வெண் மணி ஆர்க்கும் விழவினன் நுண்ணூல்
சிரந்தை இரட்டும் விரலன் இரண்டு உருவா
ஈர் அணி பெற்ற எழிற்தகையன் ஏரும்
மாறு ஏற்கும் பண்பின் மணி மிடற்றன்!
வெண்ணிற வாரிதியின் கடைசலா, வாசுகியின் சீறலா என்று இனங்காணவொண்ணாப் பேரோசை எங்கும் பரந்தது. அசுரர்கள் இதழ்களில் களைப்பையும் மீறிக் குமிழ்விட்டது புன்னகை. வானிருந்து கீழிறங்கும் விழுதென்று நீண்டு கிடந்த வாசுகியின் தலைப்பகுதியை அசுரர்கள் பற்றியிருக்க அமரர்கள் வால் பகுதியைப் பற்றியிருந்தனர்.
வாசுகியிடமிருந்து வெளிப்பட்ட வெப்ப மூச்சினில் அசுரர்களின் கரங்களில் மண்டியிருந்த ரோமங்கள் கருதின. அமரர்களுடன் இணைந்து பாற்கடலைக் கடைவதென முடிவானதுமே அசுரர் குல ஒற்றர்கள் முடுக்கிவிடப்பட்டனர். அவர்களில் ஒருவன் கொணர்ந்த செய்தி கேட்டு குதூலித்தது அசுரர்குலம். திருமாலும் தேவேந்திரனும் பேசிக்கொண்ட ரகசியக்குறிப்பே அது.
“இந்திரா! வடவரையை மத்தாக்கி பாற்கடலைக் கடைவதற்கு வாசுகியைக் காட்டிலும் வலிவுள்ள நாண் வேறொன்றுமில்லை. பேராற்றலுக்கொரு வடிவம் கொடுத்தால் அதன் பரந்து விரிந்த மார்பில் யக்ஞோபவீதமாய் புரளக் கூடியது வாசுகி. பூமியை மழலையாக்கி எண் திசை யானைகளுடன் மோதவிட்டால் பூமிக் குழந்தையின் அரைஞாண் கயிறும் அதுவே.
அமரேசா! உயிரினங்களில் எது தன் உச்சம் தொடுகிறதோ, அதுவே நான். யானைகளில் ஐராவதமாயிருக்கும் நான், நாகங்களில் வாசுகியாய் இருக்கிறேன். நாகமெனும் உயிர்வகையின் நிகரிலா உச்சம் வாசுகி. விண்டுரைக்க மாட்டாத குண்டலினியின் அசைவு வாசுகியின் அசைவு.
வாசவா! நிலைபேறுள்ள அமுதத்தை நீங்கள் பருக தன்னை ஒப்புக் கொடுக்கும் வாசுகியின் வல்லமை உங்கள் கைகளுக்கும் பாய வேண்டுமானால் அதற்கொரு வழி இருக்கிறது. பாற்கடல் கடையும்போது முன்னதாகவே சென்று வாசுகியின் தலைப்பகுதியைப் பற்றிக் கொள்ளுங்கள். வாசுகி அசையும்போதெல்லாம் அதன் கண்களில்படுபவர்கள் சர்வ வல்லமை பெறுவார்கள்.
சாச்சினா! இன்னுங்கேள். வாசுகியை வாகனமாகக் கொள்பவள் அமுததேவி. வாசுகி நோக்கியிருக்கும் திசை நோக்கியே அவளும் திரள்வாள். எனவே முன்னதாகவே சென்று வாசுகியின் தலைப்பக்கத்தைக் கைப்பற்றிக் கடையத் தொடங்குங்கள். அசுரர்கள் முந்திக்கொண்டால் அவர்கள் உண்ட எச்சில் அமுதத்தை ஏந்திப் பருக வேண்டியவர்களாவீர்கள்! எச்சரிக்கை!!”
ஆயிரம் செவிகொண்ட ஆதிசேஷனைக் காட்டிலும் கூடுதல் செவிகள் கொண்ட அசுரர்குல ஒற்றன் ஓடிச்சென்று ஒலிபரப்பிய இச்செய்தி, அசுரர்களை ஆனந்தக் கூத்தாடச் செய்தது. மத்தென நிமிர்ந்த மேருவில் நாணாக வாசுகி கட்டப்பட்ட விநாடியின் இடைப் பொழுதில் அதன் தலைப் பகுதியைப் பாய்ந்து கைப்பற்றினர் அசுரர்கள். அதிர்ந்து போன இந்திரனின் மன்றாடலைத் துளியும் பொருட்படுத்தவில்லை அவர்கள். முதல் வெற்றியின் உற்சாகத்தில் முழு வல்லமையுடன் கடைந்து கொண்டிருந்தனர் அசுரர்கள். அவர்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்கப் போராடிக் கொண்டிருந்தனர் அமரர்கள்.
தேவாசுர யுத்தங்கள் தொடர்ந்து நடப்பதில் ஒவ்வொரு கூடுதல் உயிர்ச் சேதம் தேவர்களுக்குத் தான். அமுதம் கடைந்தெடுத்துப் பருகிவிட்டால் மரணமிலாப் பெரு வாழ்வில் வாழலாம் என்று திருமால் நான்முகனுக்குத் தந்த அறிவுரையின் பெயரிலேயே பாற்கடல் கடைவதென்றும், அந்தப் பணியில் அசுரர்களும் பங்கெடுத்துப் பங்கு பெறுவதென்றும், உருவான ஒப்பந்தம் உயிர் பெற்றுக் கொண்டிருந்த வேளையது.
ஊழியின் எல்லை வரை உயிர்தரிக்க வைக்கும் அமுதம் தங்கள் உதடுகளைத் தீண்டும் நாழிகை நெருங்கி விட்டதென்னும் பரபரப்பில் வாசுகியை விசைகொண்டு கடைந்தனர் அசுரர். மேருவின் உராய்வில் தீப்பொறி பறக்க, வெறி கொண்ட இழுப்பில் தேகம் வலிக்க, வாசுகியின் கண்களில் வலியின் வேதனை தெறித்தது. ==அமிர்தம்! அமிர்தம்! அமிர்தம்! அமிர்தம்!++ வானதிர முழங்கியபடியே வேகவேகமாய் அசுரர்கள் கடையக் கடைய ஆகாயம் இரண்டாய் உடைந்ததுபோல் பேரோசை ஒன்று புறப்பட்டது.
கடைசலின் முதல் பிரவாகமாய் பெருப்கெடுத்தது புது நஞ்சு, அதேநேரம் வலிபொறுக்காத வாசுகியும் பெரு நஞ்சைக் கக்கியது. வானமுதம் எதிர்பார்த்து வாய்திறந்த அசுரர்கள் பெருகிய நஞ்சின் பேரலையில் கருகி விழுந்தனர். பாதங்கள் பிடரிபட பயந்தோடிய சிலரோ திசைகளின் சுவர்களில் முட்டி மயங்கி விழுந்தனர்.
புதுநஞ்சும் பெருநஞ்சும் பெருக்கெடுத்த வேகத்தில் அமரர்கள் கூப்பிய கைகளுடன் கயிலாயத்தின் திசைநோக்கி அபய ஓலமிட்டனர். வெளிச்சப் பிழம்பொன்று வானில் தெரிந்தது. நெருங்க நெருங்க அதன் பேரழகு வடிவம் பொலிந்தது.
ஆதிநாதனின் அணுக்கத் தோழன், வடிவாற் சிவமேயாகிய சுந்தரன் விரைந்து வந்துகொண்டிருப்பது தெரிந்தது. வந்த வேகத்திலேயே சுந்தரனின் பொற்கரங்கள் பெருக்கெடுத்த நஞ்சை ஒன்று திரட்டின. ஒருதுளியும் மீதமுறாது, ஆல கால விஷத்தை உள்ளங்கைகளில் திரட்டி ஆகாயத்தில் மிதந்த சுந்தரனைக் கண்டு, “ஆலால சுந்தரன் ஆலால சுந்தரன்” என்று ஆனந்தக் குரலெழுப்பினர் தேவர்கள். என்ன நிகழ்கிறதென்றும் புரியாத மயக்கத்தில் கிடந்த அசுரர்களின் உடல்களை அலட்சியமாய்க் கால்களில் எற்றி ஆனந்தக் கூத்தாடினர்.
அள்ளிச் சென்ற ஆலகால நஞ்சை சிந்தாமல் சிதறாமல் பெருமானின் கரங்களில் பணிந்து சேர்ப்பித்தான் சுந்தரன். செக்கச் சிவந்த உள்ளங்கைகளில் கருநஞ்சை ஏந்திய கண்ணுதற்கடவுள், எவரும் எதிர்பாராத நொடியில் நஞ்சை அருந்த, நடுங்கிப் போனது அமரர்குலம். அடுத்த விநாடியே அய்யனின் தொண்டையைப் பற்றியது. வடிவாம்பிகையின் வளைக்கரம். வாரதி தந்த நஞ்சை வாரியுண்ட பெம்மானின் திருமிடறு நஞ்சின் தீவிரத்தால் கறுத்தது. அதேநேரம் அம்பிகை பற்றி நிறுத்திய பரிவால் நஞ்சின் உள்ளீடு அமுதமாய் மணத்தது. அருந்திய நஞ்சை அமுதாக்கித் தந்த அம்பிகையின் திருமுகம் தொட்டு நிமிர்த்தி பாற்கடல் நோக்கி சுட்டுவிரல் நீட்டினார் சிவபெருமான்.
அங்கே…