“அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்
குரவர் பணியன்றியும் குலப்பிறப்பாட்டியோடு
இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் பிழையோய் போற்றி”
-சிலப்பதிகாரம்
(மாதவி கோவலனுக்கு வரைந்த இரண்டாம் கடிதம்)
தாதிப்பெண்கள் சூழ வயந்தமாலை திருக்கடவூர் வீதிகளில் வீடுவீடாய்
ஏறி இறங்கிக் கொண்டிருந்தாள்.பண்ணியங்களும் இனிப்புகளும்
விநியோகிக்கப்பட்டன.”உங்கள் மாதவிக்குப் பெண்குழந்தை
பிறந்திருக்கிறது”. பெருமையும் மகிழ்ச்சியும் பொங்கப் பொங்க
ஒவ்வொருவருக்கும் தனித்தனியே தகவல் தந்தாள் வயந்தமாலை.
ஒவ்வொருவரும் வெளிப்படுத்திய மகிழ்ச்சியும் வாழ்த்திய விதமும்
நெகிழ்வைத் தந்தது.”குழந்தைக்குப் பெயர் சூட்டிவிட்டார்களா அத்தை”
கால்களைக் கட்டிக் கொண்டு கேட்ட பொற்கொடியின் கன்னம் வருடிச்
சொன்னாள் வயந்தமாலை.”ஓ!சூட்டியாயிற்றே! மணிமேகலை என்பது
பாப்பாவின் பெயர்.மாதவியின் கணவருடைய குலதெய்வத்தின்
பெயராம் அது!”
“அக்கா! மாதவியிடம் சொல்லுங்கள்.இந்திரவிழாவிற்கு வரும்பொழுது
மாதவியையும் மணிமேகலையையும் காண வருகிறோம்” என்றனர்
பெண்கள்.”கட்டாயம் வாருங்கள்.ஆனால் இந்திர விழாவன்று மாதவியின்
நாட்டியம் இருக்கிறது.எனவே சில நாட்கள் முன்னதாகவே வாருங்கள்”.
தாம்பூலம் பெற்றுக்கொண்டு புறப்பட்டாள் வயந்தமாலை.
இந்திரவிழா தொடங்கிய நாளில்பொன்கொண்டு வேய்ந்தது போல் பூம்புகார்பொலிந்தது.வைகறைப் பொழுதில் வெய்யில் வரும்முன்பே அனைவரும்பூம்புகாரில் கூடிவிட்டனர். மருவூர்ப்பாக்கத்தின் அகன்ற வீதிகளின் இருபுறங்களிலும் நெடிதுயர்ந்த மாடமாளிகைகள் கலையழகோடு
மிளிர்ந்தன. மேற்கூரையில்லாத நிலா முற்றங்களும் காற்று
நுழைவதற்கென மானின் கண்கள்போல் வடிவமைக்கப்பட்டிருந்த
சாளரங்களும் கொண்ட அந்த மாளிகைகள்,மிக விசாலமானவை.
யவனர்கள் குடியிருப்பும் பல்வகைக் கலைஞர்களின் பணியகங்களும்
மருவூர்ப்பாக்கத்தில்தான் அமைந்திருந்தன.
அரசவீதியும் பெருவணிகர் மாளிகைகளும்,கொண்ட பட்டினப்பாக்கம்
பரபரப்பாயிருந்தது.நாழிகைக்கணக்கு சொல்வோர்,கூத்தர்,விறலியர்,
மக்களை வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்யும் நகைவேழம்பர் என்று
பலரும் தத்தம் திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்க,
யானைப்பாகரும்,குதிரை வீரர்களும் தேர்ப்படையினரும்
காலாட்படையினரும் கோட்டையை சூழ்ந்திருந்தனர்.
புகார் நகரைக் காவல் காக்க இந்திரனால் நியமிக்கப்பட்டிருந்த
காவல் பூதத்திற்கு, அரசனின் நலனுக்காக பொதுமக்கள் பலிகள்
படைத்துக் கொண்டிருந்தனர்.பூ பலி, நறும்புகை பலி,நெய்யுருண்டை,
நிணச்சோறு,கள் போன்ற பல்வகை பலிகளைத் தந்து கொண்டிருந்த
மக்கள் மத்தியில் வீரக் கழலொலிக்க உயர்த்திப் பிடித்த வாளோடும்
செக்கச் சிவந்த கண்களோடும் விரைந்து வந்து பூதத்தை வலம் வந்து
மையத்தில் நின்றனர் வீரர்கள். அவர்கள் மடியில் கவண் கிடந்தது.
பெற்றோர் பலரும் குழந்தைகளின் முகங்களைத் தங்கள் மடியில் புதைத்து அவர்கள் திமிரத் திமிர அழுத்தி நின்றனர்.”வேந்தனுக்கு வந்த தீமைகள்
கழிக” என்று வீர முழக்கமிட்டு தங்கள் தலைகளை வெட்டி பலிபீடத்தில்
வைக்க ,முரசுகள் அதிர்ந்தன.வெள்ளமாய்ப் பெருகிய குருதியில்
கால்கள் படாமல் வீதிகளின் ஓரம் நோகி விரைந்தனர் மக்கள்.
பூம்புகாருக்குள் வருபவர்களின் பெயர் மற்றும் குடிமை விபரங்களைப்
பதியும் வெள்ளிடை மன்றமும்,ஊனமுற்றவர்க்ளுக்கு குணமளிக்கும்
இலஞ்சி மன்றமும்,தவறு செய்பவர்களைப் புடைத்துண்ணும்
பூதம் நிற்கும் சதுக்க பூதமும்,நீதி எங்கேனும் தப்பினால்
கண்ணீர் வடிக்கும் பாவை வதியும் பாவை மன்றமும் அலங்கரிக்கப்பட்டிருக்க, அங்கும் பல்வகை பலிகளைப் படைத்து வழிபாடு நிகழ்த்தினர்.
பொன்னும் மணியும் இழைக்கப்பட்ட நெடுந்தூண்களைக் கொண்ட
மாளிகைகளின் வாயில்கள்தோறும்,பொற்குடங்களில் முளைப்பாலிகைகள்
வைக்கப்பட்டிருந்தன. எல்லோரும் வந்து திரண்டு நிற்க அமைச்சர்கள்,
புரோகிதர்,சேனாபதியர்,தூதுவர்,சாரணர் என்னும் ஐம்பெருங்குழுவினரும்,
கருமகாரர்,கனகச்சுற்றம்,கடைகாப்பாளர்,நகரமாந்தர்,படைத்தலைவர்,
யானைவீரர்,இவுளிமறவர் என்னும் எண்பேராயத்தினரும் அகநகர்ப்
பகுதிக்கு வந்தனர்.அங்கிருந்த இந்திரன் படிமத்தை வழிபட்டு அரசர்
நலனுக்காக ஆயிரத்தெட்டு பொற்குடங்களில் கொணரப்பட்ட
நறுமணம் கமழும் காவிரி நீரால் இந்திரன் படிமத்தை நீராட்டினர்.
அங்கிருந்த பல்வகைக் கோயில்களிலும் ஒரேநேரத்தில் விழாக்கள்
நடந்தன.
அக்கம்பக்கத்திலிருந்து வந்திருந்த அத்தனை பேருக்கும் தங்கும் வசதி
தந்து தாய்மடியாய் தாங்கிக் கொண்டது பூம்புகார்.இரவு பகலாய் சுற்றித்
திரிந்து விருந்துண்டு விழாக்கண்டு நிறைவு நாளன்று சாரிசாரியாய்
ஊர்திரும்பியது கூட்டம். இந்திரவிழாவின் நிறைவு நாளாகிய சித்ரா பவுர்ணமியில் முக்கிய அம்சமாய் அமைந்து
விட்டது மாதவியின் நாட்டியம். அதன் அருமை பேசித் தீரவில்லை
திருக்கடவூர்க்காரர்களுக்கு.மறுநாள் காலை ஊர்திரும்பும் வழிநெடுக மாதவி புராணம்
படித்துக் கொண்டே வந்தனர் மாதர்களும் முதியவர்களும்.
“மாதொருபாகன் வடிவில் மாதவி கொடுகட்டி கூத்துக்கு வந்து
நின்றாளல்லவா! கையெடுத்து வணங்கி கன்னத்தில் போட்டுக்
கொள்ளாதவர்களே இல்லை” என்றாள் ஒருத்தி.
“அதைவிடு தங்கம்மை.கொடுகட்டி கூத்தில் உடம்பின் இடதுபாகம்
நடிக்கும்போது வலதுபாகம் அசைவற்றிருந்ததும்,வலதுபாகம்
அசையும்போது இடதுபாகம் அசையாதிருந்ததும் பார்த்தாயா?
ஆடல்கலையில் இப்படியும் ஓர் அதிசயமா!” என்றாள் மற்றொருத்தி.
பதினோருவகை தெய்வநாட்டியங்களை சற்றும் சோராமல் மாதவி
நிகழ்த்தியதில் காவிரிப்பூம்பட்டினமே கலகலத்துவிட்டது.அதுசரி!
எல்லோரும் இவ்வளவு சொல்கிறோம். சித்திராபதியின் உயிர்த்தோழி
முத்தழகி வாய்திறக்கவேயில்லையே! நம்மோடு பேசினால் முத்துதிர்ந்து
விடுமோ என்னவோ!” கேலிப்ப்பேச்சு கேட்டு நிமிர்ந்த முத்தழகியின்
கண்கள் கலங்கியிருந்தன.
“மாதவி ஆடல் பற்றி நான்வேறு சொல்ல வேண்டுமா? என் கவலை
உங்களுக்குப் புரியவில்லை. மாதவியின் ஆடலை மன்றமே ரசித்து
ஆரவாரித்த போது அவளுடைய கணவன் முகத்தை கவனித்தேன்.
மற்றவர்கள் ரசிக்க ரசிக்க அவர் முகம் வாடியிருந்தது. அதன்பின்
மாலையில் மாதவியும் கோவலனும் கடற்கரைக்கு யாழோடு
செல்வதைப் பார்த்தேன். தொலைவிலிருந்து கேட்டபோது
அவர்கள் வரிப்பாடல்கள் பாடுவதை உணர முடிந்தது.
ஆனால் சிறிது நேரத்திலேயே தன் பணியாளர்கள் சூழ கோவலன்
தனியாகக் கிளம்பிப் போனார். பின்ன்ர் மாதவி தன் தோழியருடன்
தனியாய் இல்லம் திரும்பினாள். நேற்று இரவு முழுவதும்
கோவலன் வீடு வரவில்லையாம். வயந்தமாலையிடம் மாதவி தந்தனுப்பிய கடிதத்தையும் வாங்க மறுத்துவிட்டாரம். தன் கணவன் மாலையில் வராவிட்டாலும்காலையில் வருவார் என்று மதவி தோழிகளிடம் சொன்னாளாம்.எனக்கென்னவோ நம்பிக்கையில்லை”.
முத்தழகி சொன்னதில் அத்தனை பேருக்கும் அதிர்ச்சி.. கணப்பொழுதில் கலகலப்பு மறைந்து கவலைததும்பும் மௌனம் கவ்விக் கொண்டது.”மாதவிசேற்றில் மலர்ந்த செந்தாமரை. தன்னைத் தவிர இன்னொருவனின் நிழலைக்கூட நினைக்க மாட்டாள் என்பது கோவலனுக்கு இன்னுமா
புரியவில்லை?” ஆற்ற மாட்டாமல் ஒருத்தி புலம்பத் தொடங்க
தள்ளாடி வந்து கொண்டிருந்த முதியவள் ஒருத்தி அதட்டினாள்.
“இதென்னடி இது உலகத்தில்க் இல்லாத அதிசயமா? கணவன்
மனைவிக்குள் சின்னச்சின்னப் பூசல்கள் வராமல் இருக்குமா?
எல்லாம் சரியாகிவிடும். விரைவாக நடங்கள் வெய்யில் வரும்முன்
ஊர்போய்ச் சேர்வோம்”.சற்று நேரத்தில் பழைய கலகலப்பும் சிரிப்பும் தொற்றிக் கொள்ள எல்லோரும்திருக்கடவூர் வந்து சேர்ந்தனர்.
ஆனால் முத்தழகி அஞ்சியபடியே ஆனது. பெற்றவரும் உற்றவரும்
அறியா வண்ணம் இரவுப்பொழுதில் கண்ணகியுடன் கோவலன்
ஊரைவிட்டே சென்றுவிட்ட செய்தி திருக்கடவூர்க்காரர்களின்
தலையில் இடியாய் இறங்கியது.அதன்பின் எத்தனையோ தகவல்கள்
வாய்மொழியாய் வந்தடைய உண்மை எதுவென உணரமுடியாமல்
உள்ளம் மயங்கினர்.
சமண சமயப் பெண்துறவி ஒருவருடன் கண்ணகியும் கோவலனும்
பாண்டிநாட்டை நோக்கிச் செல்வதைப் பார்த்ததாக சிலர் கூறினர்.
சில நாட்களிலேயே பாண்டிநாடு போகும் பாதையில்
கோசிகன் கோவலனை சந்தித்ததாகவும் மாதவி கொடுத்த
மடலைத்தர கோவலன் பிரித்துப் படித்துவிட்டு அதே மடலை
தன் பெற்றோருக்கு அனுப்பிவைத்ததாகவும் புகார்நகரில்
பேச்சு நிலவுவதாய் முத்தழகியின் கணவன் வந்து சொன்னான்.
திருக்கடவூரில் யார் சந்தித்துக் கொன்டாலும் இறுதியில் பேச்சு
மாதவியின் வாழ்க்கை பற்றிய கவலைக்குறியில் வந்து முடிந்தது.
முற்பகல் பொழுதொன்றில் முத்தழகி வீட்டில் ஒலித்த அழுகைக்குரல்
கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர்.மதுரை சென்ற கோவலனைக்
கள்வனென்று கருதி பாண்டிய மன்னன் மரணதண்டனை விதித்ததாகவும்
தன் கணவன் குற்றமற்றவன் என்று கண்ணகி நிறுவியதும் பாண்டிய
மன்னன் நெடுஞ்செழியனும் அவன் மனைவி கோப்பெருந்தேவியும்
இறந்ததாகவும்,சினமடங்காத கண்ணகி இடது முலையைத் திருகி எறிந்து
கூடல் நகரை எரித்ததாகவும் முத்தழகியின் கணவன் சொல்லிக்
கொண்டிருந்தான்.
செய்தி கேட்ட மாதவி துறவு பூண்டுவிட்டதாக கேள்விப்பட்டதும், துயர் பங்கிட பூம்புகார் செல்ல நினைத்த திருக்கடவூர்க்காரர்கள் தங்கள்
எண்ணத்தை மாற்றிக் கொன்டார்கள். தங்கள் கண்முன் தங்கத் தளிராய்
வளர்ந்த மாதவியை துறவுக்கோலத்தில் காணும் துணிவு அவர்கள்
யாருக்கும் இல்லை.ஏற்பட்ட காயத்தின் வாய்ப்பட்ட வேல்போல
சிறிது காலம் கழித்து மணிமேகலையும் துறவுநெறி பூண்ட தகவல்
கிடைத்தது.
கன்முன்னே கலையரசியாய் வளர்ந்து, கற்பரசியாய் மலர்ந்து காலச்சூழலால்
அருளரசியாய்க் கனிந்த மண்ணின் மகள் மாதவியை கால்சதங்கை ஒலியை தன் நினைவுப்பதிவிலிருந்து கொஞ்ச காலம் ஒலிபரப்பிக் கொண்டேயிருந்தது திருக்கடவூர் காற்று.