நன்மையும் தீமையும் உண்டோ?
பட்டர் அந்தாதி பாடினார். நிலா உதித்தது, நிலா உதிக்காமல் போயிருந்தால் பட்டர் என்ன செய்திருப்பார்?
அந்தாதி பாடியிருப்பார். அவருக்கு நல்லதும் கிடையாது, தீமையும் கிடையாது. இந்த ஒன்றரை வரியில் ஓர் அற்புதத்தை அபிராமி பட்டர் செய்கிறார்.
வாழ்க்கை என்பது வயல் போன்றது. கருணை மேகமாய் வந்து அருள் மழையைப் பொழிகிறது. நல்ல பயிர்கள் முளைக்கின்றன. கூடவே களைகளும் முளைக்கின்றன. நல்ல பயிரை நமக்கு கடவுள் விளைவித்துக் கொடுத்த தெல்லாம் மறந்துவிடுவோம். நாலு களையைக் காண்பித்து உன்னை தினம் கும்பிடுகிறேனே, எனக்கு நீ இந்தத் தீமையைக் கொடுக்கலாமா என்று கேட்போம். அபிராமி பட்டர் இரண்டையும் சமநிலையில் பார்க்கிறார்.
அனந்தாழ்வார் என்று ஒருவர் இருந்தார். பகவத் கைங்கரியத்தில் ரொம்பப் பெரியவர். நந்தவனத்தில் பெருமாளுக்கு பூக்கொய்து கொண்டிருந்தார். பாம்பு தீண்டியது. அவர் அதைப்பற்றிக் கவலையே படாமல் தொடர்ந்து பூப்பறித்துக் கொண்டிருந்தார். யாரோ ஒருவர் பார்த்து கொண்டுபோய் மருந்து கொடுத்து காப்பாற்றினார்கள்.
அவருக்கு பிரக்ஞை வந்தபிறகு கேட்டார்கள், ஒரு பாம்பு கடித்ததே, நீ தொடர்ந்து வேலையைப் பார்த்தாயே ஒரு சத்தம் கொடுத்திருக்க வேண்டாமா? என்று.
அவர் சொன்னார், இது என்ன பெரிய பிரச்சனை?. உயிரோடு இருந்தால் இங்கே பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யப் போகிறேன். இறந்தால் அங்கே போய் செய்யப் போகிறேன். அவ்வளவுதானே என்றார்.
அவருக்கு பாம்புக் கடி என்பது வைகுந்தத்திற்குப் போகும் விசா மாதிரி! எல்லாவற்றையும் உதறிவிட்டு உட்கார்பவர்களுக்கு மனதில் சலனம் கிடையாது.
எப்போது உன்னிடத்திலே நான் சரணடைந்தேனோ என்னுடைய நன்மை, தீமை அனைத்தும் உனக்கே என்று கொடுத்துவிட்டேன் என்கிறார் அபிராமிபட்டர்.
திருமணமாகிறபோது எல்லா மனைவிக்கு கணவனைப் பார்த்தால் குணக்குன்று போல் தெரியும். பதினைந்து இருபது வருடம் கழித்து அது தேய்மானமாகிக் கொண்டே வரும்.
அம்பிகை அப்படியல்ல, நீங்கள் முதல்முறை அவளைப் பார்த்து பக்தி செலுத்துகிறபோது நம்மிடத்தில் எவ்வளவு கருணையோடு இருக்கிறாளோ, கடைசியில் காலன் வாயிலிருந்து நம்மை மீட்கிற வரையில் அதே கருணையோடு இருக்கிறாள். எல்லையில்லாத சமுத்திரம் போன்ற கருணைக்குச் சொந்தக்காரி அபிராமி.
அபிராமி பட்டர் தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இதே மனநிலையில் இருந்து, இதேபோல் ஓர் அரசனுடைய தண்டனையை எதிர்நோக்கிய ஒரு ஞானி மாணிக்கவாசகர், இதே போல் அவர் அன்றே பாடி வைத்திருக்கிறார்.
அன்றே என்னுடைய ஆவியும் உடலும் எல்லாமும்
குன்றே அணையாய் என்னை ஆட்கொண்டபோதே
கொண்டிலையோ இன்றுவோர் இடையூறு எனக்குண்டோ
எணதோள் முக்கண எம்மானே நன்றே செய்வாய்
பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே.
இதற்கு திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் ஒரு விளக்கம் சொன்னார். கடவுளைப் பார்த்து பிழை செய்வாய் என்று மாணிக்கவாசகர் சொல்லுவாரா என்று கேட்டு நன்றே செய்வாய், பிழை செய்வாய்? நீ தவறு பண்ணுவாயா? நீ என்ன செய்தாலும் எனக்கு அது நல்லதாகத்தான் இருக்கும். இதற்கு நான் எதற்கு உரிமை கொண்டாட வேண்டுமென்று கேட்டதாகச் சொல்வார்.
நன்றே வருகினும் தீதேவிளைகினும் நான் அறிவ(து)
ஒன்றேயு மில்லை உனக்கேபரம்எனக்(கே) உள்ளஎல்லாம்
அன்றே உனதென்(று) அளித்துவிட்டேன்அழி யாதகுணக்
குன்றே அருட்கடலேஇம வான்பெற்ற கோமளமே.