வேழம் உரிப்பர் மழுவாளர்
வேள்வி அழிப்பர் சிரமறுப்பர்
ஆழி அளிப்பர் அரிதனக்கன்று
ஆனஞ்சு உகப்பர் அறமுரைப்பர்
ஏழைத் தலைவர் கடவூரில்
இறைவர் சிறுமான் மறுக்கையர்
பேழைச் சடையர் மயானத்துப்
பெரிய பெருமான் அடிகளே!
-சுந்தரர்

காலனைக் காலால் காய்ந்த காலசம்ஹாரமூர்த்தியின் திருவுருவை
தரிசித்ததும் மார்க்கண்டேயருக்கு மகத்தான உண்மையொன்று
மனதில் உதித்தது.காசிநகரில் கங்கைக்கரையில் மணிகர்ணிகேசுவரராக
விளங்கும் மகேசனின் அம்சமே காலசம்ஹாரர் என்பதைக் கண்டுகொண்டார். தான் திருக்கடவூர் வந்த நாள்முதலாய்
கங்கையிடம் வைத்த சங்கல்பமும் ,அந்த சங்கல்பத்துக்கு மதிப்பளித்து திருக்கடவூர் திருமயானக் கிணற்றில் அவள் பொங்கி வருவதும்,அந்த கங்கா தீர்த்தம் கொண்டு அமுதகடேசருக்கு அகங்குளிர தான் அபிஷேகம்செய்வதும் தற்செயலல்ல என்பதும் தெரிந்தது.

தனக்கு விமோசனம் தரப்பட்ட பின் எமதர்மன் ஏற்படுத்திய காலதீர்த்தம்
இருப்பினும் பெருமானுக்குரிய பிரத்யேக மஞ்சனத் தீர்த்தமாய் விளங்குவதில் கங்கைக்கு சொல்லொணாப் பெருமிதம்.திருமயானத்
திருக்கோவிலில் இருந்து திருக்கடவூருக்கு தினந்தினம் மேஎகொள்ளும்
சிறுபயணமும் கங்கையின் கணக்கில் ஒரு புனித யாத்திரைதான்.
தேவதேவனின் திருமேனி தீண்ட தீர்த்தமே மேற்கொள்ளும்
யாத்திரையல்லவா!!

தேகத்தை கங்கை தீண்டியதால் பாகத்தில் இருந்த மங்கைக்குத்
தோன்றிய ஊடல் தணிக்க, உரையாடல் தொடங்கினார் பெருமான்.
“தேவி! திருக்கடவூர் திருமயானம் பிரம்ம சம்ஹாரத்தலம் என்று
சொல்லப்படுவதன் தாத்பர்யம் அறிவாய்தானே!” தனை ஆளுடைய நாயகனின் திருவாய்மொழி கேட்பதில் திகட்டாத ஆர்வம் தேவிக்கு.
ஊடல் மறந்து உற்சாகமானாள்.

“பிரம்மரூபிணி! படைப்புக்குரிய கடவுள் பிரம்மா. படைக்கப்பட்ட ஒவ்வோர் உயிருக்கும் தன்னுடைய இருப்பு குறித்த
பிரக்ஞை ஏற்படுகிறது. அந்தப் பிரக்ஞையின் ஒருபகுதி விழிப்புணர்வாய்
வளர்ந்து த்ன்னையறியும் வேட்கையாய் மலர்கிறது .அதேபிரக்ஞையின்
இன்னொரு பகுதிதான் அகங்காரமாய் வளர்கிறது. விளைநிலத்தில்
களையும் பயிரும் கலந்தே வளர்வதைப்போல்தான் இதுவும்.அகங்காரம்
அழைக்கப்படும்போது விழிப்புணர்வு மட்டுமே வளரும். அந்த விழிப்புணர்வு முற்றி முதிரும் நிலையே ஞானோதயம்.

சின்மயீ! அந்த விழிப்புணர்வு மலரத் துணையாக அகந்தையை
அழிப்பதன் குறியீடே பிரம்ம சம்ஹாரம்.அது நிகழ்ந்த தலம்
திருக்கடவூர் திருமயானம்.ஒவ்வொரு கல்பத்திலும் உருவாகும் பிரம்மன்,அந்தக் கல்பத்திலேயே அழிந்து மறு கல்பத்தில்
புத்துயிர் பெறுகிறான். அழியும் விதம் அறியும் பொழுதுதான்
உயிர்ப்புத் தத்துவம் மட்டுமின்றி படைக்கும் ஆற்றலும் பரிமளிக்கும்.

தாரா! திருமயானம் என்பது சுடுகாட்டைக் குறிப்பதல்ல.”மய” என்றால்
உருவாக்கம்.”அயனம்” என்றால் தொடர்ந்து நடைபெறுவது.
படைப்பின் சூட்சுமமே இடையறா இயக்கம்தான்.காடுகள் திருந்தி
நிலமாவதும், நல்லுணர்வுகள் நிரம்பிய இடங்களில் சலனங்கள்
குடியேறுவதுமாக பல்வித மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்வதே
படைப்பின் சீரான இயக்கத்திற்கு சாட்சி. அத்தகைய தொடர் இயக்கங்களையே படைத்தல், காத்தல் ,அழித்தல், மறைத்தல்,அருளல்
ஆகிய ஐந்தொழில்கள் உணர்த்துகின்றன.

அவ்வகையில் ஐந்து சிவத்தல மயானங்கல் தனித்துவம் வாய்ந்தவை.
கச்சி மயானம்,கடவூர் மயானம்,வீழிமயானம்,காழிமயானம்,நாலூர் மயானம் ஆகியவையே அவை. இத்தகைய தலங்களில் ருத்ராம்சம் ஓங்கியிருக்கும்.

மஹதி! இயக்கம் ஓய்ந்த உடல்களை எரிக்கும் மயானங்கள் வேறு.
இடையறாமல் இயங்கும் ஐந்தொழில்களைக் குறிக்கும் திருமயானங்கள்
வேறு. இந்த இருவகை மயானங்களுமே எனக்கு உகப்பானவை.”

அற்புதனின் பாகம்பிரியாளாய் இருப்பதில் அகமகிழும் அதிகர்விதாவின்
பூர்ணிமைக் கண்களில் புரண்டெழுந்தன புன்னகை மின்னல்கள்.

“ஈசனே! பிறப்பை விதிக்கும் பிரம்மனின் சங்காரம் திருக்கடவூர்
திருமயானத்தில். இறப்பை நிகழ்த்தும் எமனின் சங்காரம் திருக்கடவூரில்.
இந்த இரண்டு தலங்களின் தரிசனம் பிறப்பு,இறப்பு ஆகிய தொடர்
சுழல்களிலிருந்து உயிர்களை விடுவிக்கட்டும்.அதுசரி, மறுபிறவியை
நிர்ணயிப்பதில் நல்வினை தீவினை இரண்டுக்கும் இடமுண்டுதானே ?”
சுந்தரியின் கேள்வியில் சுடர்விடும் சூட்சுமம் உணர்ந்து மெல்லச் சிரித்தார்
மகாதேவன்.

“ஞானகாம்யா!!இருவினைகளும் நீங்கி ஒளிது லங்கும் உயிர்தானே
முக்திக்கு முழுமையான தகுதி கொண்டது.திருக்கடவூரில் அகத்தியர்
பூசித்த பாபகரேஸ்வரரும் புலத்தியர் பூசித்த புண்ணியகரேஸ்வரரும்
பாவங்களின் இரும்புத்தளை,புண்ணியங்களின் பொன்தளை ஆகியவற்றிலிருந்து உயிர்களை விடுவிப்பார்கள்.

கைவல்யா! உயிர்களின் வாழ்வை இயக்கும் நவக்கிரகங்களின்
ஆளுமை மிருத்யுஞ்சயத் தலத்தில் செல்லாது. எனவே திருக்கடவூரில்
நவக்கிரக சந்நிதி இராது.வாசுகி வந்து வணங்கியதால் திருக்கடவூர் குண்டலினி ஆற்றலைஎளிதில் எழுப்பும் தன்மை கொண்டதாய்த் திகழும் ரரகுவுக்கும் கேதுவுக்கும் நவக்கிரகங்களின் வரிசையில் இடம்கொடுத்த
துர்க்கை வணங்கியதால் இத்தலம் நாகதோஷங்களை
நீக்கும்.

பிரகல்பா!எனது வீரச்செயல்கள் நிகழ்ந்த தலங்களுக்கு வீரட்டம் என்று பெயர்.காலனைக் காலால் காய்ந்த திருக்கடவூர்,திரிபுரம் எரித்த திருவதிகை,அந்தகாசுரனை வதம்செய்த திருக்கோயிலூர்,காமனை எரித்த கொருக்கை,நான்முகனின் சிரம்கொய்த கண்டியூர்,தட்சனின் யாகமழித்த பரசலூர்,சலந்தரனை வதம்செய்த விற்குடி,ஆபிசார வேள்வியிலெழுந்த யானையை வதம்செய்த வழுவூர் ஆகியவை அட்ட வீரட்டத் தலங்கள்.

நிரஞ்சனா!! என்னுடைய வடிவங்கள் ஐந்து.உருவநிலை,அருவநிலை,
அருவுருவ நிலை,உயிர்களுடன் ஒன்றிய நிலை, தனித்திருக்கும்
சர்வபூத நிலை.இந்த வடிவங்கள் வருங்காலங்களில் ஆயிரத்தெட்டு திருமூர்த்தங்களாக விரியும்.அதன்பின்னர் நூற்றெட்டு
வடிவங்களாக சுருங்கும்.காலப்போக்கில் அறுபத்துநான்கு வடிவங்களாய்,
அஷ்டாஷ்ட விக்ரகங்களாய் வகுத்து வழிபடுவர்.திருக்கடவூரில்
அமிர்தலிங்கம் அருவுருவ நிலை.காலசம்ஹாரமூர்த்தம் உருவ நிலை.

நித்யா! காலம் நிலையானது. காலத்தின் எல்லைகள் எம்முடைய
நிர்ணயங்களுக்கு உட்பட்டவை. காலகாலன் என்பது எமனை சங்கரித்ததால் மட்டுமேஏற்பட்ட பெயரல்ல .காலத்தால்
அறியவொண்ணா நிலையிலிருப்பதால் காலகாலன் என்று பெயர்.

பூர்வஜா! காலசம்ஹாரன் என்ற பெயரும் எமனை சங்கரித்ததால்
மட்டுமே ஏற்பட்ட பெயரல்ல.ஒவ்வொரு புதிய கணமும் கடந்து போகும்
கணத்தின் அழிவில் பிறக்கும்.நகரும் காலம் நின்றுவிடாமல் ஒவ்வொரு
கணத்தையும் சங்கரித்து காலக்கணக்கைத் துல்லியமாய் நகர்த்துவதாலும்
எம்முடைய திருநாமம் காலசம்ஹாரன்!”

சொல்லிக் கொண்டே நிமிர்ந்த சிவப்பரம்பொருளின் திருநயனங்களில் துள்ளின சந்தோஷ ரேகைகள்.”சித்தரூபிணி! சிவம் நினைப்பதையே
தானும் நினைப்பவர்கள் சித்தர்கள். ஒவ்வொரு சித்தனின் போக்கும் சிவனின் போக்கு.எந்தவொரு தலமும் வல்லதிர்வுகள் கொண்டு
வரப்பிரசாதத்துவம் பெற சித்தர்களின் இருப்பும் ஒரு காரணம்.
திருக்கடவூர்த் தலத்துக்குரிய சித்தன் அதோ வந்து கொண்டிருக்கிறான்
பார்!”

கண்ணுதற் கடவுளின்கமலவிரல் நீண்ட திசை நோக்கித் திரும்பினாள்
திரிபுரசுந்தரி.அங்கே எழுந்து நடக்கும் தவமாய்,தீவிரத்தின் வடிவாய்
சடாமுடி பறக்க திருநீறு மணக்க கால்முளைத்த காற்றாய் வந்து கொண்டிருந்த
புண்ணிய உருபார்த்துப் புன்னகையுடன் சொன்னாள்…
“அடடா! காலாங்கி சித்தனா”!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *