உடல், மனம், உயிர் மூன்றும் அவற்றுக்குரிய நிலைகளில் சில தீமைகளும் ஆளாகின்றன. உடல் நோய் வாய்ப்படுகிறது. மனம் துயரடைகிறது. உயிரோ வினைகளால் பற்றப்படுகிறது.
ஆத்தாள் என்பது நம் அகத்தில் இருப்பவள் – அப்த்தாள் என்பதன் மரூஉ. அபிராமவல்லி அண்டமெல்லாம் பூத்து நிற்கிறாள். அவள் புவியைக் காக்கிறாள். அவளது திருக்கோலம் கண்களை விட்டகலாத கவினுறு தோற்றம். அவளுடைய அழகிய கைகளில் மலர்க் கணைகள், கரும்பு, பாசம், அங்குசம் ஆகியவை உள்ளன. மூன்று திருவிழிகளைக் கொண்ட அவளைத் தொழுபவர்களுக்கு இந்த மூவகைத் தீமைகளும் கிடையாது என்று அருளிச் செய்கிறார் அபிராமி பட்டர்.
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளைப் புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்பும்அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத்தொழுவார்க்(கு) ஒரு தீங்கில்லையே.
அபிராமி அந்தாதியின் 101 பாடல்களும் தியான ஸ்லோகங்கள். இவை மந்திர அதிர்வுகளை உள்ளடக்கியவை. அம்பிகையின் பெருங்கருணைக்கு ஆளாகும் பாதை அபிராமி அந்தாதி. அந்தாதியும் அம்பிகையைப் போலவே எல்லையில்லாத தன்மை கொண்டு திகழ்வது நன்மைகள் யாவையும் தருவது.