உன்னுடைய வீடு உள்ளே வா
இன்றைக்கும் நாம் உட்கார்ந்து அபிராமி அபிராமி என்று பேசுகிறோம் என்றால் அது இன்றைக்கு வந்ததல்ல, பல பிறவிகளாக அவளுடைய திருவடிகளை நினைத்து, அவளுடைய நாமத்தை ஒரு முறை சொல்லுகிற புண்ணியம் கிடைக்கும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறார் பட்டர். ஏற்கனவே இந்த உயிரில் இருந்தவள்தான் அவள், நம்முடைய கர்ம வினைகள் காரணமாக நாம் மறுபடியும் பிறந்திருக்கின்றோம். அவள் பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இந்த உயிருக்கு எப்படியாவது உய்வு தந்துவிடுவதென்று நேரம் பார்த்து நம்முடைய மனதில் அவளாக வந்து உட்கார்ந்து கொள்கிறாள்.
ஒரு பழைய வீடு உங்களுக்கு மறுபடியும் கிடைக்கிறது. பூர்வீக வீட்டிற்குப் போகிறபோது எவ்வளவு சுதந்திரமாக உள்ளே போவீர்களோ அப்படி நம்முடைய மனதிற்குள் அம்பிகை வருகிறாள். அவள் எப்படி வந்து அமர்ந்தபிறகு கிடைக்காத விஷயமே இனி கிடையாது. அனைத்துக்கும் உடையவளே, உள்ளே இருக்கிற போது எது கிடைக்காமல் போகும்.
என்ன வேண்டுமோ கிடைக்கும். சென்றடையாத திருவுடையானை என்று தேவாரம் சிவபெருமானை பேசுகிறது. நம் செல்வங்களுக்கு ஓர் எல்லையிருக்கும். அவருக்கு எல்லையே காட்ட முடியாது.
இவள் எனக்குள் அமர்ந்தபிறகு எனக்குப் பொருந்தாத ஒரு பொருள் இல்லை என்கிறார்.
விண்மேவும் புலவர் என்கிறார் மண்ணுலகில் தமிழ் படித்துவிட்டு இறந்தபிறகு ஆகாயத்தில் இருக்கும் புலவர் என்று பொருளல்ல. தேவர்களைத்தான் விஐ மேவும் புலவர் என்று சொல்கிறார்.
கம்ப ராமாயணத்தில் வீடணனும் கும்பகர்ணனும் பேசிக் கொள்கிறார்கள். திடீரென்று தன்னைப் பார்ப்பதற்கு விபீஷணன் வந்ததும் கும்பகர்ணனுக்கு அதிர்ச்சி. நீ ஏன் என்னிடம் வந்தாய்? அமுதத்தை சாப்பிட்டவர்கள் யாராவது நஞ்சை சாப்பிட வருவார்களா? என்று கேட்கிறான் கும்பகர்ணன்.
கவிஞரின் அறிவுமிக்காய்
காலன்வாய் களிக்கின்றோம் பால்
நவையுற வந்தது என்?
நீ அமுதுண்பாய், நஞ்சுண்பாயோ
என்று கேட்கிறான்.
விபீஷணனைப் பார்த்து கும்பகர்ணன் சொல்கிற வார்த்தைகளாக கம்பன் சொல்கிறான்.
எல்லாவற்றிற்குள்ளேயும் ஒளிந்திருக்ககூடிய உண்மைப் பொருளைக் காண்பவன் கவி. ரவி காணாததை கவி காண்பான் என்று ஒரு பழமொழி உண்டு. சூரியனுக்கும் தெரியாததை ஒரு ரிஷி கண்டுபிடிப்பாராம். ரிஷிகள், தேவர்கள் அனைவரும் ஆகாயத்தில் இருக்கிறவர்கள். அவர்களைக் கவிஞர்கள் என்று சொல்வது வழக்கம்.
வேலை என்றால் கடல். கடலிலே கிடைத்த மருந்து அமுதம். நம் மனதில் வந்து இருக்கக்கூடிய அம்பிகை தேவர்களுக்கு கடலில் இருக்கக்கூடிய மருந்தாகிய தேவாமிர்தத்தைக் கொடுத்தவள், அமுதத்தைத் திரட்டி ஒரு குடம் ஆக்கினார்கள். அந்தக் குடமே இறைவன் ஆனது. முதலில் அந்தக் குடத்தை எடுத்து விநாயகர் மறைந்து வைத்தார். கள்ளவாரணப் பிள்ளையார் என்று அவருக்குப் பெயர்.
இன்று யாராவது ஒரு பொருள் காணாமல் போனால் வீட்டில் எங்கே வைத்தோம் என்பது தெரியாவிட்டால் கள்ளவாரணப் பிள்ளையார்க்கு வேண்டிக் கொள்ளுங்கள் என்பார்கள். அவர் அமுதத்தை மறைத்தவர், திருப்பிக் கொண்டுவந்து கொடுத்து விடுவார் என்று நம்பிக்கை உண்டு.
அவர் அதை மறைத்தார், அந்தக் குடமே கடமானது. அதுவே சிவமானது, அங்கிருக்கக்கூடிய ஈசனே அமிர்தகடேசன், அப்போது எதைப் பரிமாறினால் அம்பிகை? திருக்கடையூரில் அமிர்த புஷ்கரணி என்று ஒரு குளம் உண்டு. அதில் அமுதத்தை தருவித்து அதைப் பரிமாறினாள். திருக்கடையூரிலே சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் செய்பவர்களுக்கு ஆயுள் வளரும் என்பதற்கு இதுவும் ஒரு காரணம். அமுதத்தை அம்பிகை அந்தத் திருக்குளத்திலே உண்டு பண்ணி எல்லோருக்கும் பரிமாறினாள். கிடைத்தது சமுத்திரத்தில், அவள் தருவித்தது திருக்குளத்தில்.
வருந்தா வகைஎன் மனத்தாமரையினில் வந்துபுகுந்(து)
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனிஎனக்குப்
பொருந்தா தொருபொருள்இல்லைவிண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.