நான்கு திசைகளையும் நோக்கியிருந்த எண்கண்களும் மூடியிருக்க
ஆழ்ந்த தவத்திலிருந்தான் நான்முகன்.படைப்புத் தொழிலின் கருத்தாவாய்
பொறுப்பேற்ற காலந்தொட்டு பரமனிடம் ஞானோபதேசம் பெற வேண்டும்
என்ற சங்கல்பம் அவனுக்கு.
எது எப்படி இருந்தாலும் ஒவ்வொரு நாளும் நான்கு சந்தியா வேளைகளிலும் சிவத்தியானம் செய்ய நான்முகன் தவறுவதில்லை.
படைப்புக் கடவுளாகிய தன்னை ,புலர்காலைப் பொழுதில் கதிரவனும்
பொன்னந்தி நேரத்தில் சந்திரனும் பணிந்து வணங்கும் போதெல்லாம்
சிவத்தியானத்திலேயே ஒன்றியிருப்பான் சதுர்முகன். தன்னை வணங்கும்
சூரியனின் பேரொளியோ சந்திரனின் தண்ணொளியோ தீண்ட முடியாத
தவப்பெருக்கில் திளைத்திருப்பான்.
அப்படியொரு நாள், கைலாயமலைச் சிகரத்தின் மடியில் தவத்திலிருந்த
பிரம்மனின் மூடிய திருவிழிகளையும் ஊடுருவியது பேரொளிப் பிழம்பொன்று. ஆயிரங்கோடி சூரிய வெளிச்சத்தின் வீச்சில் விழிகள்
திறக்கத் தடுமாறிய திசைமுகனை மீண்டும் மீண்டும் பேரொளிப்
பிழம்புகள் கடந்து சென்றன.
கண்கள் கூசிப்போய் திக்குத் தெரியாமல் தட்டுத் தடுமாறிய நான்முகன்
அருகே நகைப்பொலி கேட்டது. நின்று சிரித்து மாளாமல் தரையிலமர்ந்து .விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்
நந்திதேவர்.
“நந்திதேவரே! சிரித்தது போதும். என்னை எரித்ததுபோன்ற
வீச்சுடன் எழுசுடர்கள் கடந்தனவே!ஆதித்தனுக்கும் அம்புலிக்கும்
இல்லாத வெளிச்சமும் வெப்பமும் வாய்க்கப்பட்ட அந்த சுடர்கள்
சிவப்பரம்பொருளின் சந்நிதியிலிருந்துதான் புறப்பட்டிருக்க
வேண்டும்.கீதநாதனின் டமருகத்திலிருந்து தாவிக்கிளம்பிய
ஏழு ஸவரங்களா? அடிபணிந்த அன்பர்களுக்கு அத்தன்
அள்ளித் தந்த வரங்களா?”பரபரப்பாக் கேட்ட பிரம்மாவைக்
கையமர்த்தினார் நந்திதேவர்.
“அவர்கள் சப்தரிஷிகள்.ஆதியோகியாம் சிவப்பரம்பொருளிடம்
அணுக்கமாய் இருந்து அருளுபதேசம் பெற்று ஆளுக்கொரு
திசையாய் செல்கிறார்கள். ஒருவர் மட்டும் அவர்களை
வழியனுப்பிவிட்டு மீள்வார். கடைசியாய்க் கடந்து போனவர்தான்
அகத்தியமுனி.ஆனால் நான்முகரே! அருட்பெருஞ்சோதியாகிய
அரனருகே இருந்து அவர்களும் ஜோதிமயமாகி விட்டார்கள்.
கண்மூடியிருந்த நிலையிலேயே உங்கள் நான்கு முகங்களும்
வெளிச்சம் தாங்காமல் கூசியதை இப்போது நினைத்தாலும்
சிரிப்பு வருகிறது.”தன்னுடைய மத்தளத்தின் ஒசையைக் காட்டிலும்
ஓங்கிச் சிரித்தார் நந்தியை ஓரப்பார்வை பார்த்த வண்ணம்
சிவபெருமான் சந்நிதி நோக்கி வேகவேகமாய் சென்றார்
பிரம்மா.
எதிர்பார்ப்பின் எரிமலையாய் எதிர்தோன்றிய நான்முகனைப்
பரிவாய் வரவேற்றார் பெருமான்.”அய்யனே! தங்களிடம் உபதேசம்
பெறும் தகுதியை நானின்னும் பெறவில்லையா?சப்த ரிஷிகள்
பெற்ற பக்குவம் எனக்கின்னும் வரவில்லையா?”பணிந்து கேட்டவரைப்
பார்த்துப் புன்னகைத்தார் ஈசன்.
“நான்முகா! நடந்ததெல்லாம் நீயறிவாயே! எந்த உபதேசமும் பெறாமல்
பல்லாண்டுகள் என்முன்னே அமர்ந்திருந்து,அதன்பின்னர் உபதேசம் பெற்று உலகை மாற்றும் உத்வேகத்துடன் சண்டமாருதங்களாய்
சப்த ரிஷிகள் புறப்பட்டு விட்டார்கள். நானும் நீண்ட காலமாய்
இங்கேயே இருந்துவிட்டேன். உலகங்கள் ஏழிலும் உலவப்போக வேண்டும். உனக்கு உபதேசம் தர நேரமில்லையே!”
அயனோ அசரவில்லை. “பெருமானே! தங்களை திசையெங்கும்
சுமந்துசெல்லும் நந்தியாகவேனும் நான்வரக்கூடாதா?”என்று
கெஞ்ச, அதிரச் சிரித்த ஆலால கண்டன் ‘அப்படியே ஆகட்டும்”
என்றார்.வணங்கிப் பணிந்து வாயில்நோக்கி நான்முகன் நகர வியந்து
நின்றாள் உமா. “சுவாமி! நந்திகேசுவரர் வேலையை நான்முகனுக்குக்
கொடுத்து விட்டீர்களா?”
“இல்லை தேவி! நன்றாகத் தெரிந்து கொள். எனக்குப் பக்கபலமாய்
நிற்பவர்கள் பஞ்ச நந்திகள்.உன்னையும் என்னையும் பூவுலகிற்கு
சுமந்து செல்லும் பணியை இந்திரன் வேண்டி நந்தி வடிவெடுத்தான்.
அவன் போக நந்தி.ஒவ்வோர் உயிருமே நந்தியின் அம்சமென்பதை
உனர்த்தும் விதமாக பிரதோஷத் திருநாளில் என் ஆலயக் கொடிமரங்கள்
அருகே நிற்பது ஆன்மநந்தி.
திரிபுரங்கள் எரிக்கக் கிளம்பிய போது திருமால் என் வாகனமாய் வந்தார்.
மைத்துனக் கேண்மையால் மனம்விரும்பி வந்தவர் மால்விடையாய்
விளங்குகிறார்.ஊழி முடிவில் உயிர்களெல்லாம் என்னில் அடங்கிய
பின்னும் உடனிருக்கும் இடபமாகிய நந்திகேசன் தருமநந்தி.உபதேசம்
பெறும் விருப்பத்துடன் என்னை சுமக்க சித்தமாய் இருக்கும்
நபீஜனாகிய நான்முகன் பிரம்ம நந்தி” என்றார் பெருமான்.
பிரம்ம நந்தியின் பணிவிடை துவங்கியது.நாழிகைப்பொழுதுபோல்
நாட்கள் நகர்ந்தன.பிரம்மனுக்கு பெருமான் உபதேசிக்கும் நாள்தான்
கனியவில்லை.சரியான நேரம்பார்த்து சக்திலீலை துவங்கியது.
“எல்லாம் சரிதான்! உங்களை குருமூர்த்தியாய் வணங்க வந்துள்ள
பிரம்மா திரிமூர்த்திகளில் ஒருவரல்லவா!அவருக்கு உபதேசம் செய்ய
இன்னும் காலம் தாழ்த்தலாமா?” பரிந்துரை செய்தாள் பார்வதி.
“பக்குவம் வரும்வரை பொறுத்திருப்பேன் நான். பரிவு காட்டி அவசரப்
படுத்துவாய்நீ!” செல்லச் சலிப்பு சங்கரனுக்கு.
“நாயகி ஆணைக்கு மறுப்பேது! நான்முகனை வரச்சொல்!” நந்திகேசனை
ஏவினார் நம்பீசன்.வந்து நின்ற நான்முகனின் கரங்களில் கைநிறைய
எதையோ அள்ளித்தந்த கங்காதரன்,”சதுர்முகா! இவை வில்வ விதைகள்.
எந்தத் தலத்தில் இவை விதைத்தபின் ஒரு முகூர்த்தத்துக்குள் முளை
விடுகின்றனவோ அந்தத் தலத்தில் யாம் உமக்கு உபதேசிப்போம்”.
விடை கொடுத்தனுப்பினார் விடையவன்.
ஒவ்வொரு தலத்திலும் விதையூன்றிப் பார்த்தான் வாணிகாதலன்.
முகூர்த்தப் பொழுதுகள் பறந்தனவேயன்றி முளைவிடும் அறிகுறி
ஏதும் தென்படவில்லை.அதற்காக அவன் மனம் தளரவுமில்லை.
எப்படியும் தன்விருப்பம் நிறைவேறும் எனும் எண்ணத்தோடு
தலங்கள் கடந்துவந்த நான்முகனின் பாதங்கள் திருக்கடவூர்
எல்லையைத் தொட்டன.
“மந்திரோபதேசம் கேட்ட பிரம்மாவின் கைகளில் மகாவில்வ
விதைகள் கொடுத்த மர்மமென்னவோ?”மந்திரச் சிரிப்புடன்
கேட்டாள் மகாசக்தி.கொன்றைவார் சடையான் இதழ்களிலோ
குமிழ்சிரிப்பு.”என்னை நோக்கித் தவம் செய்யும் போதெல்லாம்
வில்வம் கொண்டு அருச்சிக்கும் வழக்கத்தை வழங்கியவளே
நீதானே! வித்தகி!உலகிலுள்ள தாவரங்களிலேயே எனக்கு
மிகவும் உகப்பானது வில்வம்.
வில்வ இலையிலுள்ள மூன்று முகங்கள்,என் மூன்று கண்களையும்
என் கரத்திலுள்ள திரிசூலத்தையும், மூன்று காலங்களையும்
உணர்த்துபவை. மும்மூர்த்திகளையும் வில்வத்தின் வடிவில்
தரிசிக்கலாம்.நந்திகேசனுக்கு ஒரேயொரு வில்வத்தை அர்ப்பணித்து
வணங்குபவர்களின் பாவங்கள் நீங்கும்.ஆயிரம் யானைகளை
தானம் செய்த புண்ணியமும், நூறு வேள்விகள் நிகழ்த்துவதில் கிடைக்கும்
பலாபலனும் கோடி கன்னியர்களுக்குத் திருமணம் செய்வித்த நற்பலனும்
வில்வார்ச்சனையால் விளையும்.வில்வம் திருமகளின் அம்சம்
இந்தவொரு பச்சிலையை எனக்கு சமர்ப்பிப்பது யாவருக்கும் எளிது.
அதனால் விளையும் பலாபலன்கள் இமயமலையினும் பெரிது.
சிவார்ச்சனைக்கு உகந்ததால் மஹா பத்ரமாகவும்,அருநோய்களைத்
தணிப்பதால் மஹா மூலிகையாகவும் விளங்குவது வில்வம்.
சடாக்ஷரி! சதுர்முகனின் விருப்பம் முளைவிடும் நாள் இன்று.
திருக்கடவூரில் அவன் விதைக்கும் வில்வ விதைகள் ஒரு
முகூர்த்தத்துக்குள் முளைக்கும்.எனவே இந்தத் தலத்துக்கு வில்வவனம்
என்னும் பெயரும் நிலைக்கும்.திருக்கடவூருக்கு வில்வமே தலவிருட்சம்”.
பெருமானின் மலரிதழ்கள் அருளும் மந்திரச் சொற்களுக்கு நிகரான மகிமை வாய்ந்த மகாவில்வ விதைகள் ஒரு முகூர்த்தத்துக்குள்
முளைத்தன.பிரபஞ்சப் பேரியக்கம் என்னும் பேருண்மையின் சூட்சுமத்தைதிருக்கடவூரில் பிரம்மாவுக்கு போதித்தன இரண்டுபெரும் அருட்சுடர்கள்.