உயர்ந்த பதவிகள் அவள் தருவாள்!
அம்பிகையை வணங்கினால் என்ன கிடைக்கும் என்று நிறைய இடங்களில் அபிராமி பட்டர் சொல்லிவிட்டார். இப்போது இவையெல்லாம் கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் அம்பிகையை வணங்க வேண்டிய அவசியம்கூட இல்லை என்றார்.
மெல்லிய இடை கொண்டவள், மின்னல் போன்றவள், யோகாப்பியாசம் செய்யக்கூடியவர்களுக்கு மின்னல்போல் தோற்றம் தரக்கூடியவள் அம்பிகை. மெல்லிய திருமுலைகள் கொண்டவள், தங்கம் போன்றவள், அவளைத்தான் சிவபெருமான் அணைத்தான். வேதங்கள் எப்படியெல்லாம் முறையாக அம்பிகையை வழிபடுகிறதோ அப்படியெல்லாம் வழிபடக்கூடிய அடியவர்கள் உள்ளனர். அந்த அடியவர்களை வணங்கினாலே இந்த பதவி கிடைத்துவிடும்.
வெண் பகடு என்றால் வெள்ளி நிற யானை, ஐராவதம். ஐராவதத்தில் ஏறக்கூடிய உரிமை இந்திரனுக்கு உண்டு. பலவிதமான வாத்தியங்கள் முழங்க முழங்க அவன் அதில் ஏறுகிறான். பல்லியம் என்ற சொல்லுக்கு பல வாத்தியங்கள் என்று பொருள்.
நமது தமிழ்த் திருமணங்களில் நான்கு வகையான இசைக்கருவிகளைத் தொடர்ந்து இசைத்துக் கொண்டிருந்தார்கள். துந்துபி என்றொரு இசைக்கருவி இருக்கும். வெண் சங்கு, இன்றைக்கு அதை நாம் வேறு இடத்தில் ஊதுகிறோம். ஆனால் முறையாக பழைய மரபுகளில் திருமண வீடுகளில் சங்கு ஒலித்தது. சல்லவி பல்லவி என்றொரு கருவி ஒலித்தது. பின்னர் மதத்தளம், மிருதங்கம் என்பதெல்லாம் பின்னால் வந்தது.
துந்துபி, வெண்சங்கு, சல்லவி பல்லவி, மத்தளம் இந்த நான்கு இசைக்கருவிகள் எல்லாத் திருமண வீடுகளிலும் இருக்கும். துந்துபியில் தும் தும் என்ற சத்தம் வரும். சங்கிலே பம் பம் என்று ஓசை வரும், சல்லவி பல்லவியில் தீம் தீம் என்று சத்தம் வரும். மத்தளத்தை வாசித்தாலே தோம் தோம் என்று சத்தம் வரும். இந்த நான்கு ஓசைகளையும் நீங்கள் வரிசைப்படுத்தினால் தும் பம் தீம் பம் தீம் தோம் என்று வரும். அது துன்பம் தீர்ந்தோம். துன்பம் தீர்ந்தோம் என்று ஒரு வாசகமாகவே வரும்.
இறைநெறியில் ஈடுபடுவதற்கு வாசலாக இல்லறம் இருப்பதனால் அதில் நுழைவதன்மூலமாக எங்கள் துன்பங்கள் தீரப்பெற்றோம் என்று மணமக்கள் சொல்லுகிற விதமாக இந்த இசைக்கருவிகளை வைத்தார்கள்.
அம்பிகையை வணங்குவதால் இந்தப் பலன்கள் கிடைத்தது என்று சொன்ன அபிராமி பட்டர் இங்கே என்ன சொல்கிறார்? அம்பிகையை வணங்குவதால் மட்டுமல்ல, அவருடைய அடியவர்களை வணங்கினாலே இந்தப் பலன்கள் அனைத்தும் கிடைக்கும் .இந்திரப் பதவியை அவர்கள் பெறுவார்கள் என்று சொன்னார்.
மெல்லிய நுண்ணிடை மின்அனையாளை விரிசடையோன்
புல்லிய மென்முலை பொன்அனையாளைப் புகழ்ந்துமறை
சொல்லிய வண்ணம் தொழும்அடியாரைத் தொழுமவர்க்குப்
பல்லியம் ஆர்த்தெழ வெண்பக(டு)ஊரும் பதம்தருமே.