” இளங்கதிர் ஞாயிறு எள்ளுந் தோற்றத்து
விளங்கொளி மேனி விரிசடையாட்டி
பொன்திகழ் நெடுவரை உச்சித் தோன்றித்
தென்திசை பெயர்ந்தவித் தீவத் தெய்வதம்
சாகைச் சம்பு தன்கீழ் நின்று
மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு
வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற
சம்பு என்பாள்-சம்பாபதியினள்”
– சீத்தலைச் சாத்தனார் (மணிமேகலை)
சம்பாபதித் தெய்வத்தின் திருமுன்னர் கண்கள்மூடி கைகூப்பி நின்றிருந்தான் அந்த இளைஞன்.இருபத்தோரு வயதிருக்கும்.
முகப்பொலிவு செல்வப் பின்புலத்தையும் முகத்தெளிவு கலையுள்ளத்தையும் காட்டின. காவிரிப்பூம்பட்டினத்தின் தலைசிறந்த
தரைவழி வணிகர் மாசாத்துவானின் மகன் அவன். கலைகளில் தேர்ச்சியும் தெய்வ பக்தியும் மிக்க இளைஞன். கோவலன் என்பது
அவனுடைய பெயர்.
பெரும் செல்வந்தரும் கடல்வணிகத் தலைவருமான மாநாய்கன்
மகள் கண்ணகியின் கணவன் அவன். ஐந்தாண்டுகளுக்கு முன்னர்
அவர்கள் திருமணம் நடைபெற்ற செவ்வியும் செழுமையும் இன்றும்
புகார் நகரில் பேசப்படுகிறது.வழிவழி வந்த பெருமை மட்டுமின்றி
கோவலனின் உயர்ந்த பண்புநலன்கள் அவனுக்கு நிறைவான
புகழைப் பெற்றுத் தந்தன,
தன்னுடைய குலதெய்வமான மணிமேகலை போலவே புகாரின் காவல்
தெய்வமான சம்பாபதித் தெய்வத்திடம் கரைகாணா பக்தி கோவலனுக்கு
உண்டு.அகத்திய முனிவனின் கமண்டலத்திலிருந்து கவிழ்ந்த காவிரி
புகார் நகர் புகுந்தபோது காவிரியை வரவேற்ற தெய்வம் சம்பாபதி.
உடன் வந்த அகத்திய முனிவன்,காவிரிப்பெண்ணிடம்,”சம்பாபதித்
தெய்வம் உன்னால் வணங்கப்பட வேண்டியவள்”என்று அறிவுறுத்த
காவிரியும் வணங்கி நின்றாள்.
செக்கச் சிவந்த திருமேனியும் , விரிந்த செஞ்சடையும் கொண்டு
மேருவிலிருந்து தோன்றி நாவலந்தீவின் காவல்தெய்வமாய்
நாவல்மரக் கிளையில் எழுந்தருளிய சம்பாபதி “சம்பு”என்ற பெயர்
கொண்ட சிவப்பரம்பொருளின் அம்சம் பொருந்தியவள். காவிரியின்
பணிவில் அகமகிழ்ந்து,தன்னுடைய பெயரால் சம்பாபதிப் பட்டினம்
என்றிருந்த நகருக்கு காவிரிப்பூம்பட்டினம் என்ற பெயரும் வழங்கிவர
அருளியவள்.
இத்தகு சிறப்புமிக்க சம்பாபதியை இருவேறு கோட்டங்களில் வணங்கிய
பின்னரே புதிய பணிகளைத் தொடங்குவது கோவலனின் வழக்கம்.
காதங்கள் நான்கும் கடுங்குரல் கேட்க முழங்கும் ஆண்பூதம்
ஒன்றும், பெண்பூதம் ஒன்றும் வாயிலில் காவலுக்கிருக்கும்
சம்பாபதியின் கோட்டம் விட்டு வெளியேறி அவள் குடிகொண்டிருக்கும்
இன்னொரு கோட்டத்தில் வழிபாடு நிகழ்த்தப் புறப்பட்டான் கோவலன்.
அந்தக் கோட்டம் திருக்கடவூரில் இருந்தது. பூம்புகாரில் இருக்கும்
கோட்டத்திற்கு இணையாக உருவாக்கப்பட்டிருந்தது.திருக்கடவூர்
நோக்கி நடக்கத் தொடங்கிய கோவலனின் மனக்கண்களில்
முந்தைய நாள் கண்ட நடன அரங்கேற்றம் மீண்டும் மீண்டும்
அரங்கேறிக் கொண்டிருந்தது. திருக்கடவூர் சம்பாபதி கோட்டத்திற்கு
செல்லும்போது பலமுறை அச்சிறுமியைக் கண்டிருக்கிறான்.
கோட்டத்திற்கு அருகேதான் அவளுடைய வீடு.
பென்னம்பெரிய கண்களில் மிரட்சி பொங்க அயலவரைக் கண்டால்
ஓடி ஒளிந்து கொள்ளும் அவளுடைய பெயர் மாதவி என்பதும்,
ஆடல்கலையிலும் இசைக்கலையிலும் அவள் அதிசயிக்கத்தக்க
திறன் கொண்டவள் என்பதும் கோவலனுக்கு இப்போதுதான்
தெரியும்.இசையில் நுணுக்கமான திறமைகள் கொண்ட அந்த
இளைஞனின் இதயம் மாதவியின் கலைஞானத்தை அரங்கேற்றத்தின்
தொடக்கத்திலேயே அடையாளம் கண்டிருந்தது.
பல்வகை நினைவுகளோடும் சென்று கொண்டிருந்த கோவலனைத்
தடுத்து நிறுத்தியது தளிரிளங் குரலொன்று.
“மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்கு!
மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்கு!”
திரும்பிப் பார்த்த கோவலனின் கண்களில் மின்னல் சுடரேறி
மிளிர்ந்தது. முதுகு சற்றே வளர்ந்த இளம்பெண் ஒருத்தியின் கைகளில்
மின்னிக் கொண்டிருந்தது மாதவியின் தலைக்கோல் மாலை. அந்த
மாலையை விலை கொடுத்து வாங்குபவர்கள் மாதவிக்குக் கண்வனாகக்
கூடும்.
கோவலனுக்கு சொல்லில் அடங்காத ஆனந்தம்,அங்கே பல
இளைஞர்கள் அந்தப் பெண்ணிடம் சென்று மாலையின் விலை
கேட்பதும் பெருமூச்சோடு பின்வாங்குவதுமாக இருந்தார்கள்.
நெருங்கிச் சென்ற கோவலன் விலைகேட்டான்.
‘ஆயிரத்தெண் பொற்கழஞ்சு”
அந்தப் பெண் சொல்லி வாய்மூடும் முன்னர் அவள்
கைகளில் விழுந்தது பொன்முடிப்பு. தலைக்கோல் மாலையைக்
கைப்பற்றி அவளுடன் மாதவிமனை நோக்கி நடந்த கோவலனின்
முதுகை மொய்த்தன பன்னூறு பொறாமைக் கண்கள்.
திருமகளின் அருள்பெற்ற பெருஞ்செல்வன் தலைவாசல்
ஏறி வரக்கண்டு ஓடோடி வரவேற்றாள் சித்திராபதி.
மாதவிக்கு மணாளன் அறிமுகம் செய்யப்பட்டான்.
இருவரையும் தனித்திருக்க விட்டு மற்றவர்கள் மெல்ல அகன்றனர்.
மாதவியின் வீட்டு முற்றத்தில் மலர்ந்த முல்லையையும்
உடனடியாய் கைக்குக் கிடைத்த மலர்களையும் தூவி,
அழகிய மஞ்சத்தை அவசரமாய் அலங்கரித்திருந்தனர்.
சிலாவட்டக் கல்லில் தேய்த்த சந்தனம் பொற்கிண்ணத்தில்
வைக்கப்பட்டிருந்தது.
மருண்டு போய் நின்றிருந்த மாதவியை மெல்ல அமர்த்தி
தாமரை வதனம் தொட்டு நிமிர்த்தி,அரங்கேற்றம் குறித்த
புகழுரைகளோடு பேச்சைத் தொடங்கினான் கோவலன்.
பிறைநிலவொன்று கண்ணெதிரே முழுநிலவானதுபோல் மாதவியின்
வடிவழகுத் திருமுகம் வண்ணம் பொங்கிச் சிவந்து பொலிந்தது.
கலையறியாச் செல்வன் ஒருவன் கைகளில் சீர்கெடுவோமோ என்று
வருந்திக் கிடந்த மாதவிக்கு விலையறியாச் செல்வம் வாயிலேறி
வந்ததில் விம்மிதம் எழுந்தது.பண்ணழகு குறித்தும் பரதத்தின் நுட்பம்
குறித்தும் கோவலன் பேசப்பேச அவள் மனதில் கரைபுரண்டெழுந்தது
காதல் வெள்ளம்.தான்கற்ற கலைத்திறனை
நுட்பமுணர்ந்து பாராட்டிய நாயகனை,தான் கற்றறிந்திராத காதல்
வித்தையில் திணறச் செய்தாள் மாதவி. கோவலன் தேன்தடாகத்தில்
விழுந்த வெண்டெனச் சுழன்றான்.தான் இதுவரையில்
தருகிற இடத்தில் இருந்த நிலைமாறி,கலவியும் புலவியும்
பெறுகிற இடத்திற்கு வந்த புதிய அனுபவத்தில் தன்வசமிழந்த கோவலன் விடுதலறியா விருப்பினன் ஆனான்.
அந்திப் பொழுது மறைந்து உந்திஎழுந்த பிறைநிலவு பால்மழை
பொழியத் தொடங்கியிருந்தது.திருக்கடவூர் சம்பாபதிக் கோட்டத்தில்
விளக்கிட்டு வெளியே வந்தபெண் எதிர்ப்பட்ட தோழியிடம் சொன்னாள்,”செய்தி தெரியுமா?
மாசாத்துவான் செட்டி மகன் கோவலன், நம் மாதவியின் தலைக்கோல்
மாலையை வாங்கி மணம்புரிந்து கொண்டாராம்!! ”
“அடி ஆத்தி! பார்த்தாலே முருகப்பெருமான்போல் இருப்பார். மாதவிக்கு
சரியான பொருத்தம்தான்.ஆனால் கண்ணகிதான் பாவம்.எப்படியோ,
மாதவியின் அருமை தெரிந்த பிள்ளையாண்டானாய் வந்தவரை
நல்லதுதான்”.பேசிகொண்டே பெண்கள் நடந்தனர்.நகை வெளிச்சம்
சிந்தியது சம்பாபதி கோட்டத்து நெய்விளக்கு.