பெரும்புலர்க் காலைமூழ்கி பித்தர்க்குப் பத்தராகி
அரும்பொடு மலர்கள் கொய்து ஆங்குநல் ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத்தூபம் விதியினால் இடவல்லார்க்கு
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே!
-திருநாவுக்கரசர்
சதுரமறைகள் அரண்செய்யச் சூழ்ந்ததுபோல் சதுர வடிவில் நான்கு பிரதான வீதிகளுடன் அமைந்திருந்தது திருக்கடவூர். திருக்கோவிலுக்கு நேரெதிரே சந்நிதித்தெரு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்குவதுபோல் தோற்றமளித்தது. திருக்கோவிலைச் சுற்றி உள்சதுரமாய் நான்கு வீதிகள். அவற்றுக்கு மடவிளாகங்கள் என்று பெயர்.
திருக்கோவிலுக்கு வலப்புறம் பிரியும் மட விளாகம் வடக்குத் தெருவில் சென்று சேர்ந்தது. வேள்விப் புகை காற்றில் கலக்க சாமகானம் எங்கும் ஒலித்தது. மாடங்கள் கொண்ட மனைகளில் எரி தழல் ஓம்பப்பட்டது. சிறு குழந்தைகளின் காற் சதங்கையொலியும் விடியல் வேளையின் அழகுக்கு மெருகூட்டின.
இவற்றினிடையே தனித்தெழுந்தது நறுமணப் புகை. நமசிவாயத்தையே நாசி வழி உணர்ந்ததைப் போன்ற நிறைவுடன் முகங்கள் மலர்ந்தன. கனிந்த முகமும் குளிர்ந்த பார்வையுமாய், “சிவசிவ சிவசிவ” என இதழ்கள் முணுமுணுக்க திருக்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்தார் கலயர். இரு கைகளாலும் தாங்கிக் கொண்டிருந்த கலயத்திலிருந்து குங்கிலியம் மணத்தது.
நாளொன்றுக்குப் பலமுறை மங்கலத் திருவுருவாம் மகேசனுக்கு குங்கிலியம் இடுகிற திருப்பணியை மிகுந்த விருப்பத்துடன் செய்யும் கலயர் பேதமிலா அன்புக்கும் பெற்றி மிக்க ஒழுக்கத்திற்கும் பெயர் பெற்றவர். கலயருக்கு கடவூரில் நிறைய நன்செய் நிலங்கள் உண்டு. பொன்னும் பொருளும் பெருகிய நிறைவாழ்வு அவருடையது.
கண்ணுதற் கடவுளுக்கு குங்கிலியம் இடுவதையே எண்ணத்தில் எப்போதும் இருத்திவந்த கலயரின் கனதனங்கள் கரைந்தன. கழனிகள் வற்றின. அத்தனையும் விற்க நேர்ந்தும் அத்தனுக்கு குங்கிலியம் சமர்ப்பிக்கும் திருத்தொண்டு வழுவாதவராய் கலயர் வாழ்ந்தார்.
அவர்தம் மனையரசி அறப்பண்புகளின் அருங்கலனாய் விளங்கியவர். அடிமைகளை விற்றும் கூடக் குங்கிலியம் இட்டு வந்த கணவரின் உறுதிபாட்டை மெச்சிக்கொண்டாலும் வந்து சூழ்ந்த வறுமை மத்தென விழுந்து மனதைக் கடைந்தது.
நாளுக்கிருவேளை நல்லுணவு கொள்ளும் நிலைப்பாட்டுக்கும் ஊறு நேர்ந்தது. பிள்ளைகள் பசித்திருப்பதைக் காணப்பெறாமல் தன் மாங்கல்யத்தைக் கணவர் கைகளில் தந்து நெல்வாங்கி வர வேண்டினார். நெல்வாங்கும் நினைவோடு புறப்பட்ட கலயருக்கெதிரே பொதி மூட்டையுடன் ஒரு வணிகன் வந்தான். பொங்கிவந்த நறுமணம், உள்ளே உள்ளது உயர்தரக் குங்கிலியம் என்பதை உணர்த்திற்று.
அன்றைய குங்கிலியத் திருத்தொண்டுக்கு குன்றி மணியளவு பொருளும் இல்லாமல் வருந்திய கலயருக்கு கண்ணெதிரே காணபெற்ற குங்கிலியமும் கையிலிருந்து மாங்கல்யமும் சொல்லில் அடங்காத உற்சாகத்தைத் தந்தன. மாங்கல்யத்திற்கு மாற்றாக மனம்நிறையும் அளவு குங்கிலியம் பெற்று, திருக்கோவில் நோக்கி விரைந்தார் கலயர்.
பகல்பொழுது மறைந்தது. பரமன் திருமிடற்றின் நிறம் போல் இருள் பரந்தது. இல்லத்தின் வறுமை குறித்த கவலையின்றி விடையேறும் வித்தகனின் விமலமலர்ப் பாதங்களில் மனமொன்றிக் கிடந்தார் கலயர்.
கலயரின் பெரும்பேரன்பையே பெருஞ்செல்வமாகப் பெற்ற பெருமான் தன் திருவுளக் குறிப்பை குபேரனுக்கு உணர்த்த, கலயரின் இல்லத்தை கனகக் கட்டிகளாலும் பல்வகை நன்மணிகளாலும் நிலைபேறுள்ள செல்வ வளங்களாலும் நிறைத்தான் குபேரன்.
தங்கள் வறுமையை இறைவன் நீக்கியதைக்கூட உணராமல் பசிமயக்கத்தில் கலயரின் மனைவியும் குழந்தைகளும் சுருண்டு கிடந்தனர். இறைப்பணிக்கென எதையும் வழங்கும் கணவனின் கைத்தொண்டுக்குத் துணையிருந்து வறுமைத் தவத்தில் இளைத்த கொடியாய் துவண்டு கிடந்த அபெண்ணரசியின் கனவில் பிறை சூடும் பெருமான் எழுந்தருளித் துயிலெழுப்பினார். சென்றடையாச் செல்வனாம் சிவப்பரம்பொருள் தந்த செழுஞ்செல்வம் கண்டு மலைத்துப்போய் நின்றார் கலயரின் மனைவி.
அதேநேரம் ஆலயத்தில் இறை லயிப்பில் கண்மூடிக் கிடந்த கலயரின் செவிகளில் விழுந்து அமிர்தகடேசரின் அமுதக்குரல். “கலயா! எத்தனை நேரம்தான் பசித்திருப்பாய்! இல்லம் சென்று உனக்கு விருப்பமான பால் சோறுண்டு இளைப்பாறு! போ!!” கண்விழித்தெழுந்த கலயர், இறைவனின் ஆணையை மீற அஞ்சி இல்லம் செல்ல, அங்கே எங்கும் நிறைந்திருந்தன் இருநிதிக் குவைகள்.
இறைவனின் ஈடற்ற கருணையை நினைந்து கண்கள் கசிந்த கலயருக்கு, “இனி ஆயுள் முழுவதும் குங்கிலியம் போடக் கவலையில்லை” என்னும் எண்ணமே பேரானந்தமாயிருந்தது. தனக்கு அருளப்பட்ட பெருநிதியத்தைத் துணையாகக் கொண்டு சிவனடியார்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வந்தார் கலயர். ஒவ்வொரு வேளையும் அறுசுவை உணவு சித்தம்செய்து அவர்தம் துணைவியார், “அய்யனே! அமுதுண்ண வாருங்கள்!” என்றழைக்கும் போதெல்லாம் கலயனாருக்குக் கண்கள் கலங்கும்.
“பெருமானே! நீ பிக்ஷôடனராய் பலிக்குழன்று பெற்ற நிதியை எனக்களிக்க நான் சுகமாய் இருந்துண்கிறேனே” என்று உள்நெகிழ்வார்.
ஒரு நாள் வழமைபோல் குங்கிலியம் சுமந்து சென்ற கலயரெதிரே வந்தார் அரச பிரதிநிதி. கலயரைக் கண்டு வணங்கிய அவரின் கண்களில் தெரிந்தன கவலையின் ரேகைகள். இருவரும் இணைந்து வழிபாடு செய்தபின் இல்லத்தில் உணவுண்ண அழைத்தார் கலயர்.
மெல்ல மெல்ல கலயரிடம் தன் மனக்கவலையைச் சொல்லத் தொடங்கினார் அரச பிரதிநிதி. “ஐயா! தெய்வ காரியம் ஒன்று அரசரின் மனதை வாட்டிக் கொண்டிருக்கிறது. திருப்பனந்தாளில் கோயில் கொண்டிருக்கும் செஞ்சடையப்பர் திருவடிகளில் மன்னருக்கு மிகவும் ஈடுபாடு. முன்னொரு காலத்தில் தாடகையென்னும் அசுரமகள் பூசித்து மாலையணிவிக்க முற்பட்டபோது, மேலாடை நழுவ நாணி நின்ற தாடகையின் மாலையினை திருமுடி சாய்த்துப் ப் பெருமான் ஏற்றார். அதன்பிறகு இலிங்கத் திருமேனி சாய்ந்த நிலையிலேயே இருப்பதில் மன்னருக்கு மன வருத்தம். நிமிர்ந்த நிலையில் பெருமானை வழிபடும் விருப்பத்தில் தன்னிடமுள்ள யானைப் படைகளையெல்லாம் பூட்டி நிமிர்த்த முயன்று வருகிறார். இலிங்கத் திருமேனி அங்குலம் கூட அசையவில்லை. ‘இறைவன் திருவுளம் எதுவோர்?’ என இரவு பகலாய் அரசர் வருந்துகிறார்.”
கேட்ட மாத்திரத்தில் கலயர் உருகினார். இறைவன் திருவடியில் மன்னன் மனம் வைத்துக்கிடக்கும் பத்திமைப் பண்பினை நேரில் காணும் விருப்பம் கொண்டார்.
சிவத்தலம் நோக்கிச் செல்லும்போது இடையிலுள்ள தலங்களையும் தரிசித்துச் செல்ல வேண்டுமென்னும் முறை வழுவாமல் திருக்கடவூரில் இருந்து புறப்பட்டு, திருவாக்கூர்த் தான்தோன்றிமடம், திருச்செம்பொன்பள்ளி, திருமயிலாடு துறை உள்ளிட்ட தலங்களில் வழிபாடு நிகழ்த்திக் கொண்டு திருப்பனந்தாள் சென்று சேர்ந்தார் குங்கிலியக் கலய நாயனார்.
திருப்பனந்தாள் திருக்கோவில் ஊரே திரண்டிருந்தது. பெருகி வந்த படைவீரர்களுக்கு மட்டுமின்றி திருப்பணியைப் பார்க்க வந்த பெருமக்களுக்கும் உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. பெருமானின் இலிங்கத் திருமேனியை நிமிர்த்த சேனைகள் அரும்பாடுபட்டுக் கொண்டிருந்தன. வலிய யானைகள், இலிங்கத்தை நிமிர்த்த முடியாமல் களைத்துப்போய் தரையில் சாய்வதைக் கண்ட கலய நாயனாருக்கு வருத்தம் மேலிட்டது. இந்த சேனைகளும் யானைகளும் அடைகிற களைப்பைத் தாமும் அடைய வேண்டுமென்று விரும்பினார்.
எவரும் எதிர்பாராத வண்ணம், யானைகளைப் பிணைத்த வடக்கயிற்றினை தன்னுடைய கழுத்தில் பூட்டிக் கொண்டார். பெருமானின் இலிங்கத் திருமேனிக்கு ஊறு நேராத வண்ணம், பூங்கச்சுகளும் பட்டும் பொதிக்கப்பட்டிருந்த கயிற்றின் மறுமுனையை இலிங்கத் திருமேனியில் பொருத்தி கழுத்தினால் நிமிர்த்த முயலலானார் கலயர். ஒருமுகப்படத் தொடங்கியதுமே பேரொலி எழுந்தது. அயர்ந்து விழுந்த வீரர்களும் யானைகளும் வாரிச்சுருட்டி விழித்தெழுந்து பார்க்கும்போதே நேர் கொண்டு நிமிர்ந்தது இலிங்கத் திருமேனி.
மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கி மற்ற திருபணிகள் நிறைவு பெறும்வரை திருப்பனந்தாளிலேயே தங்கியிருந்து பின்னர் திருக்கடவூர் திரும்பினார் கலயர். பரமனின் பெருங்கருணை வெள்ளத்தில் அமிழ்ந்து ஆனந்தராய் வாழ்ந்துவந்த நேரத்தில் கலயரின் செவிகளில் செந்தேனாய்ப் பாய்ந்ததொரு செய்தி.