நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகம் முகிழ்த்தன முறையே!
-ஐங்குறுநூறு
பிரபஞ்சம் என்னும் பேரரும்பின் மடல்கள் அவிழத் தொடங்கிய ஆதிகாலம். அண்டத்தின் நாபியிலிருந்து பொங்கியெழுந்தது ஓங்கார நாதம். படைப்புக் கலையின் மூலநாதமாய், முடிவிலா நடனத்தின் முதல் சுருதியாய், கால வீணையின் அதிர்வாய் ஓங்கி ஒலித்தது ஓங்காரம்.
சிருஷ்டியின் உச்ச லயிப்பில் ஒன்றியிருந்த இடகலை பிங்கலை சக்திகள் சலனம் கொண்டன. சற்றே அசைந்தன. நாதத்தின் கருப்பையில் பிரபஞ்சக் கரு மெல்ல மெல்ல உருக்கொள்வதை உணர்ந்தன.
நாதத்தின் பிறப்பே பிரபஞ்சம். நாதத்தின் இருப்பே உயிர்கள். நாதலயத்தின் நடனமே தொடக்கம். இனியிது நீளும் ஊழிவரை…
மூல சிருஷ்டியின் நிறைவில், உருக் கொள்ளவுள்ள உயிர்களின் இடையறாச் சங்கிலியில், முதற்கண்ணி பொருந்திய வேளையது. சக்தி வடிவானது இடகலை. சிவவுருவானது பிங்கலை. ஊறிக்கொண்டிருந்த உயிர்களிலெல்லாம் ஊடுருவியது சிவசக்தி அம்சம்.
“ஓம்…ஓம்…” ஓங்காரத்தின் மீட்டல் தொடர்ந்தது. கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பு அரும்பியது. ஜ÷வாலை கனன்றது. வாக்கிறந்த பூரணத்திடமிருந்து சூட்சுமக் குறிப்பாய்க் கிளம்பியது பிரபஞ்ச ரகசியம்.
ஆதியோகியின் நாதக்கனிவில் மூவகை உலகம் முகிழ்ப்பதற்கான சலனங்களைக் கண்ணுற்ற உமையின் உள்ளுணர்வில் புரிபடத் தொடங்கியது பிரபஞ்ச ரகசியம். தன்னை ஆளுடை நாயகனின் உபதேசத்தில் கண்மூடிலயித்தாள் காருண்யை.
“இனியெழும் உயிர்களின் வினையாற்றல், வினையேற்றல் இரண்டிற்கும் மௌன சாட்சியாய் இழையோடும் இந்த ஓங்காரம். இதுவே ககன வெளியெங்கும் காற்றிôகிச் சுழலும். உயிரியக்க சக்தியின் அலைவீச்சாய் இருக்குமிந்தக் காற்று.
தேவி! தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை, நாசிப் புலனுக்கு வாசம் கடத்துதல், உடம்புடன் உயிரைப் பிணைத்தல், பொறிபுலன்களின் இயக்க சக்தியாய் இருத்தல், ஆவியாகும் கடல்நீரை ஆகாயம் சேர்த்தல் என்று, படைப்பின் மூல சுவாசமாய் இயங்கும் காற்று. முகிலினை உந்தி மழையருளல், தழலினை உந்தி அழித்திடுதல் என்று சகலத்திற்கும் காரணியாகும் காற்று.
காற்றின் இழையைக் கைக்கொண்டிருக்கும் வரையே யாக்கையின் இயக்கம். யாக்கையைத் தாண்டியும் தொடரும் காற்றின் இயக்கம். அந்தக் காற்றைக் கட்டமைக்கும் வினைகளின் வலை அற்றுப் போகையில் ஏற்படும் வெற்றிடமே முக்தி. இதுவே பிரம்ம விதி. காற்றின் வழியே தன்னில் அமிழ்ந்து, இருமை கடந்து, தன்னை உணரும் யோகக்கலையின் எழுதா விளக்கமே சிவசக்தி சொரூபம்.
பிராணவாயுவின் பிரயோகம், வாழ்வின் மூலம் மட்டுமன்று சக்தி! அதுவே உயிராற்றலின் ஊற்றுக்கண். தன்னில் உள்ள இறைமையை உயிர்கள் உணர்ந்து, மரணம் கடந்து, பேரின்பத்தில் நிலை பெற, பிராணனே பிராதனம். கட்டற்றோடும் எண்ணக் குதிரையின் கடிவாளம் பிராணனே. கட்டுக்கடங்கிய அந்தக் குதிரையைக் கட்டும் கம்பமும் பிராணனே.
காற்றாகிய பிராணணின் நுட்பம் உணர உணர சூட்சுமமாகும் உயிர்சக்தி, காற்றைப்போலவே இலவாகும். அம்பிகே! காற்றிலாமை மரணமெனில் காற்றே அமுதம். பிரபஞ்சமெங்கும் பரந்து விரிந்திருக்கும் பரத்துவமே பிராண சக்தி. அதுவே ஓங்காரத்திலிருந்து உயிர்த்த அமுதம். ஒவ்வோர் உயிரிலும் இது தங்கும். இது இயக்கும். இறுதியில் இதுவே கிடத்தும்.
ஷாம்பவி! இந்த அமுதம் நிரம்பிய பாத்திரமே சரீரம். மரணமிலாப் பெருவாழ்வின் அமுதம் நிரம்பும் கடம் மிருத்யுஞ்சயம். அமுதகடங்களே உடல்கள் என்பதை உணர்த்தும் இத்தலம் கடவூர் எனப்படும். அமுதக்கடமாய் தன்னை உணர்பவர்களுக்கு அதுவே கடைசிப்பிறவி. கருவூரில் நுழைவோருக்குக் கடையூரும் இதுவே.
சங்கரி! பிரபஞ்ச உருவாக்கத்தில் பங்கேற்ற நீ மனோன்மணி, மனசக்தி. பிங்கலையின் மூலவுருவாகிய யாம் புத்தி சக்தி. நாம் அருளிய அமுதமே காற்று! காற்றின் அசைவே பிரபஞ்சம். காற்றுக்குக் கால் என்றும் பெயருண்டு. காற்றின் இயக்கமே வாழ்க்கை என்னும் தத்துவத்தின் குறியீடாய்த் தாண்டவம் தொடங்குவோம்.”
புரிதலெனும் விடையேறும் புனிதனும் புவனங்கள் ஈன்ற நாயகியும் ஆடத்தொடங்கிய ஆனந்த தாண்டவத்தின் அதிர்வில், ஒவ்வொரு மடலாய் மலர்த்தியது பிரபஞ்சத் தாமரை.