எவ்வளவு முடியுமோ அவ்வளவு
கடவுள் வழிபாட்டுக்கு எல்லோருக்கும் நேரம் இருக்கிறதா என்ன? சிலருக்கு தினமும் காலையில் ஸ்ரீவித்யா மந்திரம் சொல்லி மேருவை வைத்து, ஸ்ரீ சக்கரம் வைத்து, பூஜை செய்கிற அளவிற்கு நேரம் இருக்கும். சில பேருக்கு ஒரு நாளைக்கு மூன்று நிமிடங்கள்தான் மொத்த வழிபாட்டு நேரமாக இருக்கும். சிலருக்கு கோவிலுக்குப் போய்வர நேரமிருக்கும், சிலருக்கு முடியாது. சிலர் திருக்கடையூரைப் பற்றிக் கேள்விப்பட்டிப்பார்கள், போவதற்கான வாய்ப்பு வந்திருக்காது. இப்படி பலவிதமான சூழ்நிலைகள் இருக்கும்.
அல்லி மலரிலே வீற்றிருக்கக்கூடியவளாக, யாமளம் என்று பேசக்கூடிய ஒரு ஞானநூலுக்கு அதிபதியாக இருக்கக்கூடியவளை எப்போது எப்படி எவ்வளவு நேரம் வணங்கவேண்டும்?
அல்லி, தாமரை போன்ற மலர்களெல்லாம் நமது உடலில் இருக்கும் சக்கரங்களைக் குறிக்கும் என்பதை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். எந்தக் குறையும் இல்லாதவள். தெய்வத்தினுடைய பெரிய இயல்பு எல்லாச் சிறப்புக்களும் உண்டு, குறையே கிடையாது. மனிதர்களுக்குத்தான் அளவுகோல், குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி இவன் நல்லவனா தீயவனா என்றால் 70 சதவிதம் நல்லவன் 30 சதவிதம் கெட்டவன். பரவாயில்லை, இவனை நல்லவன் பட்டியலிலேயே வைத்திருங்கள். அந்தக் கணக்கெல்லாம் மனிதர்களுக்குத் தான் கடவுளுக்கு கிடையாது.
“கோமள வல்லியை அல்லியந் தாமரைக் கோயில்வைகும்
யாமள வல்லியை”
நன்று இல்லானை, தீயது இல்லானை என்று ஞான சம்பந்தர் சொன்னார். எங்கள் அம்பிகையிடம் குற்றம் என்பது ஒன்றும் இல்லை என்கிறார் அபிராமிபட்டர். மற்றதெல்லாம் அவளிடம் இருக்கிறது. எல்லாக் கலைகளும் அவளிடத்திலே தஞ்சமடைந்திருக்கின்றன.
அவள் பார்த்தால் ஒரு கலையினுடய விகசிப்பாக இருக்கிறது. அடியெடுத்து வைத்தால் அது ஒரு கலையினுடைய விகசிப்பாக இருக்கிறது. அவள் வாய் திறந்தால் அது ஒரு கலையினுடைய விகசிப்பாக இருக்கிறது. வெறுமனே நின்றால் அது ஒரு கலையினுடைய விகசிப்பாக இருக்கிறது. சகலகலா மயிலாக இருக்கிறாள்.
உங்களால் அவளைத் தொழுவதற்கு சில மணித் துளிகள்தான் முடியுமா? அதை முழுமையாகச் செய்யுங்கள், ஏழு உலகிற்கும் நீங்கள்தான் அதிபதி என்கிறார் பட்டர். பெரிய நிஷ்டை நியமங்களை வகுக்கவில்லை. அபிராமி சமயம் என்றால் பக்திதான் பிரதானம்.
தன்னால் முடிந்தவரை தொழுபவர்களை ஏழுலகுக்கும் அதிபதியாக்குவாள் அபிராமி.
அர்த்தமுள்ள இந்துமதத்தில் கண்ணதாசன் ஒன்று சொல்வார், முடியாதவனை மன்னித்து விடு, விரும்பாதவனை தண்டித்துவிடு என்பார்.
போதிய நேரமிருந்தும் வழிபாட்டில் நேரத்தை வீணடிக்க வேண்டுமா என்று நினைப்பவர்களுக்கு வாழ்வில் வசந்தம் நிரம்பும் வழி தெரியவில்லை என்று பொருள்.
சிறிது நேரம் என்றாலும் முடிந்தவரை தொழுபவர்களுக்கு முற்றும் தருபவள் அபிராமி.
கோமள வல்லியை அல்லியந்தாமரைக் கோயில்வைகும்
யாமள வல்லியை ஏதம்இலாளை எழுதரிய
சாமள மேனிச் சகலகலாமயில் தன்னைத் தம்மால்
ஆமள வும்தொழு வார்எழுபாருக்கும் ஆதிபரே.