எட்டாத அற்புதம் எளிதில் வெளிப்படும்…
திரும்பத் திரும்ப அம்பிகையினுடைய திருவுருவத்தை நம் மனதிலே அவர் எழுதிக் கொண்டே வருகிறார். எந்தத் திருவுவை எல்லா இடங்களிலும் அவர் காண்கிறாரோ அதைத்தான் தேவரும், மூவரும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். தேவர்களுக்கும், மூவர்களுக்கும் தென்படாதது பக்தர்களுக்கு பளிச்சென்று தென்படுகிறது.
சங்காலே செய்யப்பட்ட வளையல்களுக்கு சூடகம் என்று பெயர். அம்பிகையின் கைகள்தான் நமக்கு முதலில் தெரிகிறது.
அம்மா கடைத்தெருவிற்குப் போய்விட்டு வந்தால் குழந்தை அம்மாவின் முகத்தைப் பார்க்காது. கைகளைத்தான் பார்க்கும். அம்மாவின் காலடிச் சத்தம் கேட்டால் அம்மா வந்தது தெரியும். இரண்டாவதாக, அவள் என்ன வாங்கி வந்திருக்கிறாள் என்று கைகளைப் பார்க்கும்.
அவளை திருமால் தேடுகிறார். பிரம்மா தேடுகிறார், தேவர்கள் எல்லாம் தேடுகிறார்கள் அவளோ சூலத்துடன் காலன் வரும் வேளையில் தன் அடியார்களைக் காக்க ஓடோடி வருகிறாள்.
பால், தேன் வெல்லப்பாகு மூன்றையும் அம்பிகையினுடைய குரலுக்கு உவமை சொல்கிறார். இதற்கு ஒரு காரணம் உண்டு. பால்போன்ற மொழி குழந்தைத் தன்மைக்கு அடையாளம். ஒரு குழந்தை பேசினால் குணத்திற்கு அடையாளம். அவளுடைய மொழி தேன்போல் இனிமையானதாக இருக்கிறது. இந்த மூன்று குணங்களை இந்த மூன்று உவமைகளிலே சொல்கிறார் பட்டர்.
தன் அடியவர்களுக்கு மரணம் பயம் வருகிறபோது அம்பிகை தன்னுடைய பாதங்களை வேகவேகமாக பதித்து வருகிறாள். அஞ்சேல் என்று தன்னுடைய வளை பொருந்திய கையை நீட்டிக் கொண்டே வருகிறாள்.
மாலையன் தேட மறைதேட வானவர் தேடநின்ற
காலையும் சூடகக் கையும்கொண்டு கதித்தகப்பு
வேலைவெங் காலன்என் மேல்விடும்போது வெளிநில கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும்போலும் பணிமொழியே.