எங்கெங்கும் அவள் காட்சி
காசைக் கரியாக்குவது என்றால் அது பட்டாசு வெடிப்பதும் வாணவேடிக்கை விடுவதும் என்று சிலர் சொல்வார்கள். தெரிந்து தான் செய்கிறோம், நாம் விடும் வாணங்கள் நிலையாக ஆகாயத்தில் நட்சத்திரமாக இருக்கப் போவதும் கிடையாது. ஒரு சில விநாடிகள் ஆகாயத்திலே மின்னி மறையக்கூடிய வாண வேடிக்கையை பார்த்துவிட்டுப் பின் கண்களை மூடினால் உள்ளே அது மின்னிக்கொண்டு இருக்கிறது. அப்படியிருக்கிறபோது ஆயிரம் கோடி சூரியப் பிரகாசத்தோடு தோன்றுகிற அம்பிகையை ஆகாயத்தில் பார்த்தவர் அபிராமி பட்டர்.
அவளுடைய திவ்ய தரிசனமும், அவள் தனது தாடங்கத்தை சுழற்றி ஆகாயத்தில் எறிந்ததையும் கண்ணாரப் பார்த்தார். ஒரு முறை அந்தக் காட்சி அவருக்குக் கிடைத்தது. ஒவ்வொரு விநாடியும் அந்தக் காட்சியே கண்களில் நிறைந்திருக்கிறது. அந்த அனுபவத்தைத்தான் இந்தப் பாடலில் அவர் சொல்கிறார்.
எந்தத் திசையில் பார்த்தாலும் அவருக்கு இந்த ஒரு காட்சிதான் தெரிகிறது.
ராமகிருஷ்ண பாரமஹம்சர் சதா சர்வ காலமும் தெய்வீக சிந்தனையிலேயே திளைத்திருந்ததற்கு என்ன காரணம்? காளியை கண்ணாரக் கண்டார். திருநாவுக்கரசு சுவாமிகள் கைலாய மலைமேல் ஏறுகிறார்.
ஆளும் நாயகன் திருக்கயிலை கண்டல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்
என்ற உறுதியோடு போகிறார். ஓர் அந்தண வடிவத்திலே சிவபெருமான் தோன்றுகிறார். இந்தக் குளத்தில் மூழ்கு என்று ஓர் இடத்தைக் காண்பிக்கிறார். எழுந்தால் திருவையாற்றில் எழுகிறார். திருவையாற்றில் எல்லாப் பக்கமும் சிவசக்தி தரிசனமாகவே தெரிகிறது. எதைப் பார்த்தாலும் இறைவனாகவே தெரிகிறது. இரண்டு யானைகள் சேர்ந்து வந்தால் அது சிவ சக்தியாக தெரிகிறது. எல்லா உயிர்களுக்குள்ளும் தெய்வ தத்துவம் இயங்குகிறது என்ற காட்சி தெரிந்துவிட்டால் நம்முடைய கண்களுக்கு நல்லவர்கள் கிடையாது. தீயவர்கள் கிடையாது. எல்லாம் தெய்வ சொரூபம்.
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடு என்கிறார் வள்ளலார். ஒன்றில் அளவுகடந்த ஈடுபாடு வந்து விட்டதென்றால் எதைப் பார்த்தாலும் அதுவாகவே தோன்றுவது இயற்கை. எப்படி திருநாவுக்கரசருக்கு காணுமிடமெல்லாம் சிவ சக்தியாகவே காட்சி சித்தித்ததோ அதுபோல் ஒருமுறை அம்பிகையை ஆகாயத்திலே நேர் கொண்டு பார்த்துவிட்ட அபிராமி பட்டருக்கு எதைப் பார்த்தாலும் அம்பிகை தரிசனமாகவே நேர்கிறது.
கையிலே வைத்திருக்கிற பாசம், அங்குசம் கண்ணுக்குத் தெரிகிறது. அவளுடைய கைகளில் மலர்க் கணைகள் இருக்கின்றன. அவற்றைச் சுற்றி வண்டுகள் மொய்த்துக்கொண்டே இருக்கின்றன. அந்தத் தோற்றமே துன்பங்களுக்குத் தீர்வாகவும் ஒளிர்கிறது.
நாம் தேடுகிற நிவாரணங்கள் எல்லாமே தற்காலிக நிவாரணங்களாகத்தான் இருக்கின்றன. ஒரு பிரச்சனைக்கு என்று யாரிடமாவது போனால் அதை பைசல் பண்ணுகிறேன் என்பார்கள். கொஞ்ச நாளைக்கு தள்ளிப் போடலாம் என்று அர்த்தம். ஆனால் அம்பிகை பிரச்சனைக்கு நிலையான தீர்வைத் தருகிறாள். நீதி மன்றத்தில் தீர்ப்பு என்று ஏன் சொல்லுகிறார்கள் என்றால் அதோடு அந்தப் பிரச்சனை தீர்ந்தது என்று அர்த்தம். அதன் பிறகு மேல் முறையீடு என்ற ஒன்றை நாம் கண்டு பிடித்தோம். தீர்ந்ததுபோல் இருக்கிறது. ஆனால் அம்பிகை ஒரு சிக்கலை கண்கொண்டு பார்த்துவிட்டால் அது அத்தோடு முடிந்தது என்று அர்த்தம்.
அவருடைய திருமேனியும், சிற்றிடையும் எல்லாப் பக்கமும் தெரிகிறது. குங்குமம் அப்பிய அம்பிகையினுடைய திருமுலைகளும், அந்த முலைகளின் மேலான முத்து மாலையும் அவர் கண்களுக்குத் தோன்றுகின்றன.
ஆகாயத்திற்கும், பூமிக்குமாக எழுந்துநின்ற அம்பிகைதான் எல்லா உயிர்களிலும் ஒளிவீசுகிறாள் என்ற தெளிவு அவருக்கு வந்து சேர்கிறது.
ஒரு காலத்தில் நாம் விமானப் பயணம் மேற் கொண்டால் பரிசோதனைக்காக பெட்டியில் இருக்கும் அனைத்தையும் எடுத்து வெளியில் போட்டு, மறுபடியும் அனுப்புவார்கள். தற்போது அதை ஒரு நிமிடத்தில் உள்ளே திணித்து ஸ்கேன் செய்து பார்த்துவிடுகிறார்கள். உள்ளே என்ன இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரிகிறது. நூறு பெட்டிகள் இருந்தாலும் உள்ளீடு என்ன என்பது ஸ்கேனிங்கில் போல் ஆகிவிட்டது. கோடி உயிர்களைப் பேரைப் பார்த்தாலும் உள்ளுக்குள்ளே இடம் பெற்றிருப்பவள் அம்பிகை என்று தெரிகிறது.
பார்க்கும் திசைதொறும் பாசாங்கும் பனிச்சிறைவண்(டு)
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும்கரும்பும்என் அல்லல்எல்லாம்
தீர்க்கும் திரிபுரை யாள்திருமேனியும் சிற்றிடையும்
வார்க்குங் குமமுலை யும்முலைமேல்முத்து மாலையுமே.