அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!
-அவ்வை
வாசுகி மேருவைக் கடைந்த வேகத்தைக் காட்டிலும் பலமடங்கு கூடுதலாய் தேவர்களின் உள்ளங்களை கலக்கம் கடைந்தது. அரிதின் முயன்று பெற்ற அமுதக்கலசம் அவர்களின் ஞான திருட்டிக்கும் அகப்படாத எல்லையில் இருப்பது மட்டும் தெரிந்தது. எப்போதும் போல் திருமாலின் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது. என்ன நடந்ததென்று அவருக்குப் புரிந்தது.
அதிர்ந்து நின்ற அமரர் தலைவனை அருகே அழைத்தார் அச்சுதன். “அவசரத்தில் தவறு செய்து விட்டோம். ஆனைமுகனை வணங்க மறந்தால் வந்த வினை இது” சொன்னதுமே தேவேந்திரனுக்கு சிரிப்பு வந்தது. “அதனாலென்ன? அவர் தந்தையை வணங்கச் சென்றோம் என்று சொன்னால் குடத்தைக் கொடுத்து விடப் போகிறார்”
அதிர்ந்து சிரித்தார் அத்துழாய் மார்பன். “நீ கணநாதனை குழந்தையென்று கருதிக் கொண்டிருக்கிறாய். முப்புரங்களை எரிக்கும் முனைப்பில், தன்னை வணங்காமல் புறப்பட்டார் என்பதற்காக சிவபெருமான் சென்ற தேரின் அச்சையே முறித்த அதிதீரர் அவர். முறைப்படி பணிந்து மன்னிப்புக் கேட்டால் மனமிரங்குவார்.”
கணபதியின் சந்நிதி தேடிக் கிளம்பியது தேவர் குழாம். கிழக்கு நோக்கி வீற்றிருந்தார் ஆனை மகக் கடவுள். பெருத்த திருவுந்தியருகே வளைந்திருந்த துதிக்கையில் பொதிந்திருந்த அமுதக் கலசத்தை யாராலும் காண முடியவில்லை.
“விநாயகா! இங்கொரு குடம் தவம்புரிந்து கொண்டிருந்தது. அதற்கு வரம் கிடைத்துவிட்டது போலிருக்கிறதே” விநயமாகவும் விஷமமாகவும் பேச்சைத் தொடங்கினார் திருமால்.
அம்மானின் அகடவிகடம் அறிந்திருந்தும் ஏது மறியாதவர் போல், “என்ன குடம் மாமா? என்ன தவம்?”என்றார் விக்னேசுவரர். “அடியவர்களின் துயரைத் துடைக்கும் துதிக்கையைத் தொட்டுத் துதிக்கும் வரம்வேண்டி தவமியற்றியது தங்கக் குடமொன்று. அதனுள் இருக்கும் அமுதமும் உன் பிரசாதமாகவே தேவர்களுக்குக் கிடைத்தால் அதன் பலன் பலமடங்கு பெருகுமல்லவா!”
தாய் மாமனின் நயமான சொற்கள் கேட்டு கலகலவெனச் சிரித்த காருண்ய மூர்த்தியிக் துதிக்கை நீண்டது. அதில் முன்னினும் பன்மடங்கு பிரகாசமாய் பேரொளி பரப்பிற்று அமுதக்குடம்.
“சங்கடம் தீர்க்கும் சசிவர்ணா! எங்கள் பிழைகள் பொறுத்தருள்வாய்!” என்று பணிந்து நின்ற தேவர்களிடம் கனிந்து நின்ற கபிலநாதனை ரசித்துப் பார்த்த திருமால், “இதுவரை தீர கணபதியாக வணங்கப்பட்ட நீ சோர கணபதி என்றும் செல்லமாய் அழைக்கப்படுவாய்!” என்றார்.
“கள்ள வாரணம்! கள்ள வாரணம்!” என்று கைதொழுத வண்ணம் அமுதக் குடத்தை உச்சி மேல் சுமந்து உள்ளம் குளிர்ந்து நகர்ந்தனர் தேவர்கள்.
பரிமாறப்பட்ட அமுதத்தை பக்தியுடன் பேரார்வத்துடனும் வாரியுண்ட தேவர்களின் வரிசையை கவனித்த திருமாலின் கமலக் கண்கள் ஓரிடத்தில் நிலைத்தன. அங்கே இரண்டஜோதிப் பிழம்புகள் பரந்தாமனுக்கு எதையோ பார்வையால் உணர்த்தின. பார்வையை கூர்மையாக்கினார் புருஷோத்தமன். சந்திர சூரியரே அந்த ஜோதிப் பிழம்புகள். இருவருக்கும் நடுவே ஒரு மாயத் தோற்றம். அமரர்களில் ஒருவர்போல் வேடமிட்ட வடிவம். அசுரர்குலத் தோன்றலாகிய ராகுவை அடையாளம் கண்ட நாராயணர் சற்றும் தாமதியாமல் சக்ராயுதத்தை ஏவ,தலை துண்டாகித் தரையில் விழுந்தான் ராகு. அமுதம் உண்டபின் மரணம் ஏது?
வல்லமை மிக்க நாகமொன்றின் தலையைத் துண்டித்து அதன் உடலில் ராகுவின் தலையையும் ராகுவின் உடலில் அந்த நாகத்தின் தலையையும் பொருந்தினார் திருமால். அமுதத்தின் அம்சத்தை உள்ளீடாய்க் கொண்ட இருவரும் ராகு கேதுக்களாயினர். சந்திர சூரியரை வஞ்சம் தீர்க்க வஞ்சினம் உரைத்து வெளியேறிய ராகு கேதுக்களையே புன்னகை புரிந்தார். அந்தப் புன்னகையிலோ ஆயிரமாயிரம் அர்த்தங்கள்.
அமுதம் பருகி நிமிர்ந்த அமரர்கள் கண்களில் அலையலையாய் மின்னல்கள் ஓடின. பக்திப் பெருக்கில் அவர்தம் கரங்கள் சிரம்மீது குவிந்தன. அவர்களுக்காக அமுதத்தை அள்ளித்தந்த குடம் பூமியுடன் பொருந்தி அழகிய லிங்கத் திருமேனியாய்ப் பொலிந்தது. நான்கு திசைகளிலும் நான்கு மறைகள் நின்று “நமசிவாய” என்று முழங்கின. பஞ்ச பூதங்களிலும் கலந்தொலித்தது பஞ்சாட்சரம்.
பிரபஞ்சத்தின் மூலமாய், புரிதல் கடந்த ஞானமாய், ஆலகாலம் உண்ட அமுதமாய், அருவுருவாய் நின்ற அமுத கடேசனை தேவரும் யாவரும் பணிந்தனர். ==ஸ÷தாகடேசம்! சுந்தரம்! சுகானந்தம்!++ என்னும் வாழ்த்தொலி வான் வரைக்கும் பரவியது.
நெடிதுயர்ந்த செழுஞ்சுடரை நெருங்கி இழைந்த நீலச்சுடர் கேட்டது, “நாதா! ஒரு நவரச நாடகம் போல் நிகழ்ந்தேறிய இந்த சம்பவங்களின் தாத்பர்யத்தை நான் தெரிந்து கொள்ளலாமா?”
“சியாமளா! ஒரு விதை தன்னை விவரித்துச் சொல்லும் போது அது விருட்சமாக வெளிப்படும். ஆனால் கதைபோல் ஒரு சம்பவம் கண்முன் அரங்கேறும்போது அதனுள் ஒளிந்திருக்கும் மூல தத்துவம் புலப்படும். ஒவ்வோர் உயிரிலும் நிறைந்திருக்கிறது அமுதம். அதைக் கடைந்தெடுக்கத் தரப்படும் வாய்ப்பே மனிதப்பிறவி. வாசி வழியாக மேருவாகிய முதுகுத்தண்டைக் கடைகிறபோது வினைக் கட்டுகள் கக்கும் நஞ்சுகள் முதலில் நீங்கும். உடலும் மனமும் உயிரும் ஒரு கோட்டில் பொருந்தி ஆமைபோல ஐம்புலன் அல்ங்கி உள்முகமாய் ஒடுங்கிட அமுதம் பிறக்கும். நாடிகள் அனைத்தும் அமுதம் பெருக உடம்பே அமுதக் குடமாகும்.
புலனடக்கத்தின் குறியீடாய் கூர்ம வடிவெடுத்த திருமால் அமுதம் பிறக்கப் பெருந்தணை புரிந்தமையால் வாசியோகத்தின் சூட்சுமம், “கூர்மநாடி” என்றழைக்கப்படும்.
சுந்தரி! ஓங்காரம் ஒற்றை எழுத்தல்ல. அதுவே பிரபஞ்ச உருவாக்கத்தின் மகாமந்திரம். கணபதியிடம் அமுதக் கலசம் ஒளிந்திருந்தது போல ஓங்காரத்தினுள்ளே அமுதத்தின் ஊற்றுக்கண் ஒளிந்திருப்பதை உணர்த்துவதே கள்ள வாரணத்தின் தாத்பர்யம்.
அமுதம் நிரம்பிய கடம் லிங்கத் திருமேனியாய் வடிவெடுத்த இத்திருத்தலம் திருக்கடவூர் என்றழைக்கப்படும். பாற்கடல் கடைந்தபோது அமுதம் சுமந்து வந்த அப்சா,
தன்வந்தரியாகத் தோன்றி மருத்துவத்தின் அதிதேவதையாய் விளங்கட்டும்.
பாற்கடலிலிருந்து வெளிவந்த திருமகள், தன் திருவுளம் கவர்ந்த திருமாலைக் கரம்பிடிக்க சங்கல்பம் மேற்கொண்டுள்ளாள். திருவாரூர் அருகிலுள்ள திருக்கண்ண மங்கையில் தவம்புரிந்து திருமாலை மணம்புரிவாள். அந்தத் தலம் “லஷ்மி வனம்” என்றழைக்கப்படும்.
சூலினி! தலைமாறிய ராகு, கேதுவுடன் இணைந்து உன்னுடைய அம்சமாகிய துர்க்கையை நோக்கித் தவம் புரிவான். அவளருளால் இருவரும் மனித வாழ்வின் போக்குகளை நிர்ணயிக்கும் ஒன்பது கிரகங்களின் வரிசையில் இரண்டு கிரகங்களாய் இடம் பெறுவர். ராகுவுக்கு துர்க்கை அருள்புரிவதால் ராகுகாலத்தில் துர்க்கையை பல்வகை நன்மைகள் சித்திக்கும்.
அபிராமி! ஒவ்வொரு மனிதனும் உள்முகமாய்க் கடைந்து கரைசேரும் தலமாகும் திருகடவூர். பிறவிக்கடலில் இருந்து கடைத்தேற்றுவதால் இது திருக்கடையூர் என்று அழைக்கப்படும்.” சொல்லி நிறுத்தியது செழுஞ்சுடர்.
இருபெரும் சுடர்களிலிருந்து சடசடத்த பொறிகள் பிரபஞ்ச ரகசியத்தின் முதல் இழை பிடிபட்ட பெருமிதத்தில் மேலெழுந்து நட்சத்திரக் கூட்டத்தின் நடுவே சேர்ந்தன.