அவரும் உடன்வருவார்
கடவுளுக்கும் நமக்குமான உறவில் இரண்டு நிலைகள் மிகவும் முக்கியமானவை. ஒன்று உலகில் ஏற்படுகிற நிலை. இன்னொன்று அந்தரங்கமான நிலை. தனிப்பட்ட நிலையில் ஓர் உயிருக்கும் இறைவனுக்கும் இருக்கக்கூடிய நெருக்கத்தை. இந்தப் பாடலில் சொல்கிறார்.
எங்கெல்லாம் தாமரை இருக்கிறதோ அங்கெல்லாம் அம்பிகை இருக்கிறாள். அவளுடைய ஞானசக்தி கலைமகளாகச் செயல்படுகிறது. அவளுடைய சுபிட்ச சக்தி மகாலெஷ்மியாக இயங்குகிறது.
யோக மரபில் மனித உடலில் இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான சக்கரங்கள் தாமரை மலர்களாய் இருக்கின்றன. அத்தனை தாமரைகளிலும் அவள் வீற்றிருக்கிறாள். உள்ளமாகிய தாமரையில் வீற்றிருக்கிறாள்.
மூலாதாரம் தொடங்கி சகஸ்ரஹாரம் வரையிலான சக்கரங்கள் அனைத்திலும் வீற்றிருக்கக் கூடிய அம்பிகையை கமலத்திருவே என்று சொல்கிறார்.
உடலில் சக்கரங்கள் திறக்கின்றன என்றால் அந்தத் திறப்பை, அந்தச் சிறப்பை அவளே கொடுக்கிறாள்.
அம்பிகை தன் திருவடிகளை நம் சென்னியிலே அவள் பதிக்கிறாள். சிவபெருமான் ஓடோடி வந்து முக்தி தருகிறார். காசியிலே இறக்க முக்தி என்று சொல்வார்கள். காசியில் ஓர் உயிர் பிரிகிறது என்றால் அந்த உயிரைத் தூக்கி மடியில் போட்டுக்கொண்டு விசாலாட்சி தன் பட்டாடையினாலே விசிறுவாள். சிவபெருமான் காதிலே பஞ்சாட்சரத்தைச் சொல்லி மோட்சம் தருவார்.
வாழ்க்கை, பிறப்பு என்றால் என்ன என்று திருவள்ளுவரைக் கேட்டால்,
தூங்குவது போலும் சாக்காடு தூங்கி
விழிப்பது போலும் பிறப்பு
என்றார். துரியம் என்றால் நான்கு என்று அர்த்தம். விழிப்பு நிலை, கனவு நிலை, உறக்க நிலை என்று இருக்கிறது. இவை மூன்றையும் தாண்டிய நான்காவது நிலை, துரியாதீதம் என்று நம்முடைய மரபில் சொல்வார்கள்.
ஒரு மனிதனுக்கு உயிர் பிரிகிறபோது விழிப்பு நிலையில் பிரிந்தால் அந்த உயிருக்கு மறு பிறப்பு கிடையாது. முழு விழிப்புணர்வோடு இந்த உடலை உதறிவிட்டுப் போகிறார்கள் என்றால் அவர்களுக்கு மறு பிறவி இல்லை. பொதுவாக யாராவது இறந்தால், நீண்ட நாட்களுக்கு காரியங்கள் செய்வார்கள். அந்த உயிர் சரீரத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு அவ்வளவு நாட்கள் ஆகும். ஆனால் யோகிகள், ஞானிகள் இந்த உடலை உதறிய மறுவிநாடி சமாதி அடைகிறார்கள். என்ன காரணம்? துரிய நிலையிலே அவர்கள் இருக்கிறார்கள்.
உயிர் பிரிகிறபோது இந்த நிலையைக் கொடு என்று சொல்கிறார் பட்டர்.
சக்தியைத் தனியாக, சிவனைத் தனியாகக் கும்பிட வேண்டிய அவசியமே இல்லை. அம்பிகை வந்தாலே அப்பன் வந்துவிடுகிறார், அம்பிகை வந்து பாதங்களை வைத்தால் அவர் உடனே மோட்சத்தைக் கொடுக்கிறார்.
உயிர் உடம்போடு அற்று அறிவு மறந்துவிடக்கூடாது. உள்ளபடியே உயிர் பிறவாநிலையை அடைய வேண்டுமென்றால் உயிர் பிரிகிறபோது மறதி வரக்கூடாது. மயக்கம் வரக்கூமாது. யார் தருகிறார்கள்? அம்பிகையும், ஈசனுமாகத் தருகிறார்கள்.
எங்கே ஆயிரம் வேலைகள் இருந்தாலும் அறிவு மறக்கும்போது என் முன்னே வரவேண்டும். உனக்கு சிரமமாக இருந்தாலும்கூட வந்துவிடு என்கிறார் பட்டர். அம்பிகைக்கு அதில் சிரமமும் இல்லை. அதற்காகத் தான் காத்திருக்கிறாள்.
உயிருக்கும், இறைவனுக்கும் இருக்கக்கூடிய அந்தரங்கமான நெருக்கம் இந்தப் பாடலில் பேசப்படுகிறது. எல்லாம் எமதர்மான் வருகிறபோது நீ வா, வெளியில் வா என்று அருணகிரிநாதர் அழைக்கிறார். இவர் அழைக்கிறார், எல்லோரும் அழைக்கிறார்கள். எமனை விரட்டுவதற்கல்ல, அந்த உயிர் போகவேண்டிய இது எமலோகம் அல்ல சிவ லோகம் என்பதனாலே.
துரிய நிலை தாண்டிய விழிப்புணர்வில் இந்த உடம்பைவிட்டு இந்த உயிர் போகிறது என்ற முழு விழிப்புணர்வோடு ஒரு கதவைத் திறந்துகொண்டு வெளியில் போவதுபோல் என்னைக் கைப்பிடித்து அழைத்துக் கூட்டிக்கொண்டு போவதற்கு நீ வரவேண்டும் என்று கேட்கிறார்.
துரிய நிலை தாண்டிய விழிப்புணர்வில் இந்த உடம்பைவிட்டு இந்த உயிர் போகிறது என்ற முழு விழிப்புணர்வோடு ஒரு கதவைத் திறந்துகொண்டு வெளியில் போவதுபோல் என்னைக் கைப்பிடித்து அழைத்துக் கூட்டிக்கொண்டு போவதற்கு நீ வரவேண்டும் என்று கேட்கிறார்.
இதுதான் ஓர் உயிருக்கு இறைவன் செய்யக்கூடிய அதிக பட்ச உதவி.
சிறக்கும் கமலத் திருவேநின்சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும்நின் துணைவரும் நீயும் துரியும்அற்ற
உறக்கம் தரவந்(து) உடம்போ(டு)உயிர்உற வற்றறிவு
மறக்கும் பொழுதென்முன் னேவரல்வேண்டும் வருந்தியுமே.