மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே
-திருமூலர்
மனக்கவலையின் உச்சத்திலிருந்த மிருகண்டு முனிவரின் உள்ளம்,
தன் பாட்டனாராகிய குச்சகரை நினைத்தேங்கியது.மிருகண்டு முனிவரின்
தந்தை மிருக கண்டூயர். அவருடைய தந்தைதான் குச்சகர்.
கடகம் எனப்படும் திருக்கடவூரில் வாழ்ந்தவர் அவர்.தன் மகனுக்கு குச்சகர் இட்டபெயரென்னவோ கௌச்சிகர்தான்.பிரம்மச்சர்யப் பருவத்தில் பிரம்மம் தேடிப் பெருந்தவம் மேற்கொண்டார் கௌச்சிகர்.ஊண் மறந்து துயில் மறந்து அசைவிலாத் தவத்திலிருந்தவரைக் கல்லென்று நினைத்து
ஆவினங்கள் உரசிப் போயின.அத்தகைய கற்களுக்கு ஆதீண்டு குற்றியென்று பெயர்.
தன்னைக் கடந்த தவத்திலாழ்ந்த குச்சிகருக்கு, திருமால்
தரிசனம் தந்தார்.”இனி உன் பெயர் மிருக கண்டூயன்.சிவபெருமானின்
பூரண அருளுக்கு நீ பாத்திரமாவாய்” என்றருளினார்.
அடுத்த படிநிலையாகிய இல்லறத்தில் தன் மகனை ஈடுபடுத்த நினைத்த
குச்சகர்,சோழதேசத்தில் அநாமயம் எனும் வனத்திடையே ஆசிரமம் அமைத்து அருந்தவ வாழ்க்கை நடத்திய உசத்திய முனிவரின் உத்தமப் புதல்வியாம் விருத்தையை மகனுக்கு மணம்பேசினார். குச்சகர்
அநாமயத்தில் தங்கியிருந்த காலத்தில் விருத்தை தோழியருடன்
நீராடித் திரும்பும்போது மதயானை துரத்த, புதர் மூடிய கிணற்றில்
விழுந்திறந்தாள் விருத்தை.
குச்சகர் கலங்கவில்லை.”இவளின் மேனியைத் தயிலத்திலிட்டு வையுங்கள்.
இவளின் உயிரைத் தவம் செய்து மீட்பேன்” என்று தனியிடம் புகுந்தார்.
எமனை நினைந்து தவம் புரிந்த குச்சகர் மருமகளின் உயிரை வரமாகப்
பெற்றார்.தைலமாடிய மயிலொன்று துயில்நீங்கி எழுவதுபோல் எழுந்தாள் விருத்தை.மிருககண்டூயருடன் விருத்தை நடத்திய இல்லறத்தில் பிறந்தவர் மிருகண்டு.
தவபலமும் அருள்பலமும் இயல்பாக வாய்க்கப்பெற்ற மிருகண்டு
முனிவரின் மனைவி மருத்துவவதி.இவர் முற்கல முனிவர் பெற்ற
பொற்கலம்.அந்தப் பொற்கலத்தில் பிள்ளைக் கனியமுதம் வேண்டிப்
பெருந்தவம் புரிந்தார் மிருகண்டு முனிவர்.காசித்திருத்தலம் அடைந்து,கங்கைக் கரையோரம் மணிகர்ணிகையில் ஓராண்டு காலம் தவம்புரிந்தமிருகண்டு முன்னர் சிவபெருமான் தோன்றினார்.
“மிருகண்டு! உனக்குப் பிறக்கப் போவதோ ஒருமகன்தான்.அவன் திருமகனாய் விளங்க வேண்டுமா, வெறும்மகனாய் இருக்க வேண்டுமாஎன்னும் முடிவு உன்கையில் இருக்கிறது.வாணாளை வீணாளாய்க் கழிக்கும் பயனிலாப் பிறவியாய், பூமிக்கொரு பாரமாய், பக்தியில்லாத பாவியாய்,நூறாண்டு வாழும் மகன் வேண்டுமா?சிவபக்தியில் சிறந்தவனாய்,சீலங்கள் நிறைந்தவனாய்,பதினாறாண்டுகளே வாழ்கிற மகன் வேண்டுமா?”
மறுவிநாடியே பதில்சொன்னார் மிருகண்டு முனிவர்.
“பரமனே! உன் பனிமலர்ப் பாதங்களில் பத்திமை பூண்டு பதினாறாண்டுகளே வாழ்கிற பிளை போதும். மண்டிக் கிடக்கும் முட்புதரை விட, மலர்ந்து மணம்வீசி உன் மேனியில் விழுகிற
மருக்கொழுந்து போதும்.நெருடி வருத்தும் நெருஞ்சியை விட
மலர்ந்து மறைகிற குறிஞ்சி போதும்”.
கேட்ட வரமருளினார் கண்ணுதற் கடவுள். பயன் மிக்கதொரு பிறவியைத்தருவிக்க அன்று உதவிய திடசித்தம் இன்று தடுமாறியது மிருகண்டு முனிவருக்கு. சிவசிந்தனையும் ,மூத்தோர் வந்தனையும்உயிரியல்பாய்க் கொண்ட் உத்தமச் செல்வன் மார்க்கண்டேயனுக்குபதினாறாம் அகவை நெருங்கவிருந்த தருணமது.மனதுக்குள் மருகினர் மிருகண்டுவும் மருத்துவவதியும்.
பெற்றோரை உற்று கவனித்து வந்த மார்க்கண்டேயனுக்கோ
உள்ளே ஏதோ உறுத்தியது.த்ன்னை நேரே கண்டால் மகிழ்வதும்
தனியிடத்தில் அழுவதும் அதிகரித்துக் கொண்டே வருகிறதே!
தந்தையிடம் திரும்பத் திரும்பக் கேட்டபோது தயங்கித் தயங்கி
உண்மையைச் சொன்னார் மிருகண்டு முனிவர்.மார்க்கண்டேயர்
முகத்தில் முறுவல் மலர்ந்தது.
“தந்தையே! உங்கள் பாட்டனார் குச்சக முனிவர் செய்த தவம்,
மரணமடைந்த உங்கள் அன்னையின் உயிரை மீட்கவில்லையா?
பரமன் அருளால் மரணத்தை வெல்வது நம் பரம்பரைப் பழக்கம்.
கவலை வேண்டாம்.இன்று தொட்டு, நூற்றெட்டு சிவாலயங்களை
வழிபட்டு சிவப்பரம்பொருளின் அருள்பெற்று தங்களிடம் திரும்புவேன்”.மகனின் மனவுறுதியில் மகேசனே பேசுவதாய் உணர்ந்தார் மிருகண்டுமுனிவர் மகனுக்கு விடைகொடுத்தனர் பெற்றோர்.
காசியிலிருந்து புறப்பட்ட மார்க்கண்டேயர் ஒவ்வொரு தலமாய்
ஒப்புயர்வற்ற வழிபாடு நிகழ்த்தி,சிவசிந்தனையிலும் சிவதரிசனத்திலும்சித்தம் குளிர்ந்து வந்து கொண்டிருந்தார்.அன்று மஹாசிவராத்திரி.
தன்னுடைய சங்கல்பத்தில் மார்க்கண்டேயர் வந்து சேர்ந்த
நூற்றியெட்டாவது திருத்தலம்,திருக்கடவூர்.
முக்கண் முதல்வனுக்கு மூன்றாம் சாம பூசையினை மனமுருகிச் செய்து கொண்டிருந்த மார்க்கண்டேயரின் செவிகளில் விழுந்தது குளம்படிச் சத்தம்.எந்நேரமும் சிவத்தியானத்தில் இருக்கும் மார்க்கண்டேயரைப் பலமுறை அணுக முயன்று தோற்ற
எமதூதர்கள்மீது சினம் கொண்ட கூற்றுவன்,சூலமும் பாசமும் பற்றி
எருமைக்கடா மீதேறி எரிதழலனைய கண்களில்சினம்கனல சிவசந்நிதிநோக்கி வந்து கொண்டிருந்தான்.
“அரும்பரம்பொருளே! அபயம்!அபயம்! ஆலமுண்டவனே! அபயம்!அபயம்! கருவருவித்தாய்! அபயம்! அபயம்!கருணை வடிவே! அபயம்! அபயம்!!”என்று மார்க்கண்டேயர் இலிங்க மூர்த்தத்தை இறுக்கி அணைக்க,வெஞ்சினம் மிகுந்த அந்தகன் வீசிய பாசக்கயிறு, அந்தணனின் மேனிமீதுமட்டுமின்றி அந்தமிலாப் பரம்பொருளின்இலிங்கத் திருமேனி மீதும் விழுந்தது.
துடித்தெழுந்த மார்க்கண்டேயர் துணுக்குற்று நிற்க, இலிங்கத்
திருமேனியிலிருந்து வெடித்தெழுந்தார் பெருமான்.திரிநயன்ங்களும்
சடாபாரமும், மஹாசிவராத்திரி வழிபாடுகலை ஏற்றருளும்
சர்வாலங்காரங்களோடும் எண்கரங்களோடும் வெளிப்பட்ட
வெகுண்ட கோலம் கண்டு வெருண்டான் கூற்றுவன்.
வலது புறத்தில் இருந்த நான்கு திருக்கரங்களில் இருந்த திரிசூலம்,கோடரி,வஜ்ரம்,கத்தி ஆகிய ஆயுதங்களில்
அனல் பறந்தது.இடது புறத்தில் மேல் திருக்கரமோ, “இங்கேயே வந்துவிட்டாயா?” என்னும் வியப்பினை வெளிப்படுத்தும்விதமாய் மேல்நோக்கி உயர்ந்திருக்க,பாசம்,கேடயம் ஆகியவற்றை
மேலும் இரண்டு திருக்கரங்கள் பற்றியிருக்க, மற்றொரு திருக்கரமோ
எமனை எச்சரிக்கும் விதமாய் சுட்டுவிரலை மட்டும் நீட்டியிருக்க
இடது திருப்பாதத்தால் எமனின் மார்பில் உதைத்தார் பெருமான்.
கீழே விழுந்தஎமனின் கைகளிலிருந்த பாசமும் சூலமும் தரையில் நழுவிற்று. பேரச்சத்துடன் கைகளைக் கூப்பிய எமனின் மார்பில் பதிந்தது திரிசூலம். மரணதேவன் மாண்டுபோக,
“காலசம்ஹாரா!காலாந்தகா! காலாரி!” என்று திசைகளெங்கும்
பரவசக் குரல்கள் பொங்கின.
செழுங்கொம்பைப் பற்றிப் படர்ந்த நீலக்கொடி கொண்டற்காற்றில்
சலசலத்தது.”மரணதேவனுக்கு மரணமா? மஹேஸ்வரா! இதென்ன நாடகம்?”தோடுடைய திருச்செவியில் அந்த வார்த்தைகள் விழுந்தாலும்,”மிருககண்டூ”என்று கொவ்வைச் செவ்வாய் முணுமுணுத்தது.
“தாரிணி!பசுக்கள் உரசும் கல் என்ற பெயர்தான் மானிட யாக்கைக்கு எத்தனைபொருத்தம்!உயிரகிய பசு உரசிச்செல்லும் கல்லே உடல். உடலை நிலையென்று நினைப்பதும் அதற்காகத் தவிப்பதும் அறியாமை.
மரணம் வேண்டாமென்று மார்க்கண்டேயன் இறைஞ்சியது
சவமாகக்கூடாதென்னும் அச்சத்தினால் அல்ல. சிவமாக வேண்டுமென்ற சங்கல்பத்தின் ஊச்சத்தினால்.கல்பகாலம் உள்ளளவும் சிரஞ்சீவியாய் சூக்குமவடிவில் மார்க்கண்டேயன் இருப்பான்.இனி அவனுக்கு என்றும் பதினாறு.
சிவபூசையில் ஈடுபடுபவர்கள் மரணம்,பிறவி என்னும் மாயசுழற்சியிலிருந்துவிடுபடுவார்கள். வினைவயப்பட்டு,மறுபிறப்புக்குரிய உயிர்களை மட்டுமேகூற்றுவனால் கொண்டு செல்ல இயலும்.
தியானேஷ்வரி! எமசங்காரம் என்பது உள்நிலையில் அமுதம் நிரம்பிய ஒவ்வோர் உயிரிலும் நடப்பது. இடப்பாதம் சந்திரகலை. வலப்பாதம் சூரியகலை.
சந்திரக் கலையையில் ஓடும் நாடியைக் கும்பகம் செய்யும் வாசிக்கணக்குகூற்றினை வெல்லவல்லது. குருமுகமாய் இதனை வழுவறக் கற்றோர்மரணத்தை வெல்வார்!
ஜனனி! எமன் இறந்ததால் பூபாரம் கூடும் !நிலமகளின் வருத்தம் தீர்க்கஎமனுக்கு விமோசனம் அருளப்படும்.காலசம்ஹாரமூர்த்தி சங்கரித்தகோலத்திலேயே விமோசனமும் அருளியதால் கோரவடிவின்றி காருண்யத் திருவுருவாய் காட்சிகிடைக்கும். பக்கத்தில் பாலாம்பிகையாய்நீ நின்றருள்வாய்.
மார்க்கண்டேயன் சொல்லிவழிபட்ட மஹாமிருத்யுஞ்சய மந்திரம் இத்தலத்தில் எந்திரமாய்
பிரதிட்டை செய்யப்படும்.அமுதமே கடமாய் அமைந்ததாலும்
எமபயம் அகன்றதாலும் ஆயுள்பலத்திற்கு ஆகச்சிறந்த தலமாய்
திருக்கடவூர் திகழும்.ஆண்டுகளின் சுழற்சிக் கணக்கே 60.மனிதர்கள்
60ஆவது வயதை அடைகையில் தாயின் கருவிலிருந்த காலத்தில்
அனுபவித்த துயரங்கள் வரக்கூடும்.அதிலிருந்து விடுபட இத்தலத்தில்உக்ரரத சாந்தி செய்வது பெரும் விசேஷமாகப் பரவும்.
60 முடிந்து 61ஆம் அகவையை எட்டும்போது சஷ்டியப்த பூர்த்தி, மனிதப்பிறவிக்கு விதிக்கப்பட்டநூற்றியிருபது ஆண்டுகளில் சரிபாதி என்பதால் இத்தலத்தில் அதனை
மேற்கொள்பவர்கள் ஆயுள்பலம் கூடப் பெறுவர்.
காலாந்தரி! தன்னையுணரும் தெய்வீகப் பயணத்திற்காக
இந்தப் பிறவியை ஒரு கருவியென்று கண்டுணர்பவர்களின்
ஆன்ம விருத்திக்கே இந்த ஆயுள் ஹோமங்கள். இகவாழ்வின்
கடமைகளை இனிது நிறைவேற்றி மறுமையின் மகோன்னதம்
உணர முற்படுபவர்களுக்கு காலக் கணக்கை நீக்கும் இத்தலத்தின்
அதிர்வுகள் வழிகாட்டும்.
மரணமாகிய மிருத்யுவை வெல்ல அருள்வது மிருத்யுஞ்சய மூர்த்தம்.
அந்த வெற்றியில் விளைவதே அமிர்தம்.காலாகிய காற்றின்
துணைகொண்டு கூற்றுவனை வெல்லத் தூண்டுவதே
காலசம்ஹாரம்”.
சுழல்கொண்டு வீசிய காற்றில் கலகலத்துச் சிரித்தன கொம்பும் கொடியும்.