அவருக்கு அவ்வளவு சந்தோஷம். சின்னஞ்சிறிய மருங்கினில் சார்த்திய செய்யபட்டு என்று பிறிதோரிடத்தில் சொல்வார். அவளுடைய செஞ்சடையில் நிலா ஒளிர்கிறது. தீயவர்களின் நெஞ்சங்களில் சென்று சேராதவளாகவும் அபிராமி இருக்கிறாள்.
அவளுடைய இடை நூலைவிட மெல்லியதாக இருக்கிறது. இறைவனின் இடப்பாகத்தில் இருக்கிறாள்.
இனிமேல் என்னை அவள் படைக்கப் போவதில்லை, முக்தி கொடுத்து தன்னுடைய பாதக்கமலங்களிலே சேர்த்துக் கொள்ளப் போகிறாள். எப்படி அம்பிகை இனி என்னைப் படைக்க மாட்டாளோ அதைப்போல் உங்களையும் படைக்காத வண்ணம் அவளுடைய திருவடியில் நீங்கள் ஈடுபடுங்கள் என்று சொல்கிறார் அபிராமி பட்டர்.
எனக்கு ஒன்று கிடைத்துவிட்டது. உங்களுக்கும் இது கிடைக்கட்டும் என்ற பரந்த மனதோடு பட்டர் பாடிய பாடல் இந்தப் பாடல்.
உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதிசெஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத் தயங்குநுண்ணூல்
இடையாளை எங்கள்பெம் மானிடையாளைஇங்(கு) என்னைஇனிப்
படையாளை உங்களை யும்படையாவண்ணம் பார்த்திருமே.