விழுந்ததால் எழுந்தவர்கள்

யாரெல்லாம் அம்பிகையை வணங்கிப் பயன் பெற்றார்கள் என்று அபிராமி பட்டர் ஒரு பட்டியலைச் சொல்கிறார்.

ஆதித்தன் என்றால் சூரியன், அம்புலி என்றால் நிலவு. அங்கி என்பது அக்கினியைக் குறிக்கும் குபேரன், அமரர் தங்கோன் என்பது இந்திரன், தாமரையில் வீற்றிருக்கக்கூடிய பிரம்மன், தாமரை என்பது அவனுடைய அலுவலக இருக்கை, தொழில் எப்போதெல்லாம் படைப்புத் தொழிலைச் செய்கிறானோ அப்போதெல்லாம் அம்பிகையின் அருளை அவன் பெற்றுக்கொண்டிருக்கிறான்.

சூரிய மண்டலத்தில் சூரியப் பிரகாசமாக அம்பிகை இருக்கிறாள். சந்திரனையே தன்னுடைய தாடங்கமாக அணிந்திருக்கிறாள். எழக்கூடிய அக்னி என்கிற ஆற்றலாக அவள் திகழ்கிறாள். எல்லா செல்வங்களையும் தருகிற குபேரனை ஆட்டுவிப்பவளாக இருக்கிறாள். அவளுடைய அடியார்களை வணங்கினாலே இந்திர பதவி கிடைக்குமென்று ஏற்கனவே பட்டர் சொல்லியிருக்கிறார்.

புரங்களை எரித்ததனாலே சிவபெருமானுக்கு புராரி என்று பெயர். அவர் அம்பிகையின் கணவராக, பக்தராக, நெருங்கிய தோழராக எல்லா வகையிலும் துணையிருக்கிறார். முராரி,முரன் என்ற அரக்கனை அழித்த பெருமாள். அவர் சகோதரனாகவும், பக்தராகவும் இருக்கிறார். தமிழின் தெய்வமாக வணங்கப்படும் பொதிய முனி கும்பத்திலே பிறந்தவர். தாயின் கரு வாராமல் அவரைக் காத்து கும்பத்தையே கருவாக்கிக் கொடுத்து அம்பிகை அவரை உருவாக்கினாள்.

மன்மதன், தேவி மந்திரங்களிலே மன்மதன் ஒரு ரிஷியாகவே கருதப்படுகிறான் என்று சக்தி நெறியில் ஆழங்கால்பட்டவர்கள் சொல்கிறார்கள்.

விநாயகருக்கு எல்லா கணங்களின் தலைமை நிலையைத் தந்தவள் அம்பிகை. அதனால்தான் இங்கு விநாயகர் என்று சொல்லாமல் கணபதி என்று சொன்னார் முருகனுக்கு வேல் கொடுத்தவளே அவள்தான். இவர்களைப் போல் சாதித்தவர்கள், எத்தனையோ பேர் அவர்களெல்லாம் அம்பிகையை வணங்குபவர்கள்.

இது ஆரம்பப்பட்டியல் தானே தவிர அம்பிகையின் சாதகர்களாக விளங்கி சாதனைகளை சாதகமாக்கிக் கொண்டவர்கள் பட்டியல் எண்ணிலடங்காது.

ஆதித்தன் அம்புலி அங்கிகுபேரன் அமரர்தங்கோன்
போதிற் பிரமன்(புராரி)முராரி பொதிமுனி
காதிப் பொருபடைக் கந்தன்கணபதி காமன்முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர்போற்றுவர் தையலையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *