குயிலாய் வருவாள் கூட்டுக்குள்
ஊடலைத் தீர்ப்பதற்காக சிவபெருமான் அம்பிகையைப் பணிகிறார். கையிலிருக்கும் நெருப்போடு அம்பிகையைப் பார்க்க போக முடியாது. கங்கை என்னும் இன்னொரு பெண்ணை தலையில் வைத்துக்கொண்டு காலில் விழ முடியாது. எனவே வணங்கும்போது இந்த இரண்டையும் எங்கே மறைத்தார் சிவபெருமான் என்று கேட்கிறார் பட்டர்.
இப்படி யாராவது தூண்டிவிட்டால்தான் விசாரணைக்கமிஷன் அமைப்பார்கள். அபிராமி பட்டர் அம்பிகையைத் தூண்டி விடுகிறார்.
தாருகா வனத்து முனிவர்கள் தவம் செய்கிறபோது ஒரு யாகம் செய்தார்கள். அந்த நெருப்பை தன்னுடைய கைகளிலே பெருமான் வாங்கினான். அடைக்கலம் தேடிவந்த ஆகாச கங்கையை தலைமேல் தாங்கினான்.
திருக்குறளில் தீயவர்களைப் பற்றிப் பேசும் திருவள்ளுவர், உயர்ந்தவர்களை “நீரவர்” என்கிறார். தீ என்பது தீமைக்கும் நீர் என்பது நன்மைக்கும் அடையாளம். சிவபெருமானிடம் இவை இரண்டும் இருக்கிறது. கையில் தீயையும், தலையில் ஆற்றையும் வைத்திருக்கிறார். அதுதான் நடுநிலைமை.
அவளை இதயத்தில் அமர்த்த வேண்டுமென்றால் ஒரே ஒரு அளவுகோல்தான் அவளுக்கு. உண்மையாக இருக்க வேண்டும். விரகர் என்றால் ஏமாற்றுக்காரர்கள். நிறையப் பேர் சில துர்தேவதைகளை தங்கள் வசப்படுத்திக் கொண்டு நான் காளியை வசப்படுத்தியுள்ளேன், சக்தி என் கட்டுபாட்டிற்குள் இருக்கிறாள், என் மந்திரத்தினால் கட்டியிருக்கிறேன் என்றெல்லாம் சொல்வார்கள். அவர்கள் ஏதாவது சின்னத் தேவதைகளை வைத்துக்கொண்டு விளையாட்டு காட்டுவார்களே தவிர ஒருபோதும் அவர்களால் பராசக்தியை கைக்கொள்ள முடியாது என்கிறார் அபிராமி பட்டர்.
மெய்வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகல்அறி யாமடப் பூங்குயிலே
அம்பிகையை இந்த இடத்தில் மடப் பூங்குயிலே என்கிறார். அம்பிகைக்கென்று ஓர் இடம் உண்டா? குயில் காக்கையின் கூட்டில் போய் முட்டை இடுகிறது. இந்த அம்பிகையாகிய குயில் குஞ்சு நமக்கு உரியவள் இல்லையே என்று நாம் திகைத்து நிற்கவேண்டாம். நாம் உண்மையானவர்களாக இருந்தால் காக்கைமாதிரி எளியவர்களாக இருந்தாலும் நம்முடைய இதயக் கூட்டிலே அம்பிகை வந்து தோன்றுவாள். இந்தக் கூட்டிற்குள் தோன்றுவாள். காக்கை மரத்தில் கட்டுகிற கூடு, இது நமக்கு பிரம்மன் கொடுத்த கூடு, நாம் உண்மையாக இருந்தால் நம் இதயக் கூட்டில் அம்பிகை ஒரு குயில் குஞ்சுபோல் வந்து குடியிருப்பாள்.
தைவந்து நின்னடித் தாமரைசூடிய சங்கரற்குக்
கைவந்த தீயும் தலைவந்தஆறும் கரந்ததெங்கே
மெய்வந்த நெஞ்சின்அல் லால்ஒருகாலும் விரகர்தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகல்அறியாமடப் பூங்குயிலே.